திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன 18 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர திருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுவாமிகள் பற்றிய சுருக்கமான வரலாறு:
திருப்புகலூர் ஆதீன திருமடத்தில் 03.02.1962 ல் அவதரித்தார்கள்.
ஏனங்குடி உயர்நிலைப் பள்ளியில் படித்து, திருவாரூரில் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றார்கள்.மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பொது சட்டத்தில் இளங்கலைப்பட்டம்
(பி.ஜி.எல்) பட்டம் பெற்றார்கள்.
இப்போது நம்மிடையே விளங்கும் ஆதீனங்களில் தருமபுரம் ஆதீனகர்த்தர், குன்றகுடி அடிகளார் மற்றும் இவர்களும் பட்டதாரிகள்.
அதிலும் இவர்கள் சட்ட பட்டதாரி.
(B.A.,B.G.L.,)
திரு.மு.சுப்பையா தேசிகரிடம் தோத்திர நூல்களை பயின்றும் திரு.சொ.சிங்காரவேலனாரிடம் சாத்திர நூல்களைப் பாடங்கேட்டும் தோத்திர சாத்திரக் கல்வியில் அறிவு சிறக்கப் பெற்றவர்கள்.
சிவஸ்ரீ வைத்தியநாத சிவாச்சாரியார், சிவஸ்ரீ சந்திரசேகர சாஸ்திரிகள் இருவரிடமும் வேதம் ஆகமம் காவியம் பாடம் கேட்டு அவற்றிலும் அறிவு சிறக்க பெற்றவர்கள்.
முன்னைய சந்நிதானமும்
திருதந்தையாரும் ஆகிய 17 ஆவது குருமகாசந்நிதானம் முத்திப்பேறு பெற்ற பின்னர் 02.05.2006 இல் பதினெட்டாவது குருமகா சன்னிதானமாக ஞானபீடம் அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார்கள்.
ஆதீன பணிகள் அனைத்தையும் திறம்பட செவ்வனே நடத்தி வருகிறார்கள்.நாடெங்கும் நிகழும் பெருவிழாக்களிலும் மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் சைவ சமய திருவிழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
தகுதி உடையவர்களுக்கு தீட்சையும் செய்வித்தருளிகிறார்கள்.
ஆதீன திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தியும், பிரமோற்சவங்கள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறவும் வழி வகை செய்துள்ளார்கள்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற திருநெல்வேலி புஷ்கரத்தின் தலைவராக பொறுப்பேற்று விழாவினை
திறம்பட நடத்திகாட்டினார்கள்.
ஆதீனத்திற்கு சொந்தமான திருப்புகலூர் திருக்கோயில் பெரும் பொருட் செலவுடன் திருப்பணிகள் செய்து வருகிறார்கள்.
இப்படியாக சைவ பரிபாலனமும்,திருக்கோயில் பரிபாலனமும் செய்துவரும் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் ஜென்ம நட்சத்திர திருநாளில் குருவருளும் திருவருளும் பெற்றுய்ய வேண்டுகிறோம்.
சித்திசேர் வெண்ணெய் மெய்கண்ட தேசிகன் பத்திசேர் மரபினை பரித்த பண்டிதன் முத்திசேர் சிவபுர முதல்வன் எம்மையாள் சத்தியஞானிதன் சரணம் போற்றுவோம்.
குருவே சரணம்…
ஓம் சிவமயம் இறைபணி குழு, தமிழகம்.


