திருச்செந்தூர் தொழில் வழிச்சாலை பணி நடந்து முடியும் தருவாயில் உள்ளது. அதிகமான மக்கள் கூடும் செய்துங்கநல்லூர் பஸ் நிலையத்தில் புதிய பஸ்நிலையம் மற்றும் கழிவறைகள் கிடையாது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்த காரணத்தினால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் மக்கள் பெருக்கம் அதிகமாக உள்ள ஊராகும். இந்த ஊரில் அரசு அலுவலங்கள்,ரயில் நிலையம், பஸ் நிலையம், ஆன்மிக தலங்கள் பள்ளிகள் உள்பட மக்கள் வந்து செல்லும் அலுவலங்கள் அதிகமாக உள்ளன. நெல்லைக்-கும் & திருச்செந்தூருக்கும் இடையே முக்கிய நகரமாக விளங்கும் இந்த ஊரில் புதன் கிழமை தோறும் பழமையான சந்தை ஒன்று உள்ளது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கூடுவார்கள். தினமும் வேலைக்கு பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் செல்கிறார்கள். 15 நிமிடத்துக்கு ஒருமுறை இந்த ஊரில் நிற்கும் ஒவ்வொரு பேருந்திலும் சுமார் 20 பேர் ஏறி இறங்குகிறார்கள். இங்கு பொது கழிவறை வசதி கிடையாது. கிட்டத்தட்ட 10 வருட காலமாக இதற்காக மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை இல்லை. பல முறை பஸ் நிலையத்தில் கழிவறை கட்ட முயற்சி செய்தும் திட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையில் திருச்செந்தூர் தொழில் வழிச்சாலை அமையும் போது இங்கு புதிய பஸ் நிலையம் மற்றும் கழிவறை அமையும் என மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கான உறுதிமொழியை வாய்வழியாக அதிகாரிகளும் கொடுத்து வந்தனர். ஆனால் வேலை முடியும் நிலை வந்தும் கூட கழிவறை பணி எதுவும் நடைபெறவில்லை. இதனால் பஸ் நிலையத்தில் கழிவறை அமையுமா? அமையாதா என கேள்வி எழும்பியது.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் தகவல் உரிமை சட்டம் மூலம் நெடுஞ்சாலை துறைக்கு கேள்வி கேட்டார். அந்த கேள்வியில் செய்துங்கநல்லூரில் ஏற்கனவே இருந்த இரண்டு பஸ் நிலையமும் புதுப்பிக்க திட்டம் உள்ளதா? இங்கே கழிவறை அமைக்க திட்டம் உள்ளதா? செய்துங்கநல்லூரில் வறுகால் அமைக்கும் பணி முழுவதும் முடிந்து விட்டதா? என கேள்விகள் கேட்டார். அந்த கேள்விக்கு சென்னை & கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டம் பொது தகவல் அலுவலர் கோட்டப்பொறியாளர் கே.ஜி. ஜெயபிரகாஷ் பதில் அளித்துள்ளார்.
இதில் அவர் செய்துங்கநல்லூர் கிராமப்பகுதியில் வடிகால் அமைக்கும்பணி முழுவதும் முடிந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் செய்துங்கநல்லூர் சந்தை அருகில் வடிகாலுக்கு மூடிபோடாமல் திறந்த வெளியாக கிடக்கிறது. இதில் சி.எஸ்.ஐ.கோயில் தெருவில் செல்லும் மக்களின் இருசக்கர வாகனங்கள் விபத்துக் குள்ளாகும் நிலையில் உள்ளது.
செய்துங்கநல்லூரில் இருந்த இரண்டு பஸ் நிலையமும் புதிபிக்க திட்டம் இல்லையென்றும், அதில் கழிவறை வசதி எதுவும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்கள். ஆகவே மக்களின் நீண்ட நாள்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பல கோடி ரூபாய் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படாததும், அங்கே கழிவறை அமைக்கப்படாது என நெடுஞ்சாலை துறை அறிவித்து இருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தினை அளித்துள்ளது.
குறிப்பாக தினமும் 3 ஆயிரம் மக்கள் கூடும் இடத்தில் பஸ் நிலையத்தினை புதிபித்து பெரிதாக கட்டாமலும் கழிவறை கட்டப்படாது என நெடுஞ்சாலை துறை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்து இருப்பது பொதுமக்களுக்கு பெரிய ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வடிகாலில் மூடப்படாத இடத்தில் மூடி அமைத்தும் , பஸ் நிலையத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி கழிவறை அமைத்தும் தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


