கோவில்பட்டி அருகே கண்மாய் ஓடையில் தேர்தல் ஆணைய படிவங்கள் வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் உமா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை – சங்கரன்கோவில் சாலையில் கரட்டுமலை அருகே உள்ள கண்மாய் பகுதியை ஒட்டியுள்ள ஓடையில் மூன்று சாக்குப்பைகளில் கத்தை கத்தையாக பேப்பர் கட்டுகள் வைக்கப்பட்டு அவைகள் தண்ணீரில் வீசப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் மிதந்து சென்ற அந்த படிவங்களைஎடுத்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவை தேர்தல் ஆணைய படிவம் 6- பி எனவும், இந்திய தேர்தல் ஆணையம் எனவும் வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்திற்காக ஆதார் எண் சான்றுரைத்தல் எனவும் அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் ஏராளமான படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இருந்தன. அதில் சில படிவங்களின் முகவரி, கோவில்பட்டி பகுதியாக இருந்தது. இதனை ஓடையில் வீசிச்சென்ற மர்ம நபர்கள் யார்? என உடனடியாக தெரியவில்லை.
சாக்கு பைகளில் அரசின் படிவங்களை கொண்டு வந்து ஓடையில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? என்று தெரியவில்லை. இதை அறிந்து ெசன்ற கழுகுமலை தலையாரி மணி நேற்று அந்த பகுதியில் உள்ள ஓடையில் இறங்கி தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்த படிவங்களை சேகரித்தார். பின்னர் அவற்றை கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து கோவில்பட்டி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் உமா கூறுகையில், கழுகுமலை அருகே உள்ள கரட்டுமலை கண்மாய் பகுதியில் உள்ள ஓடையில் வீசி சென்ற தேர்தல் ஆணைய படிவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சில பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கழுகுமலை பேரூராட்சி பகுதியில் உள்ள வாக்கு சாவடி முகவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அரசின் ஆவணங்களை அலட்சியமாக வீசியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியருக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன, என்றார்.


