தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் டிச.18 முதல் 27ஆம் தேதி வரைகொண்டாடப்படவுள்ளதாக, ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956 டிச. 27ஆம் தேதியை நினைவுகூரும் வகையில், இம்மாவட்டத்தில் 18 முதல் 27ஆம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.
இதில், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்துக்கான ஒட்டுவில்லைகளை ஒட்டப்பட்டு, துண்டறிக்கைகள் வழங்கப்படவுள்ளன.
அரசு அலுவலகங்களுக்கு கணினித் தமிழ், ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் குறித்து அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி, தமிழில் பெயர்ப் பலகைகள் வைப்பது தொடர்பாக வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டம் ஆகியவை நடத்தப்படவுள்ளன.
மேலும், ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்


