கடம்பூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் ரயில் நிலையம் அருகே பசுவந்தனை வழியாக தூத்துக்குடி செல்லும் சாலையில் புதிததாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீரை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏ பார்வையிட்டார். பின்னர், அவர் கூறியதாவது: கடம்பூரில் இருந்து பசுவந்தனை வழியாக தூத்துக்குடி செல்லும் சாலை மிகவும் முக்கியமானது. இந்தச் சாலையில் குறுக்கீடும் இருப்புப்பாதையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த மழைநீரை இம்மாதம் இறுதிக்குள் அகற்ற வேண்டும். மேலும், மழைக்காலங்களில் சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா காலத்திற்கு முன் கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அதிமுக பொதுச் செயலரிடம் அனுமதி பெற்று, ஜனவரி முதல் வாரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.


