திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக திரைப்பட துணை நடிகரும் இன்ஸ்டா பிரபலமுமான செல்வா மீது கோயில் நிர்வாகம் போலீஸில் புகார் அளித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் துணை நடிகராக நடித்தவர் செல்வா. இவர் இன்ஸ்டா பிரபலமாகவும் இருந்து வருகிறார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சில தினங்களுக்கு முன்னர் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவர் திருச்செந்தூருக்கு சென்று வந்த பயணத்தை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு வருவதும், அங்கு புகைப்படம் எடுப்பதுமாக இருந்தார். பின்னர் கோயிலுக்குள் சென்ற அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த வீடியோவில் மூலவரின் காட்சிகளும் வெளியாகியிருந்தது. மேலும் அவர் பக்தர்களுடன் செல்ஃபி எடுத்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாத நிலையில் இவர் எப்படி எடுத்துச் சென்றார், எல்லாவற்றுக்கும் மேல் மூலவரை எந்த கோயிலிலும் புகைப்படமோ வீடியோவோ எடுக்கக் கூடாத நிலையில் இவர் எப்படி எடுத்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த வீடியோ வைரலான நிலையில் செல்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். கோயிலின் புனிதத் தன்மையை காக்க பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.


