இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும்!
இது தான் தற்போது உடன்குடி , திருச்செந்தூர் பகுதிகளில் அரங்கேறி வருகிறது.
பொதுவாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது கருப்பட்டி ஆகும்.
அனைத்து பகுதிகளிலும் பனைத் தொழில் மூலம் பனங்கருப்பட்டி உற்பத்தி செய்யப்படும் போது உடன்குடி பகுதி கருப்பட்டிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு என்றால் அதற்கு காரணம் உடன்குடி வட்டார மண் தான்.
உடன்குடி பகுதிகளில் நிலத்தடியில் இருக்கும் தேரி மண் , அதற்கு கீழே உள்ள சுண்ணாம்பு பாறை , இந்த பகுதியில் நிலவும் சூடான வெப்பநிலை இதன் காரணமாக இந்த மண்ணில் இருக்கும் பனை மரத்தில் உற்பத்தி ஆகும் பதனீரில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து (கால்சியம் )அதிகமாக இருப்பதுடன் , சுக்ரோஸ் அளவு என்னும் இனிப்பின் அளவும் அதிகமாக உள்ளது.
மேலும் மற்ற பகுதிகளை விட இங்கு உற்பத்தி ஆகும் பதனீரின் அடர்த்தியும் அதிகம் .
இதனால் மற்ற பகுதி பனைமரத்தில் உதாரணமாக ஒரு நாளைக்கு 4 லீட்டர் பதனீர் கிடைக்கும் என்றால் உடன்குடி பகுதி பனைமரத்தின் மூலம் 3 முதல் 3.5 லீட்டர் பதனீர் தான் கிடைக்கும்.
மேலும் பதனீரில் இருந்து கருப்பட்டி தயாரிக்கும் முறையும் முழுக்க இயற்கை சார்ந்தது ஆகும். அதே போல தான் கருப்பட்டி உற்பத்தி முதல் பேக்கிங் வரை முழுக்க முழுக்க ஆர்கானிக் முறையில் தான் உடன்குடி வட்டார பனங்கருப் பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டிலே குலசேகரன் பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள பனை மரங்கள்தான் சின்னதிலே பாளை வந்து விடும் என்பதால் இந்த ரக பனை மரங்கள் மிக சிறப்பு வாய்ந்தது என வேளாண் துறையால் நிருபிக்க பட்டு உள்ளது.
இதனால் தான் உடன்குடி வட்டார கருப்பட்டிக்கு தனிச் சிறப்பு உள்ளது. அது மட்டும் அல்லாது கருப்பட்டி மார்க்கெட் விலையை நிலை நிர்ணயம் செய்வதும் உடன்குடி தான்.
இத்தகைய சிறப்பினால் தான் உடன்குடி பனங்கருப் பட்டிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் அரசால் கொடுக்கப்பட்டது. இத்தகைய பெருமை உடைய உடன்குடி கருப்பட்டியை தரும் உடன்குடி வட்டார பனை மரங்களின் இன்றைய அவலநிலையை தான் நீங்கள் கீழே உள்ள வீடியோவில் பார்ப்பது …..
உடன்குடி வட்டார பனைமரத்தின் சிறப்பையும் , மாண்பையும் நம்மை விட நன்கு தெரிந்து வைத்தது யார் என்றால் அது நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் தான்.
உலகத்தில் முதன் முதலாக குலசேகரன் பட்டினத்தில் பனைத் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்காக ரயில் விடப்பட்ட சிறப்பும் இங்கு தான் நடந்தது.
உடன்குடி வட்டார பனைத்தொழிலை காக்க பிரிட்டிஷ் காலத்திலேயே குலசேகரன்பட்டினத்தில் கே.பி.என் தொழிற்சாலை என்று பதனீர் மூலம் சீனிபா கு உற்பத்தி செய்யும் ஒரு சீனி ஆலை ஒன்று நிறுவப்பட்டது.
