தேவி வார இதழில் துணுக்கு எழுத்தாளராக அறிமுகமாகிய முத்தாலங்குறிச்சி காமராசு தற்போது 80க்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார். தாமிரபரணி பற்றி அதிகமான நூலை எழுதியவரும் இவரே. ஆதிச்சநல்லூர் ஆழ்வாராய்ச்சிக்கு இவர் மேற்கொண்ட பணி அளப்பரியது. ஆதிச்சநல்லூர் இருக்கும் வரை இவரது பெயரைத் தாங்கி நிற்கும். “ஆதிச்சநல்லூர் வழக்கு எண்13096/2017” எனும் இவரது புத்தகம் ஒரு மைல்கல்.
தாமிரபரணி ஆற்றில் மாசு கலப்பதை தடுக்க தனி ஒருவராய் நீதிமன்றத்தை அணுகி அதிலும் வெற்றி கண்ட ஒரு சமூகவாதி.
‘தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்’, ‘தூத்துக்குடி மாவட்ட வரலாறு’, இப்படி வரலாறை பதிவு செய்வதோடு புனைவில் நாட்டம் கொண்டு ‘முத்துக்கிளி’, ‘ தீதும் நன்றே’ போன்ற படைப்புகளை படைத்திருக்கிறார்.
தமிழக அரசின் “தமிழ்ச் செம்மல் விருது”, தமிழகக் கலை பண்பாட்டு துறை சார்பில் “கலை நன்மணி” விருது நியூஸ்7 தொலைக்காட்சி சார்பில் “தமிழ் ரத்னா சிறப்பு விருது” போன்றவற்றை பெற்ற எழுத்தாளர் இவர்.
முத்துக்கிளி என்பவர் யார்? முத்துக்கிளி என்று எதற்கு இந்த நாவலுக்கு தலைப்பு வைக்க வேண்டும் என்பதற்கான விடை இந்த நாவலை வாசிக்கும் போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
போனில் பேசியது யார் ? என்று துவங்கும் முதல் அத்தியாயம் “யய்யா ரத்தினம். முத்துக்கிளி பத்தி தகவல் எதுவும் கெடச்சதா? என்று ஆரம்பமாகிறது.
முத்துக்கிளி எந்த ஊரைச் சேர்ந்தவர்?அவரது உறவினர் யார்? முத்துக்கிளி எவ்வாறு தொலைந்து போனார்? எங்கே இருக்கிறார்? அவரைத் தேடி போகும் தந்தை ரத்னம், உறவினர் வாசு, சிறுவன் நவீன் இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது நாவல்.
கிராமத்திலிருந்து மும்பைக்கு செல்வோர் படும் அவலங்கள், மும்பை எவ்வாறு அவர்களை தமதாக்கிக் கொள்கிறது போன்ற தரவுகள், தாமிரபரணி மற்றும் கிராமச்சூழலினுடைய அழகு மும்பை நகர பரபரப்பு, நெரிசல் மிக்க வாழ்வு ஆகியவற்றை நாவலின் வழியாக கண்முன்னே கட்சியாக விரிக்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு.
கிராமத்தில் நடக்கும் கொடை பற்றி பேசும் அவர் மும்பையின் பரபரப்பான வாழ்வையும் அங்கும் உதவும் மனப்பான்மை உள்ள நண்பர்கள் உள்ளதையும், மட்டுங்கா, தாராவி போன்ற தமிழர்கள் வாழும் இடங்களில் அவர்களுடைய வாழ்வியலையும் பதிவு செய்திருக்கிறார்.
திருநங்கை என்றாலே ஒருவித ஏளனப் பார்வையும்,அருவருப்புப் பார்வையும் கொண்ட நமக்கு ‘திருவழகி’ மூலம் புதிய பார்வையினை திறந்து வைக்கிறார். திருநங்கைகள் எவ்வாறு முத்துக்கிளியை கண்டடைவதில், காப்பாற்ற முனைவதில் தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாது உதவுகிறார்கள் என்பதனையும் காட்சியாக வைத்திருப்பதில் திருநங்கைகள் மீது இவர் கொண்டிருக்கும் மதிப்பு நன்கு வெளிப்படுகிறது. மேலும் முதல் செவிலியர் திருநங்கை அன்பு ரூபி, நாட்டியம் கற்றுத்தரும் திருநங்கை பொன்னி, பத்மஶ்ரீ விருது பெற்ற நர்த்தகி நடராஜ் போன்றோரையும் கதைக்குள் கொண்டு வந்து பெருமை சேர்த்திருக்கிறார்.
