கலாராணி ஆய்வு மாணவி, இவர் குலசேகரபட்டின லோன் துரைகொலை வழக்கு பற்றி ஆய்வு செய்ய திருச்செந்தூர் பகுதிக்கு செல்கிறார். இவருக்கு துணையாக நூலகர் முத்து கிருஷ்ணன் அவர்களும் செல்கிறார்கள்.
நாதன் கிணறு கிராமத்தினை சேர்ந்த ஆறுமுகபாண்டியன் என்ற தியாகியின் மகன் ராஜகண்ணன் அவர்களிடம் நிறைய தகவல்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அந்த தகவல் எல்லாம் இரண்டு பேருக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
விடுதலைப் போராட்டம் என்றால் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தினை பெறுத்தவரை வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சிதம்பரனார் என மிகப்பிரபலமான வீரர்கள் பற்றி பேசுவார்கள். ஆனால் இங்கே திருச்செந்தூர் பகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் விடுதலைப்போராட்ட வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் வரலாறு வெளியே தெரியாமல் இருக்கிறது. தற்போதும் கூட தேடி வந்து பேசும்போது எத்தனையோ விசயங்கள் தெரிகிறது. ஆனால் வெளியே தெரியவில்லையே.
கலாராணி நொந்து கொண்டாள். அதைபுரிந்து கொண்ட நூலகர் முத்துகிருஷ்ணன் , “உன்னை மாதிரி கல்லூரி மாணவ மாணவிகள் இவர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும். நிறைய எழுத வேண்டும். பத்திரிக்கையில் இவர்கள் பற்றிய வரலாறு அடிக்கடி கட்டுரையாக வரவேண்டும். இதை ஒருநூலாக்க வேண்டும். இங்குள்ள கதைகளை வைத்து நாவல்கள் எழுதவேண்டும். சினிமா காரர்களிடம் இந்த கதைகளை கூறி, அதை திரைப்படமாக எடுக்க வேண்டும்”. என்றார்.
உண்மைத்தான். வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும், பாரதியாரும் திரையில் பேசப்பட்ட பின்னர் தான் அவர்களின் புகழ் கூடியது. பாரதியாரில் பல பாடல்கள் திரையில் பாடலாக வந்த பிறகுதானே பிரபலமானது. அதுபோலத்தான் லோன் துரை கொலை வழக்கு திரைப்படமாக எடுக்கப்படவேண்டும். இந்த தகவல் பட்டிதொட்டியில் உள்ள மக்களிடையே கொண்டு சேர்க்கவேண்டும். அதை சேர்ப்பது இளைஞர்களான புதிய தலைமுறைத்தானே ஏற்பாடு செய்யவேண்டும். தற்போது கூட சமூக வலைதலம் மிகப்பிரபலமாகி உள்ளது. இந்த ஊடகத்தில் லோன் துரை கொலை வழக்கு பெரியதளவில் இல்லையே. கூகுளில் தட்டிப்பார்த்தால் ஒன்றிரண்டு தகவல் மட்டுமே இருக்கிறது. கொலை வழக்கு என்று பார்த்தால் சமீப காலத்தில் நடந்த நிறைய வழக்குகளை கூகுள் காட்டுகிறது. ஆனால் குலசேகரபட்டினம் கொலை வழக்கை சுட்டி காட்டவில்லையே.
இந்த ஆதங்கம் எல்லோரிடமும் உள்ளது. எனவே குலசேகரபட்டினம் கொலை வழக்கை ஆய்வு செய்யும் முன்பே இங்குள்ள விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய வரலாற்றை ஆவணப்படுத்தவேண்டும்.
உறுதியாக கலாராணி இறங்கினாள். அவளுக்கு ஏதோ வழிகாட்டியாக வந்த முத்துகிருஷ்ணன் அய்யாவும் முழுமையாக அவளுக்கு உறுதுணையாக இறங்க ஆரம்பித்து விட்டார்.
சரி. தொடர்ந்து தியாகிகளை பற்றி நாதன்கிணறு ராஜகண்ணன் அய்யா கூறிய வரலாற்றை தொடருவோம்.
நாதன்கிணறு, பூச்சிக்காடு, செங்குளி ஆகிய மூன்று ஊர்களிலும் ‘கள்’ குடித்துவிட்டு ஊருக்குள் வரக்கூடாது” எனத் தண்டோரா போடப்பட்டது.
தண்டோராவையும் மீறி சிலர் ‘கள்’ குடித்துவிட்டு ஊருக்குள் வந்தனர். எனவே ‘கள்’ குடித்துவிட்டு ஊருக்கு வந்தால் மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையின் மேல் ஏற்றி ஊரை வலம் விடுவோம் என இரண்டாவது முறையாகத் தண்டோரா போடப்பட்டது. அதையும் மீறி சிலர் ‘கள்’ குடித்துவிட்டு ஊருக்குள் வந்தனர் எனவே நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து ‘கள்’ குடித்துவிட்டு வந்தவர்களைப் பிடித்து வைத்து விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்ட சிவலிங்கபண்டிதர் என்ற நாவிதர் மூலம் தலையில் “க” என்று தெரியுமாறு முடியை வைத்துவிட்டு மீதி முடியை எல்லாம் வழித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதையின் மேல் ஏற்றி ஊரை வலம் வந்தனர். சிறுவனாக இருந்த ஆறுமுகபாண்டியன் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற பின்னர் பலர் கள்ளுக்கடை பக்கம் செல்வதற்கே அஞ்சினர்.
