திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ராஜகோபுரத்தில் உள்ள மணி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடி மதிப்பிலான மெகா திட்ட வளாகப் பணிகள் அறநிலையத் துறை மற்றும் எச்.சி.எல் நிறுவனம் சார்பில், கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 7இல் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதன் ஒன்பதாவது நிலையில் உள்ள கட்டபொம்மன் காலத்து மணி புதுப்பிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது. அந்தக் காலத்தில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்து சண்முக விலாச மண்டப முகப்பில் உள்ள மணி அடிக்கப்பட்டதும், ராஜகோபுரத்தில் உள்ள மணி அடிக்கப்படும்.
அதன் தொடா்ச்சியாக பாஞ்சாலங்குறிச்சி வரை கட்டபொம்மன் அமைத்த மணி மண்டபங்களில் உள்ள மணிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்கும். இந்த மணிகள் வரிசையாக ஒலித்த பின் பாஞ்சாலங்குறிச்சியில் சுவாமி சண்முகர் மற்றும் வீரஜக்கதேவியை வணங்கிவிட்டு கட்டபொம்மன் மதிய உணவு சாப்பிடுவது வழக்கம் என்று வரலாறு கூறுகிறது.


