கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி புதிய நிர்வாக குழுவிற்கு ஒப்புதல் வழங்கியதை கண்டித்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் நாடார் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் வருமான வரித்துறைக்காக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1 கோடி முறையாக வருமான வரி செலுத்தமால் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையெடுத்து ஆசிரியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ் மீதும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பள்ளியின் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவிற்கு கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள நிர்வாக குழுவினர் கடந்த 4 ஆண்டுகளாக செலுத்தப்படமால் இருக்கும் வருமான வரித்துறைக்கான அனைத்து தொகையும் ஆசிரியர்கள் தான் செலுத்த வேண்டும் என்று மிரட்டல் விடுப்பதாகவும், இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். இதே போன்று அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் அலுவலக உதவியாளரை தங்கமாரியப்பன் என்பவரை பள்ளி நிர்வாக குழு தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தங்கமாரியப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வருமான வரித்துறை தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் போது, புதிய நிர்வாகிகளுக்கு கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் செயல்படு அனுமதி வழங்கிய காரணத்தினால் அலுவலக உதவியாளர் தங்கமாரியப்பன் தாக்கப்பட்டுள்ளார், மேலும் ஏற்கனவே கொடுத்த பணத்திற்கு விடை தெரியமால் ஆசிரியர்கள் பரிதவித்து வரும் நிலையில் 4 ஆண்டுகளுக்கான வருமான வரித்துறைக்காக பணத்தினை செலுத்தும் படி மிரட்டல் விடுத்து வருவதாகவும், இதனை கண்டித்தும், வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகமும் சம்பந்தப்பட்டு இருப்பதால் புதிய நிர்வாக குழுவிற்கு ஒப்புதல் கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலத்தில் காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