இவர்கள் செல்கின்ற வழியில் கள்ளுக்கடை இருந்ததால் அதை தீ வைத்துக்கொளுத்திவிட்டுச் சென்றுவிட்டனர். போலீசார் கள்ளுக்கடைக்குத் தீ வைத்ததாக பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதில் கலந்து கொண்ட ஆறுமுக பாண்டியன் மீதும் மற்றும் அவரது அண்ணன், அவரது தந்தை கள்ளுக் குடித்தவர்களை மொட்டையடித்த சிவலிங்கபண்டிதர் உட்பட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் மிகவும் போராடி மூன்று பேரும் கோர்டில் ஆஜராகி ஜாமீனில் வெளியே வந்தார்கள். இந்நிலையில் மொட்டையடித்து கழுதைமேல் ஏற்றிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் சாட்சி சொல்லமாட்டேன் என எழுதிக் கொடுத்த இருவரும் கோர்ட்டுக்கு வந்து “மொட்டையடித்ததை நான் பார்த்தேன்” எனச் சாட்சி சொன்னார்கள். இதனால் போராட்ட காரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
மிரட்டுவதற்கு பச்சைப் பெருமாள் நாடார், பெஞ்சமின் ஆகியோர் வந்த போது வீட்டிலிருந்து ஓடி தலைமறைவான ஜெபமனி நாடார் கோர்ட்டுக்கு வந்து “எனக்கு எதுவும் தெரியாது” எனக் கூறிவிட்டார். எனவே அவரது சாட்சி எதற்கும் உதவாமல் போய் விட்டது.
கள்ளுக்கடைக்குத் தீ வைத்த வழக்கு திருநெல்வேலி தனிநீதிமன்றத்தில் நடைபெற்றது. 12.-4.-1943&இல் தீர்ப்பு வெளியானது. அதில் ஆறுமுகபாண்டியனும், அவரது அண்ணனும் சிறுவர்களாக இருந்த காரணத்தினால் 12 கசையடிகள் வழங்குமாறும், மற்றவர்களுக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்குமாறும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆறுமுகபாண்டியனும் அவரது அண்ணனும் 12 கசையடிகளை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். அவரது தந்தை உட்பட பலரை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டவர்கள், 1946 ஆம் ஆண்டு பொது விடுதலையின் போதுதான் வெளியில் வந்தனர்.
ஆறுமுகபாண்டியன் இந்திய விடுதலைக்குப் பின்னர் உடன்குடி கிறிஸ்தியாதகரத்தைச் சார்ந்த தேவராஜ் மோசஸ் நாடாருடைய மகள் விஜயா என்றப் பெண்ணைத் திருமணம் செய்தார். அவருக்கு மகன் ராஜகண்ணன் தான் தற்போது கலாராணிக்கு வேண்டிய தகவல்களை கூறிக் கொண்டிருக்கிறார். விஜயா அம்மாள் தற்போதும் நாதன்கிணற்றில் உள்ளார். இவர்தான் தற்போது கூட யார் வீட்டுக்கு வந்தாலும் குறைவில்லாமல் சாப்பாடு வழங்குபவர். குறிப்பாக போராட்ட காலத்தில் தேரிக்காட்டில் ஒழிந்து கிடந்து, அதன் பின் உணவுக்காக நாதன் கிணறுக்கு வந்த போது அவர்களுக்கு உணவளித்த ஆறுமுகபாண்டியன் வீட்டில் இன்று வரை தேடி வந்தோருக்கு உணவு அளிக்கும் வழக்கம் உள்ளது.
ஆறுமுகப்பாண்டியனுக்கு ஆறு மகள்களும் உள்ளனர். இவர் மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்ற இரண்டு பென்சன்களும் வாங்கினார்.
காலாராணி இந்த வரலாற்றை கேட்டுக்கொண்டே ஆனந்தம் அடைந்தார். எவ்வளவு பெரிய வேள்வி. இந்த வேள்வியில் குடும்பமே கலந்துகொண்டுள்ளது. அது மட்டுமா? போராட்ட காலத்தில் தொடங்கிய உணவு பழக்க வழக்கங்கள் இன்று வரை உள்ளது. எவ்வளவு பெரிய கடமை. இந்த நாட்டுக்காக போராடிய விடுதலை போராட்ட வீரர்களின் வீட்டில் இதுபோலவே பல்வேறு மக்கள் தற்போதும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். விஜயா அம்மாவை பெருமையாக பார்த்தாள் கலாராணி.
ராஜகண்ணனிடம் இருந்து விடைப்பெற்று கொண்டு கிளம்பும் போதே ராணி கேட்டார். “அய்யா மேலும் இந்த பகுதியில் உள்ள விடுதலைப்போராட்ட வீரர்களை பற்றி அறியவேண்டுமே”. என்றாள்.
நூலகர் முத்துக்கிருஷ்ணனுக்கு காயாமொழியை சேர்ந்த பாலசுப்பிரமணிய ஆதித்தன் நினைவுக்கு வந்தார்.
அவருடைய அப்பா எஸ்.டி. ஆதித்தன் விடுதலைப்போராட்ட வீரர்தான். அவர் ஒரு வித்தியாசமான விடுதலை போராட்ட வீரர். போரட்ட வீரர்களுக்காக தனது பணியை துறந்து இங்கே வந்து அவர்களை காப்பாற்ற நீதி மன்றம் மூலம் இறங்கியவர். அவரை பற்றி அவரது மகன் பாலசுப்பிரமணிய ஆதித்தன் நிறைய பேசுவார். அவர் முகநூல் பக்கத்திலும் எழுதியுள்ளார்.
