திருச்செந்தூர் அருகே 50 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம். சீரான குடிநீர் வழங்க கோரி 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது புன்னக்காயல் கிராமம். தாமிரபரணி ஆறு கடைசியாக கடலில் கலக்கும் இடத்தில்தான் இந்த புன்னக்காயல் கிராமம் அமைந்துள்ளது. இந்த புன்னக்காயல் கிராமத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் மீன்பிடி தொழில் செய்து அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த புன்னக்காயல் கிராம மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சுமார் 50 நாட்கள் முதல் 70 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்றைய தினம் ஊரில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரில் உள்ள ஆலயத்தின் முன்பு சுமார் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதி ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் வீதம் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தினம் தோறும் வழங்கி வருகிறது.
ஆனால் இந்த தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான புன்னக்காயல் கிராம மக்களுக்கு தினம்தோறும் குடிப்பதற்கு குடிநீர் இல்லாத ஒரு சூழல் நிலவி வருவதாகவும் இதனால் இந்த பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புன்னக்காயல் கிராமத்தை சுற்றி வெள்ளநீர் இரண்டு நாட்களாக நின்றது.
பல மாதங்களாக இப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


