ஒரு அரசாங்கத்தின் இருவேறு குரல்! யார் சொல்வது உண்மை? என கனிமொழி கருணாநிதி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவித்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை 2021-ல் ஏற்றுக்கொண்ட பா.ஜ.க அரசு, தற்போது அப்படி ஒரு முன்மொழிவைத் தமிழ்நாடு வழங்கவில்லை எனப் பேசுவது, ஒரு அரசாங்கத்தின் இருவேறு குரல்களாகத் தான் பார்க்க முடிகிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? யாருக்காக இந்த பிறழ்ச்சி? அனுப்பவில்லை என்கிறது பாஜக, அனுப்பிவிட்டோம் என்கிறது அதிமுக! இதில் யார் சொல்வது உண்மை? என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் கடந்த 2021ஆம் ஆண்டு எழுப்பிய கேள்வி : தமிழகத்தில் காவிரி டெல்டாவை மாநில அரசு பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அரசுக்குத் தெரியுமா?
அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?:
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் – நரேந்திர சிங் தோமர் 05/02/2021 அளித்த பதில்: தமிழ்நாடு விவசாயிகள் அரசு மற்றும் விவசாயத்தின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் 19/02/2020 அன்று, காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளை ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக’ அறிவித்து மசோதா நிறைவேற்றியுள்ளது.
2021ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் எழுப்பிய கேள்வி: காவிரி டெல்டா மண்டலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதைக் கருத்தில்கொண்டு, ஏற்கனவே ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ள செய்யப்படுமா?
05/02/2021 அன்று வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், நரேந்திர சிங் தோமர் அளித்த பதில்: தமிழ்நாடு அரசால் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள், அந்த பகுதியில் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டன. வேறு எந்த புதிய ஆய்வுகளும் அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படவில்லை.
25/11/2024 அன்று மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா எழுப்பிய கேள்வி: தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளதையொட்டி அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த ஆய்வுகளைத் தடை செய்ய ஒன்றிய அரசிடம் ஏதேனும் கொள்கைகள் உள்ளதா?
25/11/2024 அன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் அளித்த பதில்: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 உள்ளிட்ட ஒன்றிய அரசின் சட்டங்களின் கீழ் காவிரி டெல்டா மண்டலத்தைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பதற்கான எந்த ஒரு முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு வரவில்லை.
25/11/2024 அன்று, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா எழுப்பிய கேள்வி : தடையில்லாச் சான்றிதழ் பெற நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரங்கள் (NOC அல்லது ஹைட்ரோகார்பன் அல்லது எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை பட்டியலிடவும்.
25/11/2024 அன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் அளித்த பதில்: தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் ஆய்வு நடத்த, சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ள ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளைக் கடந்த 2021-ம் ஆண்டு நிறுத்திக் கொண்டதாகத் தெரிவித்த ஒன்றிய அரசு, தற்போது அந்நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகக் கூறுவது முரணாக உள்ளது.
ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு வேளாண் மக்கள் மீது தொடுக்கும் நேரடித் தாக்குதல். ஒன்றிய அரசு தனது முடிவை உடனே திரும்பப்பெறவேண்டும் எனக் கனிமொழி கருணாநிதி எம்.பி அறிக்கையாக தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