பாலசுப்பிரமணிய ஆதித்தன் அய்யாவும் தாமிரபரணியை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கை எடுத்து வருபவர்கள். இன்றைக்கு மிகப்பிரமாண்டமாக மகா புஷ்கர திருவிழா 2018 ல் நடைபெற்றது என்றால் அதற்கு 12 வருடங்களுக்கு முன்பே புஷ்கர திருவிழாவை தாமிரபரணியில் நடத்தியவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன்தான். தாமிரபரணிக்கு விழா எடுத்து தாமிரபரணி பாடலை வெளியிட்டவர். தாமிரபரணி மைந்தர்களை அழைத்து எஸ்.டி. ஆதித்தனர் பெயரில் விருது வழங்கியவர். அதோடு மட்டுமல்லாமல் தாமிரபரணி பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்றால் மிகப்பெரிய பேச்சாளர் மூலம் நதியின் பெருமை பேசப்படவேண்டும் என்று சுகிசிவம் மூலமாக திருநெல்வேலியில் ம.தி.தா.பள்ளியில் பெருங் கூட்டத்தில் பேச வைத்தவர்.

தாமிரபரணி பணிசெய்யும் சமயத்தில் நூலகர் முத்துகிருஷ்ணனுக்கு அவர் பழக்கம் . எனவே அவர் போன் மூலம் பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களை தொடர்ப்பு கொள்ளலாம் என முடிவு செய்தார்.
ஆங்கிலேய எடுபிடி அதிகாரி லோன்துரையைக் கொன்ற தமிழக தியாகிகளின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யப் போராடி, 60 நாள் தொடர்ந்து கசை அடி பெற்று அதன் பின் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆகி தமிழக தியாகிகளின் தண்டனைகளை ரத்து செய்த தியாக வீர வரலாறு இவரது தந்தை எஸ்.டி ஆதித்தனாருக்கு உரியதாகும். எனவே அவர் தந்தையை பற்றி மணிக்கணக்காக பேசுவார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் “தூத்துக்–குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” என்ற நூல் வெளிவந்திருக்கிறது. அந்த நூலில் இருந்து நூலகர் முத்துக்கிருஷ்ணன் சில குறிப்புகளை கலா ராணியுடன் பேச ஆரம்பித்தார்.
அந்த தேரி மணலில் இவர்கள் இருவரும் காயாமொழியை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போதே எஸ்.டி. ஆதித்தன் வரலாற்றை பகிர ஆரம்பித்தார்.
இந்தியா சுதந்திரத்தை நெருங்கிய காலம். அதாவது 1942-ஆம் ஆண்டு. வெள்ளையனே வெளியேறு என்றும், செய் அல்லது செத்துமடி என்றும், காந்திஜி போராட்டங்களை அறிவித்தார்.
உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு வகையான எதிர்ப்பு கிளர்ச்சிகள் வலுத்தன. இந்தத் தருணத்தில் நாடு முழுவதும் 1 லட்சம் பேர் சுதந்திர போராட்டத்துக்காக சிறைக்குச் சென்றனர். அந்தச் சமயத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி, குலசேகரப்பட்டிணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200 இளைஞர்கள் ஒன்று திரண்டு கடற்கரை உப்பளத்தை நள்ளிரவில் முற்றுகை இட்டனர்.
அப்போது அவர்களைத் தாக்கவும், கொல்லவும் முயன்ற பிரிட்டிஷ் போலீசாரை பிடித்து கட்டிப் போட்டனர். அவர்களிடம் இருந்த 16 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். திரும்பும் வழியில் பங்களா இருந்தது. ஆஷ்துரையைப் போலவே கடும் ஆதிக்கம் செய்து வந்த லோன் துரை என்ற ஆங்கிலேய அதிகாரி அங்கு இருந்தான். விடுதலை இயக்க வீரர்களின் சத்தம் கேட்டு லோன் துரை வெளியில் வந்தார். நடப்பதைப் புரிந்து கொண்ட லோன்துரை பங்களாவில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து, சுட முயன்றார்.
லோன் துரையின் துப்பாக்கி விசை இயங்கும் முன்பு துள்ளி வந்த வேல் ஆவேசமாக லோன் துரையின் கழுத்தை சீவி அறுத்து வீழ்த்தியது .இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ந்த ஆங்கிலேயே அதிகாரிகள் “குலசேகரப்பட்டிணம் சதி வழக்கு” என்ற வழக்கைப் போட்டனர். நெல்லையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
கலாராணி கேட்டாள், “இந்த லோன் துரை கொலை வழக்கைதானே நாம் பேச வேண்டும் என நினைத்தோம்”.
“ஆமாம் அதைப்பற்றி நான் விரிவாக பின்னர் சொல்லுகிறேன். தற்போது தியாகி எஸ்.டி. ஆதித்தனார் குறித்த வரலாற்றை தானே பேசுகிறோம். அதனால் கொலை வழக்கை இப்போது விரிவாக பேசவேண்டாம் என நினைக்கிறேன்” என்றார் நூலகர்.
“சரிதான் நீங்கள் தொடர்ந்து பேசுங்கள்” என்று கூறிவிட்டு கலாராணி, நூலகர் பேசுவதை உற்றுக் கவனித்தாள்.
விடுதலை வேட்கைக்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தவித்த இளைஞர்களைக் காப்பற்ற வழக்குரைஞர்கள் எவருமே முன் வரவில்லை. காரணம் பிரிட்டிஷ் அதிகாரியான லோன் துரையையே இவர்கள் கொலை செய்து விட்டார்களே. நாம் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆஜர் ஆனால் ஆங்கிலேயர்களால் நமக்கு பிரச்சனைகள் வந்து விடுமே என தவிர்த்தனர்.
