கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் பள்ளியில் “காசநோய் இல்லா தமிழ்நாடு” 100 நாள் பிரச்சார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் ச.செல்வகுமார் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார்கள். கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சி அதிகாரியுமான ஹரிஹர மஹாதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுதிமொழி வாசிக்க அதனை தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக அனைவரும் இந்நாளில் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு இணைந்து செய்திருந்தது.


