தொகுப்பூதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணா விரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சத்துணவு ஊழியர் காலிப்பணியிடங்கள் ரூ.3000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜெபராணி, மாவட்ட இணை செயலாளர் முத்துமாரி, மாவட்ட இணை செயலாளர் முருகன், வட்டார தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகைச் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் க.ஜீவா துவக்கவுரை ஆற்றினார்.
உண்ணா விரத போராட்டத்தில் மாநில பொருளாளர் பெ.சுப்புக்காளை கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் வைஜெயந்திமாலா, முன்னாள் பொது செயலாளர் லெட்சுமி நாராயணன் உட்பட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