அநாதையாக தவித்த சுதந்திர போராட்ட இளைஞர்களுக்கு ஆபத்பாந்தவனாக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இருந்து சிங்கமாக ஒருவர் வந்து ஆஜர் ஆகிறார். அந்த வீர சிங்கம்தான் தியாகி எஸ்.டி.ஆதித்தனார். சிவில் வழக்குகளை மட்டுமே எடுக்கும் அவர் முதலும் கடைசியுமாக எடுத்த ஒரே கிரிமினல் வழக்கு இது தான். அதில் பல்வேறு இடையூருகள் இருந்தாலும் சாதித்து காட்டினார் அய்யா.
நீதிபதி பாலகிருஷ்ண அய்யர்தான் லோன் துரை கொலை வழக்கை விசாரித்து தண்டனைகளை அறிவித்தார்.
காசிராஜன், ராஜகோபாலுக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் அறிவித்தார். ஒருவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை, ஒருவருக்கு 7 ஆண்டு தண்டனை, இருவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை என தீர்ப்பு வழங்கினார். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை பெற்றவர்கள் தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி கொக்கிரக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். தூக்குத் தண்டனை பெற்றவர்களைப் பார்க்க தியாகி எஸ்.டி.ஆதித்தனார் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வருகிறார். அவர்கள் நிலமை குறித்து செய்திகளை சேகரித்துக்கொண்டு டெல்லியை நோக்கி விரைகிறார்.
டெல்லியில் காந்திஜியிடம் விவரத்தை சொல்லித் தானே லண்டன் பிரிவு கவுன்சில் நீதிமன்றத்தில் விடுதலை பெற வாதாடுகிறார். 14 மொழிகளில் பேசி 7 மொழிகளில் எழுதப் படிக்கத் தெரிந்த இந்திய சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர் தியாகி எஸ்.டி.ஆதித்தனார். இவர் காந்திஜியை ஏற்கனவே அம்மன்புரம், திருச்செந்தூருக்கு அழைத்து வந்தவரும் இவர்தான்.
மிகவும் கடினமான போராட்டம். லோன் துரை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியாகிக்கொண்டே இருக்கிறது. லண்டன் பிரிவு கவுன்சில் உள்ளிட்ட எந்த நீதிமன்றத்திலுமே அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. அனைவரும் பெரும்பாலும் 20 வயதை கடக்காதவர்கள். விடுதலை செய்ய இயலாத நிலையில் தொடர்ந்து தளர்வின்றி போராட்டக்களத்தில் மக்களோடு மக்களாய் போராடுகிறார் தியாகி எஸ்.டி.ஆதித்தனார்.
பிரிட்டீஷ் அதிகாரியைக் கொன்றவர்களுக்காக இப்படி இவர் போராடுகிறாரே என்ற கோபத்தில் தியாகி எஸ்.டி.ஆதித்தனார் அவர்கள் ஆங்கிலேய அரசால் திடீரென கைது செய்யப்படுகிறார். 60 நாள் கசைஅடி தண்டனை கொடுக்கப்படுகிறது. இந்த தண்டனையை பெற்று, சிறைச்சாலையில் வாடுகிறார். ஆனாலும் அதற்காக மனம் தளரவில்லை. விடுதலையாகி வெளியே வந்ததும் தளராமல் மீண்டும் வழக்கை நடத்துகிறார்.
எஸ்.டி.ஆதித்தனாரின் தீவிர ஆதரவாளர்களான வழக்குரைஞர் ஆறுமுகநேரி மேல வீடு சிவசுப்ரமணிய நாடார் மற்றும் சில வழக்குரைஞர்கள் இவரோடு தொடர்ந்து பணியாற்றுகிறார்கள்.
இந்தியாவின் அப்போதைய வைஸ்ராய் வேவல் என்பவர் இவர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். ஒரளவு எல்லோரும் சந்தோசமடைந்தனர். காலங்கள் கடந்தது. அதன்பின் நாடு சுதந்திரம் அடைந்தது.
சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் நிர்ணய சபையின் முதல் உறுப்பினராக போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் தியாகி எஸ்.டி.ஆதித்தனார். 1946-&ம் ஆண்டு ஏப்ரலில் சென்னை மாநிலத்தில் டி.பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் இடைக்கால மந்திரி சபை அமைத்தது. அதன் பின்னர் மாவீரர்களை விடுதலை செய்ய வைக்கிறார் தியாகி எஸ்.டி.ஆதித்தனார். சுதந்திரத்திற்கு முன்பாகவே அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக எளிதாக ஆனதால் விடுதலையும் எதிர்பார்த்த படியே கிடைத்தது. இந்த வழக்குக்கு பிறகு ராஜகோபாலன் தூக்குமேடை ராஜகோபாலன் என்ற பெயரில் தமிழகத்தில் அழைக்கப்பட்டார். இதே தருணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் கைப்பற்றப்பட்டதாகும்.
கலாராணி அமைதியாக இருந்தாள். இதுபோன்று பிரச்சனைகளை சந்தித்து அல்லவா சுதந்திரம் பெற்று இருக்கிறார்கள். அதுவும் சுதந்திர போராட்ட வீரர்களை காப்பாற்ற இப்படி ஒரு வீரர் இந்த பகுதியில் இருந்து இருக்கிறாரே. இவரைப் பற்றி எத்தனை பேர் அறிந்து இருப்பார்கள். நூலகர் தொடர்ந்தார்.
