தூத்துக்குடியில் 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (25.01.2025) 15-வது தேசிய வாக்காளர் தின விழா மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தெரிவித்ததாவது: வாக்களிக்கும் உரிமை எப்படி நமக்கு வந்தது என்பதை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். வாக்களிப்பு என்பது ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட செல்வ சீமான்களுக்கு மட்டுமே இருந்தது.
அந்த நடைமுறைகளை உடைத்து நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் 1949 நவம்பர் 26-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. 18வயதிற்கு வந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் அன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த அடிப்படை உரிமைகளை நீங்கள் உணர வேண்டும். வாக்களிக்கும் உரிமைகளை நீங்கள் விட்டுவிடக்கூடாது. வாக்களிப்பது நமது உரிமை நமது கடமை அதில் நாம் தவறக் கூடாது.
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமான அறிவித்து அதற்கான பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சி என்று எல்லாம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுருத்தியுள்ளது. ஏனென்றால் நாளை உலகை ஆளப்போவது இந்த மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் தான். இந்த நாட்டினுடைய எதிர்காலத்தில் அதை நிர்வாகிப்பவர்களும் நீங்கள் தான். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சொன்னது போல இந்த நாட்டினுடைய வல்லமை உள்ளவர்கள் நீங்கள், அதற்காகத்தான் மாணவச் செல்வங்களிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லி இந்த ஏற்பாட்டை நமது இந்திய தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே மகாகவி பாரதியார் பாடினார்கள். தேசிய வாக்காளர் தினத்தை அனைவரும் கொண்டாடுவோம் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைவரும் தேசிய வாக்காளர் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளிக், கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்கள் மற்றும் சுருக்கமுறை திருத்தத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் சான்றிதழ் மற்றும் ரொக்கத்தொகையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன், அலுவலக மேலாளர் (பொது) ரகு, துணை ஆட்சியர் பயிற்சி சத்யா, மாவட்ட பொது விளம்பர தூதர் தேவராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி விளம்பரதூதர் தனேஷ் கனகராஜ் மற்றும் மாணவ மாணவியர்கள் அரசு அலுவவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


