திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவினை தமிழ் மொழியில் நடத்திட வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி பாசறை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வைகுண்ட மாரி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் (செந்திலாண்டவர்) திருக்கோவிலில் வருகின்ற 2025-ம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடைபெற இருப்பதை நாம் அறிவோம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அனைத்து இந்து கோவில்களில் குட முழுக்கு விழாவினை தமிழ் மொழியில் நடத்துவது கட்டாயம் என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாணையின்படி திருச்செந்தூர் அருள்மிகு (முருகன்) செந்திலாண்டவர் திருக்கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவினை/ நன்னீராட்டு விழாவினை தமிழ் மொழியில் நடத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