சாததான்குளம் காவல் நிலையத்தில் இருவர், இரவில் பாரா காவலர்களாக இருப்பர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒரு பாடையைக் கட்டி அதில் ஒருவரைப் பிணம் போல் கிடத்தினர். போலீஸ் ஸ்டேஷன் வழியே இரவில் சவ ஊர்வலம் நடத்தினர். ஒருவர் சங்கு ஊத, இன்னொருவார் சேகண்டி தட்ட, மற்றொருவர் கொள்ளிச்சட்டி ஏந்தி ஊர்வலம் நடந்தது. வெளிச்சத்தில் ஆட்டம் பாட்டத்தைப் பார்க்கத் துப்பாக்கியை சாய்த்து வைத்து விட்டு போலீஸ்காரர்கள் ஓடி வந்தனர்.
“நாட்டையே ஆண்ட மகாராஜா செத்து போனாரே” என ஒருவர் ஒப்பாரி வைத்தார். “என்னப்பா சொல்ற, விளங்குமாறு சொல்லு” என்று ஒரு போலீஸ்காரர் கேட்டார். “அதுதான்யா இது பிரிட்டிஷ் மகாராஜா” என்று கூறி போராளிகள் இரு போலீஸ்காரர்களையும் இழுத்து போய் போலீஸ் லாக்கப்பில் வைத்து பூட்டினர். அதுவரை பாடையில் ஈ மொய்த்து பிணமாக கிடந்தவர் எழுந்து “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்று ஆனந்த கொண்டாட்டம் போட்டார். காவல் நிலையத்திலிருந்து ஆயுதங்களை எடுத்து கொண்டு போராளிகள் புறப்பட்டனர்.
மாவட்ட தலைநகர் நெல்லைக்குச் செய்தி உடனே எட்டாத அளவிற்கு திட்டமிட்டு தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தன. இது நம் இந்திய விடுதலைப் போராளிகளின் முன் ஏற்பாடு ஆகும். எனினும் சில நாட்கள் கழித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஹெச்மாடி மலபார் போலீஸ் படையோடு வந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீட்டார். குரும்பூரில் ரெயில் நிலையம், மெஞ்ஞானபுரம் தபால் நிலையம் என தூத்துக்குடி மாவட்டம் சுதந்திரப் போராட்ட போராளிகளால் கைப்பற்றப்பட்டது. இதற்கு எதிராக போலீஸ்காரர்கள் கிராமம், கிராமமாக சென்றனர். மக்களை மிருகங்களாக வேட்டையாடினர். நக கணுக்கின் இடையில் ஊசியால் குத்தினர். தலையில் ரோமத்தை பிடுங்கினர். சித்ரவதை செய்தனர். அப்பாவி மக்களை கொடுமைப் படுத்தினர்.
கலாராணிக்கு கண்களில் கண்ணீர் வருவது போல இருந்தது. ஆக. நமது மக்கள் இப்படி கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கியிருக்கிறார்களே. நூலகர் தொடர்ந்தார்.
விடுதலைப் போராட்ட போராளிகள் ஆறுமுகநேரி த.தங்கவேல் நாடார் முன்னணியில் தேரிக்காடு சுனையில் திரண்டனர். பிரிட்டீஷ் போலீஸ் கொடுமைக்கு முடிவு கட்ட நேதாஜி பாணி ஜப்பானியர் போல் நாம் தற்கொலை படை அமைக்க வேண்டும் என்றனர். அதற்காக ஒரு கூட்டத்தை கூட்டினார். அதில் சேர விரும்புவோர் ரத்த கையெழுத்து இடுங்கள் என வெள்ளைத்தாளை நீட்டினார்கள்.
கே.டி.கோசல்ராம், கடையனோடை ஜி.மகாராஜன், தியாகி சுப்பையர், அமலிபுரம் பெஞ்சமின், ஏரல் நடராஜன் , பரமன்குறிச்சி நாகமணி வாத்தியார், கொழுவைநல்லூர் ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கை விரலில் ஊசி குத்தி ரத்த கையெழுத்து இட்டனர். கானம் வெள்ளை கண்ணு, மேலாம்பூர் வீரபாகு, வள்ளிவிளை துரைராஜீ உள்ளிட்டோர் அனைத்து உதவிகளையும் அவர்களுக்குச் செய்வதாக வாக்களித்தனர்.

18 வயதான மங்களா பொன்னம்பலம் என்பவர் போலீஸ், ராணுவ படைகளுக்கு உள்ளே நுழைந்து போராளிகளின் உளவாளியாக தகவல் சேகரிக்க பணிக்கப்பட்டார். அவர் பணி அற்புதமாக அமைந்தது. நெல்லை மாவட்ட சுதந்திர போராளிகளின் பணி ஒரு பெரிய நாட்டின் ராணுவ சேனையின் கட்டுக்கோப்போடு திகழ்ந்தது. இந்த போராட்டத்திற்கெல்லாம் ஆதரவாக இருந்தார் எஸ்.டி. ஆதித்தனார்.
1952&ஆம் ஆண்டு திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் இரட்டை மெம்பர் தொகுதியான திருச்செந்தூர் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்கிறார் தியாகி எஸ்.டி.ஆதித்தனார்.
ஆங்கிலேயன் லோன் துரையை வேல் கம்புக்கு இரையாக்கி மாவீரர்களைக் காத்த தியாகி எஸ்.டி.ஆதித்தனார் அவர்கள் காங்கிரஸை விட 4000 வாக்கு வித்தியாசத்தில் “குடிசை” பெட்டி சின்னத்தில் வெற்றி பெற்று ஏழை மக்களுக்காக பணியாற்றினார்கள். தியாக வீரர்களுக்கு தாமிர பட்டயம் வழங்கப்பட்டது. என் தியாகத்தை கொச்சைப் படுத்தவா இந்த பட்டயம் எனக்கு என வாங்க மறுத்து விட்டார் எஸ்.டி.ஆதித்தனார்.