சென்னையை தலைமையிடமாக கொண்ட “கிழக்கு இந்திய காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலை மற்றும் பாரி அன் கோ “East India Distilleries and Sugar Factories Limited of Madras” எனும் ஆங்கிலேயே நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் இந்த சர்க்கரை ஆலையை துவங்கியது.
இந்த ஆலைக்கு சரக்கு போக்குவரத்துக்காகவும் ஆலைக்கு வேலையாட்கள் வந்து செல்வதற்கு எனவும் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது.
இதன் அடிப்படையில் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திசையன்விளைக்கும், குலசேகரன்பட்டிணத்திலிருந்து உடன்குடிக்கு தனி ரயில்பாதை என மொத்தம் 46.671 கி.மீ அதாவது 28 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர்.
இந்த பாதையில் ரயில்கள் 1914 முதல் 1940 வரை இயக்கப்ட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாகவும் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற பல்வேறு வேண்டதகாத சம்பங்கள் காரணமாகவும் குலசேகரன்பட்டினம் பனைத் தொழிலுக்கு பயன்படுத்திய ரயில் பின்பு நிறுத்தப்பட்டது.
இது தவிர்த்து குலசை பகுதியின் நிலத்தடி நீரை சேகரித்து கடல் நீர் உட்பு புகாமல் தடுக்கிறது.இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற குலசேகரன்பட்டினம் பனைமரங்கள் இன்று உடன்குடி அனல்மின் நிலைய பணியால் ஏற்படும் கடலரிப்பால் யாரும் கவனிக்காது அனாதை போல நெடுஞ்சாண் கிடையாய் வீழ்வதை பார்க்கும் போது அழுவதை தவிர வேறு வழியே இல்லாதது போல மனம் எண்ணுகிறது.
பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் என்பதை தாண்டி அரசு பனைமரத்தை வெட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. ஆனால் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியில் சுமார் 50,000 பனைமரங்கள் விரைவில் அழிக்கபட உள்ளது.
அதே போல அதிக சுவை மிகுந்த பதனீரை தரும் நம் குதிரை மொழி தேரிக் காட்டில் தற்போது அரசு கொண்டு வர போகும் தாதுமணல் நிறுவனம் அமையும் இடத்திலும் லட்சகணக்கான பனைமரங்கள் அழிவை எதிர் நோக்கி உள்ளது.
வளர்ச்சி திட்டம் என்ற பெயரால் கொண்டு வரப்பட்ட உடன்குடி அனல் மின் நிலைய பணிகளால் குலசேகரன் பட்டினம் பனைமரங்கள் நம் கண்முன்னே மடிவதை பார்க்கும் நாம் அனல்மின் நிலையம் ஆரம்பித்த பின்னர் அதன் மாசுக்களால் பனை மரங்கள் இன்று மடிவதை போல நாமும் வீழ்வது உறுதி என எண்ண தோணுகிறது.
பாண்டிய மன்னர்கள் காலத்தில் நடைபெற்ற பல்வேறு போர்களால் மதுரையில் இருந்து தப்பி வந்த நம் பகுதி மக்களுக்கு அன்று அடைக்கலம் கொடுத்து , உணவு கொடுத்தது நம் பகுதியின் தேரிக் காடுகளும் , பனை மரங்களும் தான். அன்று பனைமரங்கள் கொடுத்த அடைக்கலத்தில் உயிர் தப்பிய இன்றைய நம் பகுதி மக்கள் கூட்டம் அந்த நன்றிக்காகவது இன்று நம் மண்ணை காக்கும் பனைமரங்களை காக்க போராட முன் வேண்டும்.
சொந்த மண் மீது அக்கறை உள்ள அனைவரும் நம் மண்ணை காக்க வளர்ச்சி திட்டங்கள் என்று நம் பகுதி மக்களை சொந்த மண்ணை விட்டு விரட்ட நடக்கும் இத்தகைய வளர்ச்சி திட்ட வன்முறையை எதிர்த்து களம் காண முன் வர வேண்டும்.
நம் மண்ணை காக்க , மக்களை காக்க இதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.
அன்புடன் ,
வே.குணசீலன்
உடன்குடி
21/01/2025


