தூத்துக்குடியில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வுப் பிரச்சார ரதத்தை ஆட்சியர் இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(25.11.2024), மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வுத்துறை – குடும்பநலத்துறையின் சார்பில், ஆண்களுக்கான நவீன வாசக்டமி இருவார விழிப்புணர்வுப் பிரச்சார இரதத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி இருவார விழிப்புணர்வு விழா 21.11.2024 முதல் 04.12.2024 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவானது ஆண்களும் குடும்ப நல அறுவை சிகிச்சையில் பங்கேற்கும் பொருட்டு அரசால் இருவார விழிப்புணர்வு விழாவாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கு “குடும்ப கட்டுப்பாடு பற்றி இணைந்து பேசுவோம்; அதை இன்றே தொடங்குவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல ஆண் கருத்தடை முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சையை விட எளிமையானது, மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை, மயக்கமருந்து கொடுப்பதில்லை, கத்தியின்றி இரத்தமின்றி செய்யப்படுகிறது, கடின உழைப்பையும் மேற்கொள்ளலாம், ஆனந்த வாழ்க்கைப் பெற தடையில்லை என இம்முறையின் சிறப்பம்சங்களாகும்.
மேலும், இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, குடும்பநல கருத்தடை முறை ஏற்கும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஈட்டுத்தொகையாக தமிழ்நாடு அரசால் ரூபாய் 1100/-யும், ஊக்குவிப்பாளருக்கு ஊக்கத்தொகையாக ரூ.200/-யும் வழங்கப்படும். இதனை தகுதியுள்ள தந்தையர்கள் ஏற்பதன் மூலம் சிறுகுடும்ப நெறியை பின்பற்றலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விழிப்புணர்வுப் பிரச்சார இரதத்தின் வாயிவாக, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) பொன்ரவி, துணை இயக்குநர் (தொழு நோய்) யமுனா, துணை இயக்குநர் (காசநோய்) சுந்தரலிங்கம், புள்ளி விபர உதவியாளர் பேச்சிமுத்து, அனைத்து வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் மற்றும் குடும்பநல அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