அவரது மகன் பாலசுப்பிரமணி ஆதித்தன் மூலம் கிடைத்த கிடைத்த இந்த தகவலை தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் நூலில் இருந்து நூலகர் எடுத்துக் கூறினார். கலாராணிக்கு மிகவும் சந்தோசத்தினை வரவழைத்தது.
சிறிது நேரத்தில் இருவரும் காயா மொழி வந்தார்கள். அங்கே எஸ்.டி. ஆதித்தனார் இல்லத்தினை பார்த்தனர். இவரும் அந்த இல்லம் முன்பு நின்று அவரை நினைத்து வணங்கி நின்றனர்.
முத்துகிருஷ்ணன் கலாராணியிடம் சொன்னார். காயாமொழி என்ற இந்த புண்ணிய பூமியில்தான் எஸ்.டி. ஆதித்தனார் பிறந்தார். அவரின் ரத்தம் இந்த மண்ணில் சிந்தி நமக்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்டார் என்றார்.
இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அமைதியை கலைக்கும் விதமாக “அடுத்து நாம் எந்த தியாகியை பார்க்கலாம்” என கேட்டார் நூலகர்.
“அடுத்து அவர்கள் செல்லவேண்டிய இடம் ஆறுமுகநேரி. ஏன் என்றால் நாதன்கிணறு சுற்றுப்பகுதியினை போலவே அதிகமான தியாகிகள் வாழ்ந்த இடம் ஆறுமுகநேரி தான். லோன் துரை கொலை வழக்கில் மிக முக்கிய குற்றவாளிகளும் ஆறுமுகநேரியை சேர்ந்தவர்கள் தான் எனவே நாம் அங்கே செல்வோம்” என்று கலாராணி.
சரி என்று இருவரும் முடிவு செய்தனர்.
ஆறுமுகநேரி, திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் உள்ள மிகப்பிரமாண்டமான ஊர். இந்த ஊரில் உப்பளங்கள் அதிகமாக உள்ளது. அருகில்தான் தாரங்க தாரா கெமிக்கல் கம்பேனி உள்ளது. இந்த பகுதியில் நிறையபேருக்கு வேலைவாய்ப்பை தரக்கூடிய தொழிற்சாலை. இங்குள்ள உப்பளத்தில் இருந்து உப்பு ஏற்றுமதி செய்வதற்கு இலகுவாக ரயில் நிலையமும் உள்ளது. அருகில் தான் காயல்பட்டினம் ரயில் நிலையம் இருந்தாலும் இவ்வூரிலும் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் அற்புதமான பூமி. அந்த அளவுக்கு மகப்பெரிய நகரமாகவே ஆறுமுகநேரி உள்ளது. இந்த நகரத்தில் வளர்ச்சிக்-கும் தியாகிகள் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள்.
இந்த ஊரில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகள் தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள். விடுதலை போராட்ட வீரர்கள் வாழ்ந்த வீட்டில் விளம்பர பலகையும் வைத்துள்ளார்கள். எங்கு திரும்பினாலும் விடுதலை போராட்ட வீரர்கள் படம் உள்ள வீடுகள் உள்ளது. இங்குள்ள வியாபாரிகள் சங்கத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் போட்டோ பிரமாண்டமாக வைக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இங்கு விடுதலைப்போராட்ட வீரர்களாக இருந்தவர்களில் மக்கள் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்கள்.
ஆறுமுகநேரியைச் சேர்ந்த முன்னாள் எம்.பியும் தியாகியுமான கோசல்ராம், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தியாகியுமான செல்வராஜன் ஆகிய இருவருடைய திரு நாமத்தைத் தெரியாத தமிழக மக்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. கி.பி.19&-ம் நூற்றாண்டில் தோன்றிய அந்த இரு அவதார புருஷர்களும் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார்கள்.
ஆறுமுகநேரி உப்பு சத்தியாக்கிரக வழக்கு, குரும்பூர் ரயில் நிலைய வழக்கு, மெஞ்ஞானபுரம் தபால் நிலைய வழக்கு, குலசை கொலை வழக்கு – இப்படி பல வழக்குகள் திருச்செந்தூர் தாலூகா பெயரை வெளியில் தெரியச் செய்த தோடு சுதந்திரப் போராட்டத்தில் திருச்செந்தூர் தாலுகாவிற்கு அது விடுதலை போராட்ட வரலாறாகவும் அமைந்தது என கூறலாம்.
நாடு விடுதலை பெற்றபின், சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட இத் தாலூகா தியாகிகள் பலர் வறுமையில் வாடியபோது, அவர்களுக்கு ஆங்காங்கே தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் வாழ வழிசெய்து உற்சாகப் படுத்தியவர்கள் கோசல்ராம் அவர்களும், செல்வராஜன் அவர்களும் என்பதை நம் தாலூகா மக்கள் என்றும் மறக்கமுடியாது.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தியாகிகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசாங் கத்திடம் பல முறை வற்புறுத்திக் கூறி, வெற்றி கண்டவர்கள் அவர்கள். தியாகி களுக்கு மான்யம் கொடுக்க அரசு முன் வந்தபோது, இத் தாலூகாவில் உள்ள தியாகிகளுக்கு மான்யம் கிடைக்க அயராதுழைத்த தீரர்கள் இந்த “இரட்டையர்கள்”
தேச விடுதலைக்கு பின் 1946, 1952 1962&ம் வருஷங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வென்று, சட்டமன்ற உறுப்பினராகவும் 1958&ல் மேல் சபை உறுப்பினராகவும் சிறப்புடன் பணி யாற்றிய கோசல்ராம் அவர்கள், இத்தாலூகா மக்களுக்கு செய்த சேவைகளை நாடறியும்.
