-
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க பத்து லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று யூனியன் சேர்மன் ரமேஷ் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் வைத்து நீர் நிலைகள் பாதுகாத்தல் குறித்த சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) சசிகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் முன்னிலை வகித்தார். நூறுநாள் பணித்திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி பாலின் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் எல்.ரமேஷ் கலந்து கொண்டு பனை மரங்களின் சிறப்பு குறித்து விளக்கவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது.. மழைநீரை சேகரித்து, மண் அரிப்பை தடுத்து, நிலத்தடி நீரை பாதுகாப்பதில் பனைமரங்கள் முதன்மையாக விளங்குகிறது. மேலும் தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தை வளர்ப்பதில் நாம் அனைவரும் முழுமனதோடு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் உள்ள கண்மாய், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பனை மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு தமிழக அரசு கிரீன் சேம்பியன் விருது பெற்ற எம்.ஏ.தாமோதரன் தலைமையிலான தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்போடு இணைந்து பத்து லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இக்கூட்டத்தில் கொடியன்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் அருண்குமார், வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள், பணித்தள பொருப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு துணை செயலாளர் பா.முத்துமாரி நன்றி கூறினார்.


