தூத்துக்குடியில் நடைபெற்ற மன்னர் தேர்மாறனின் 272 ஆம் பிறந்த நாள் விழாவில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடியில் தேர்மாறனின் 272 ஆம் பிறந்த நாள் விழா, நூல்கள் வெளியீடு, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் என முப்பெரும் விழா தெலசால் அருள் சகோதரர்களின் தேர்மாறன் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வில்லியம் மஸ்கரனாஸ் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தார். அருள்பணி ஸ்டார்வின் அடிகளார் தேர்மாறனின் கல்லறையை அர்ச்சித்து, ஆசியுரை வழங்கினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களோடு இணைந்து ஆங்கிலேயர்க்கு எதிராகப் போரிட்ட சி.சி. தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியனின் தியாக வாழ்வு குறித்து சிறப்புரையாற்றிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் எ.பி.சி.வி. சண்முகம், தேர்மாறன் வாழ்ந்த வீட்டை தமிழ்நாடு அரசு காட்சிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தேர் மாறன் குறித்த செய்திகளைத் தமிழக அரசின் பார்வைக்குக் கொண்டு சென்று கல்வெட்டுகளை ஆராய்ந்து அவருக்கு உரிய மரியாதை செய்யப்படும் என்றார்.
மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸின் கயலின் கருவறையிலிருந்து நூலை சமூகத்தின் மூத்த செயற்பாட்டாளர் ஞாயம் ரோமால்டு வெளியிட, ஒருங்கிணைந்த விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சேவியர் வாஸ் பெற்றுக்கொள்ள, பேராசிரியை பாத்திமா பாபு நூலை அறிமுகம் செய்தார். நெய்தல் அண்டோவின் நீங்கள் கேட்காதவை நூலை நாட்டுப்படகு சங்கத்தின் செல்லார் ராஜ் வெளியிட, ஸீ சைடு ரோட்டரி செயலர் மணவை யோகேஷ் பெற்றுக் கொள்ள, ம.தி.மு.க. நக்கீரன் நூலை அறிமுகம் செய்தார்.
இந்நிகழ்வில் புன்னைக்காயல் ஊர்க்கமிட்டி நிர்வாகிகளுடன் குழந்தை, வேம்பார் ஜோ வளன், முன்னாள் சேர்மன் மனோஜ், வி.சி.க. டிலைட்டா, தமிழ் மீனவர் கூட்டமைப்பின் ரஜினி மகி, மக்கள் நீதி மையத்தின் மாவட்ட தலைவர் ஜவஹர், நாம் தமிழர் பாக்கியராஜ், தமிழக வெற்றிக் கழகத்தின் அஜிதா ஆக்னல், ஜெயந்தன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வராஜ், சகாயராஜ், எட்வின் பாண்டியன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல், இந்நாள் மாநகராட்சி உறுப்பினர்கள் எடின் டா, மெட்டில்டா, பவானி, ரிக்டா, உவரி எழிலன், ஜோபாய் கோமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