1954, 1957, 1962&ம் வருஷங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வென்று சட்டமன்ற உறுப்பினராகவும், தான் பிறந்த ஊரான ஆறுமுகநேரி ஊராட்சி மன்றத் தலைவராகவும், நெல்லை ஜில்லா போர்டு உறுப்பினராக இருமுறையும் ஜில்லாபோர்டு உபதலைவராகவும், சிறப்புடன் பணியாற்றிய செல்வராஜன் இந்தத் தாலுகா, மக்களுக்கு செய்த சேவைகளை மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்த தகவலையெல்லாம் முனைவர் தவசிமுத்துமாறன் அய்யா எழுதிய நூலில் இருந்து எடுத்துக் கூறினார் நூலகர் முத்துகிருஷ்ணன்.
அடுத்த கட்டம் இவர்களின் ஆட்டோ ஆறுமுகநேரிக்கு வந்து, எம்.எஸ். செல்வராஜன் அய்யா வீட்டுக்கு வந்து சேர்ந்தது.
இவரைப்பற்றி இவரின் மருமகள் சிவசங்கரி என்பவரிடம் பேசவேண்டும் என கலாராணியும், முத்துக்கிருஷ்ணன் அவர்களும் அவர் வீட்டுக்கு சென்றார்கள். அவர், ஆறுமுகனேரி பேரூராட்சியில் 2000&2005 வரை சேர்மன் ஆக இருந்துள்ளார்.
இவர்களை பார்த்தவுடன் அன்போடு வந்து வரவேற்று வரண்டாவில் இரண்டு சேரை தூக்கி கொண்டு போட்டார். அதில் இருவரும் அமர்ந்தார்கள். சுற்றிலும் தியாகி எம்.எஸ். செல்வராஜ் அவர்களின் புகைப்படம் அலங்கரித்துக் கொண்டிருந்தது.
முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார்கள். சிறிது நேரத்தில் சூடாக காபி வந்தது. அதை குடிக்கும் போதே அருகில் வந்து சிவசங்கரி அமர்ந்தார். அதன் பின் அவர் கலாராணியிடம் பேச ஆரம்பித்தார்.
“என்னுடைய மாமா எம்.எஸ்.செல்வராஜன் தியாகியாவர். அவர் சுதந்திரப் போராட்டத்திற்காக ரொம்ப ஈடுபட்டு நிறைய சிறைச்சாலைக்கெல்லாம் சென்றுள்ளார். விடுதலை போராட்டத்திலும் நிறைய அடிப்பட்டார். எனக்கு 1996 இல் திருமணம் நடந்தது. 1999&இல் மாமா இறந்து விட்டார். கிட்டத்தட்ட 4 வருடம் அவருடன் ஒரே வீட்டில் இருந்துள்ளேன். மாமா இருக்கும் போது நிறைய பேர் அவரைப் பார்த்து பேச வருவார்கள். நிறைய பேர் பேசுவதை நான் கேட்டுருக்கேன். ஆறுமுகநேரி சிவன் கோவில் முன்னாடி சந்தை ஒன்றுள்ளது. அது பக்கத்தில் ஒரு மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் தான் தியாகிகளை வெயிலில் முட்டி போட வைத்து துன்புறுத்துவார்களாம். எனது மாமா எம்.எஸ்.செல்வராஜ் பாரத் மாதாக்கி ஜெய், என்று சொல்லும் போதெல்லாம் திரும்ப திரும்ப அடித்துள்ளனர்.
அவர் எம்.எல்.ஏ. வாக இருந்த போது ஊருக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார். 1949 இல் ஜில்லா போர்டு தலைவராக இருந்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி இரண்டும் ஒரே மாவட்டமாக சேர்ந்து இருந்த போது ஜில்லா போர்டில் தலைவராக இருந்துள்ளார். ஆறுமுகனேரி பேரூராட்சிக்கும் தலைவராக இருந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை தனியாகப் பிரிப்பதற்கு முன், திருச்செந்தூர் தொகுதியில் 2 தடவை, சாத்தன்குளம் தொகுதியில் ஒரு தடவை என 3 தடவை எம்.எல்.ஏ.வாக பணியாற்றியுள்ளார். ஆறுமுகனேரி பெண்கள் பள்ளி வர நிறைய உதவிகள் செய்துள்ளார். ஆறுமுகநேரியில் உப்பளம் கொண்டு வந்து, இங்குள்ள மக்களுக்கு வேலை தருவதற்காக உப்பளச்சங்கம் என்று கொண்டு வந்துள்ளார்.
டி.சி.டபுள்.யூ நிறுவனத்தை ஆறுமுகநேரிக்கு கொண்டு வர அயராது பாடு பட்டவர் இவர். உப்புத்தொழிலை சார்ந்து அந்த நிறுவனம் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் எம்.எல்.ஏ. வாக இருக்கும் போது சட்டமன்றத்தில் பேசி அதற்கு அனுமதி வாங்கி நிறுவனம் வர முக்கிய காரணமாக என் மாமா இருந்தார்.