கிராமத் திருவிழாவில் நடைபெறுகின்ற பாவைக்கூத்து பற்றி எழுதியிருப்பது மிகச் சிறப்பு. மிக மிக அருகி, தற்போது மறைந்து வரும் பாவைக்கூத்தை நினைவு கொண்டு மீட்டெடுத்திருப்பதில் வென்றிருக்கிறார். பொம்மலாட்டம் அதனுடைய ஒரு பகுதி என்று சொல்லி பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது 23 குடும்பங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளனர் என்ற தரவையும் தந்திருக்கிறார். பொம்மலாட்டத்துக்கு பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை அழைக்கப்படும் மரத்திலிருந்து செய்கிறார்கள் என்று பதிவு செய்து எவ்வாறு அந்த மரத்தின் கட்டைகளில் இருந்து செய்கிறார்கள் என்ற செய்முறையையும் தந்திருக்கிறார். பொம்மலாட்டக் கலைஞர்கள் அந்த கை ஆட்டுகின்ற வித்தையையும் கண்முன்னே காட்சிமைப்படுத்தி இருக்கின்றார். உயிரற்ற பொம்மைகள் உயிர் பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி பேசும் உணர்வை நம்முள் கடத்தி பாவைக்கூத்தை மீட்டெடுத்திருக்கின்றார் முத்தாலங்குறிச்சி காமராசு.
‘சுப்பிரமணி’ என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அவர் தங்கும் வீட்டை “ஓசோன் மண்டலத்திலேயே ஓட்டை விழுகிறது. பாவம் சுப்பிரமணி வீட்டில் விழுந்தால் என்ன?” என்று காட்சிமைப்படுத்தி இயற்கையின் மீது கொண்ட தன் பற்றை வரிகளில் அவர் மெய்ப்பித்திருப்பார்.
பெருசுன்னா அவர்கள் பாஷையில் நல்ல பாம்பு. “சே.. இந்த உலகத்தில் மனிதர்கள் கூட வாழ்கிறோம். அவர்கள் ஈவு இரக்கமே இல்லாமல் வாழுறாங்க. அதுக்கு இந்த நல்ல பாம்பு கூட குடித்தனம் பண்ணலாம்”. இது விரக்தி நிறைந்த வரிகள் அல்ல. யதார்த்த உண்மை வரிகள்.
எவ்வாறு சுப்பிரமணி மீது ஆவி இறங்குகிறது. அந்த ஆவி நன்மை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பதனை அழகாக படம் பிடித்து, ஒரு அமானுஷ்ய சக்தி ஆபத்துக்கு உதவும் என்பதை நிறுவியிருக்கிறார்.
“எப்போதுமே நசுக்கிறவங்க நசுக்கப்பட்டுக்கிட்டேதான் இருக்கணுமா. ஏன் கீழே கிடக்கிறவங்க ஜெயிக்கவே கூடாதா?” என்ற சமூக முரண்பாட்டை பதிவு செய்து மாறத்தூண்டுகிறார்.
‘கட்டுச்சோறு’ பற்றிய தகவல் சுவராஸ்யம்.
” அதை ஏன் கேக்குற. ஒரு காலத்துல நிறைய பனை ஏறுனாதான் பொண்ணும்பானுவ. நம்ம பவலுவ பதினெட்டு வயசுல வேதுவேதுன்னு அம்பது பனை ஏறி இறங்குவான். அப்புறம் பொண்ணு பனை ஏறுனா கிடையாதுன்னு சொன்னாவ. அவன் பனைத் தொழிலை விட்டுட்டு இந்தியா முழுசும் மூலை முடுக்கெல்லாம் போயி பலசரக்குகடை வச்சான். உலகமே பலசரக்குகடைன்னா அண்ணாச்சி கடைதான்னு பிரமிச்சு போய் நின்னாவ. இப்போ என்னன்னா கடை வச்சா நல்லது கெட்டதுக்கு கடையை அடைச்சுட்டு போவ முடியலை. அதனால கவர்மெண்ட் வேலை செஞ்சா தான் பொண்ணு தருவேன்னு சொல்லிட்டானுவ. இத எங்க போய் சொல்ல” என்று சலித்துக் கொண்டார். இனவரைவியலை இதைவிட தெளிவாக சொல்ல இயலாது.
” அட போங்க இன்ஸ்பெக்டர், மீடியாக்காரங்க அன்னைக்கு என்ன பரபரப்பு நடக்குன்னுதான் பாப்பாங்களே தவிர, மத்தபடி இந்த சம்பவத்தை தூக்கிக்கிட்டு மறுபடி வர மாட்டாங்க” என்று பதிவு செய்து மீடியாக்காரர்களின் ரேட்டிங் மோகத்தை நறுக்கென்று குட்டி இருக்கிறார்.
முத்துக்கிளி காப்பாற்றப்படும் காட்சி, அவளை கூட்டி வந்த இருவர், அவர்கள் ஏன் கூட்டி வந்தார்கள்? அவர்களுடைய நிலை என்ன? ஆகியவற்றை கடைசி ஐம்பது பக்கங்களில் விறுவிறுவென்று நகர்த்தி ஆர்வம் குறையாது நம்மை வாசிக்க வைத்து வென்றிருக்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு.
யாவரும் பதிப்பகம் நடத்திய புதுமைப்பித்தன் நினைவு நாவல் போட்டியில் தேர்ந்தெடுங்கப்பட்ட ஆறு நாவல்களில் ஒன்றாகவும் இரண்டாம் இடத்திலும் இந்த நாவல் இருந்தது என்பது சிறப்பு.
-தானப்பன், எழுத்தாளர்.
முத்துக்கிளி
முத்தாலங்குறிச்சி காமராசு
யாவரும் பதிப்பகம்
பக்கங்கள் 236.
விலை ரூ 280


