கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் குறித்து நகர் மன்ற தலைவர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா பஸ் நிலையத்தில் 49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதன்படி அண்ணா பேருந்து நிலையம் முனியசாமி கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மினி பேருந்துகள் வந்து நிறுத்தி செல்ல வசதி செய்வது, மினி பேருந்துகள் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஆர்த்தி மருத்துவமனை நகர பேருந்து நிலையம் வழியாக நுழைவாயில் அருகில் உள்ள சாலை வழியாக நிறுத்தம் செய்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்.தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் பூங்கா அருகே திருநெல்வேலி பிரதான நெடுஞ்சாலையில் நிறுத்தி செல்ல வேண்டும் குருவிகுளம், கயத்தாறிலிருந்து வரும் தனியார் மற்றும் அரசு நகர பேருந்துகளை நகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இதனை செயல்படுத்துவது தொடர்பாக கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலா, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மக்களுக்கு சிரமம் ஏற்படாமல், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனை நடத்தினர்.