இன்றைக்கு அதில் ஆயிரக்கணக்கான பேர் வேலை பார்த்து வருகிறார்கள். நமது பகுதியில் கல்விக்காக நிறைய செய்துள்ளார். காயல்பட்டினம் பள்ளி, போன்ற நிறைய பள்ளிகள் அவர் காலத்தில் தான் உருவாகி உள்ளது. அப்போது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் செருப்பு போடக்கூடாது என்றும், அந்த காலகட்டத்தில் சிவன் கோவிலுக்கு உள்ளே வர அந்த தாழ்த்த பட்ட மக்களும் வரலாம் என்று கூறி அவர்களை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருந்தனர். என் மாமா தான், சிவன் கோயிலுக்கு அனைவரும் வரலாம் என்று போராடி , அவர்களின் உரிமையை வாங்கி தந்தார். பிற்காலத்தில் அவர்களுக்காகவே ஒரு இடத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தில் தான் தற்போது அந்த மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த இடத்துக்கு செல்வராஜ புரம் என்று பெயர்.
அவர் நினைவாக தற்போதும் மக்கள் செல்வராஜ் புரத்தில் வாழ்ந்து வருகிறார். என்று கூறி விட்டது. எங்கள் வீட்டில் ஒரு ராட்டை இருக்கிறது. என்று கூறியவர், அந்த ராட்டையை எடுத்து வந்து கலாராணி முன்பு வைத்தார்.
அந்த ராட்டையை பார்க்கும் போது காந்தியடிகளின் நினைவு கலாராணிக்கு வந்தது. சுதந்திர போராட்டத்தின் போது அந்நிய உடைகளை வேண்டாம் என கூறிவிட்டு உள்ளூர் உடையைதான் அணியவேண்டும் என ராட்டையில் நூல்கோர்க்கும் பணியை துவக்கிவைத்தார்.
1996&இல் இருந்து இந்த இராட்டை எங்கள் வீட்டில் உள்ளது. அதில் நூல் போட்டு வைத்திருப்பார்கள். மகாத்மாகாந்தி படமும் அங்கேயே இருக்கும். அதில் காந்தி சித்திரம் போல வரையப்பட்டிருக்கும். அதை வைத்து குழந்தைகள் ராட்டை சுற்றுவார்கள். தற்போது நாங்கள். அதை நியாபகார்த்தமாக வைத்துள்ளோம். என்று கூறினார்.
அவர்களை பார்க்கும் போது பெருமையாக இருந்தது. தனது முன்னோர்களின் பெருமையை எப்படி கட்டுகாத்து வைத்திருக்கிறார்கள். நம்மிடம் நேரத்தினை ஒதுக்கி பேசுகிறார்கள் என சந்தோசப்பட்டாள் கலாராணி.
முத்துக்கிருஷ்ணன் கூறினார். முன்னால் எம்.எல்.ஏ எம்.எஸ்.செல்வராஜ் தியாகி மட்டுமல்ல சுதந்திர இந்தியாவில் மிகவும் சமூக சேவகரும் கூட. என்று கூறினார்.
அந்த நேரத்தில் அங்க எம்.எஸ்.செல்வராஜ் மகன் சண்முக வெங்கடேசன் வந்தார். கலாராணி ஆர்வத்தினை அறிந்து அவரிடம் பல தகவலை கூற ஆரம்பித்தார்.
“37 தியாகிகளை உள்ளடகிய ஊர் இந்த ஆறுமுகனேரி, திருச்செந்தூர் தாலுகாவிலேயே பெரும்பகுதிகள் தியாகிகள் நிறைந்தது இங்கு தான். அதிலே என்னுடைய அருமை தந்தையார் தியாகி, எம்.எஸ்.செல்வராஜன். என்னுடைய பெரியப்பா, எம்.எஸ்.நடராஜன், மற்றொரு பெரியப்பா எஸ்.ஆர்.நடராஜன். போன்ற எங்கள் குடும்பத்தில் உள்ள தியாகிகள் இருந்துள்ளனர். அது போக மறைந்த தியாகிகள் கே. டி. கோசல்ராம் அவர்கள், தாலுகா தந்தை, த.தங்கவேல் நாடார் அவர்கள். இது போக அன்று தூக்கு மேடை வரை சென்று உயிர் பிழைத்த காசிராஜன், இராஜகோபால் போன்ற பெரும் தலைவர்கள் தோன்றிய புகழ்மிக்க புண்ணிய பூமி ஆறுமுகனேரி. என் பக்கத்தில் இருக்க கூடிய சந்தையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அந்தக் காலகட்டத்திலே சுதந்திரத்திற்காக போராடிய அனைவரையும் இங்கே அழைத்து வந்துதான் வெள்ளைக்காரர்கள் தண்டனை கொடுக்கிற வழக்கம் உண்டு. எங்க அப்பாவை பொருத்தவரை சுடுமண்ணிலே முழங்கால் போட்டு அதிலே உப்பு பரத்தி முட்டி இட வைப்பது இரத்தம் சொட்டச் சொட்ட அடித்து துன்புறுத்தினவர். அந்த நிலைமையிலும் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் “என்று சொல்ல கூடிய அளவில் உணர்ச்சி போராட்டம் நடந்தது.
என்று கூறிவிட்டு அப்படியே அமைதியாகி விட்டார்.
ஆகா. சுதந்திரத்திற்காக நமது மக்கள் எவ்வளவு பாடுபட்டு இருக்கிறார்கள்.
அதையெல்லாம் அறியாமல் நாம் தற்போது சுதந்திர இந்தியாவை நன்கு பயன்படுத்த தவறி விட்டோமே.
கலாராணிக்கு மனதுக்கு வருத்தமாக இருந்தது.
(குலசேகரபட்டினம் லோன் துரை கொலை வழக்கு தொடரும்)


