நாலாட்டின்புத்தூர் அருகே பைக்கிற்கு பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காமல் பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிவிட்டு தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் கழுகாசலபுரம் ஊருக்கு அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அங்கிருந்த ஊழியரிடம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ரூ.200-க்கு பெட்ரோல் போட வேண்டும் என கூறியுள்ளனர்.
அதன்படி அங்கிருந்த ஊழியர், அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட்டார். பின்னர் அதற்கான பணத்தை கொடுக்காமல் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து பங்க் ஊழியர், மேலாளர் லட்சுமணனிடம் நடந்த விவரத்தை கூறினார். உடனடியாக அவர், இதுபற்றி நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவில்பட்டி – கடலையூர் மெயின் ரோட்டில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசந்திரன் மகன் கனகராஜ் (19) என்பதும், மற்றொருவர் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 18 வயதுடையவர் என்பதும், இருவரும் கூலி தொழிலாளிகள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஊழியரை மிரட்டி தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


