திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் முருகனை வழிபட்டுச் செல்வர்.
இந்த நிலையில் இன்று தை அமாவாசை தினத்தினை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
தை அமாவாசை நாளின் சிறப்பாக காலசந்தி பூஜைக்கு பின்னர், சுவாமி அஸ்திர தேவர் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது.
அதனை தொடர்ந்து கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி வைபவமானது நடைபெற்றது. பின்னர் கடலிலிருந்து வருகை தந்த அஸ்திரதேவருக்கு பால், மஞ்சள், விபூதி, தேன், இளநீர் என 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதில் கோவிலுக்கு வரகை தந்துள்ள திரளான பக்தர்கள் பலரும் மெய்சிலிர்த்த படி பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


