-
தருவைக்குளம் – பட்டினமருதூர் கிராம பகுதிகளில் காணப்படும் தொல்லியல் எச்சங்களை ஓட்டப்பிடாரம் வட்டத்திலேயே காட்சிப்படுத்தி பாதுகாத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பட்டினமருதூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “எங்கள் பகுதியில் அதிக அளவிலான வரலாற்று சிதைவுகள் குவிந்து காணப்படுவதை நாங்கள் 02.11.2023 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கு உறுதி மொழி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து தூத்துக்குடியினை சார்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் என்பவர் பல கட்டங்களாக ஊர் மக்களாகிய எங்கள் துணையோடு மேற்பரப்பு கள ஆய்வுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற வரலாற்று தொன்மங்களையும், நூல் குறிப்புகளையும் ஆதாரங்களாக கொண்ட தனது கோரிக்கைகள் அடிப்படையில் மாண்புமிகு.பிரதம மந்திரி அலுவலக பரிந்துரையின் கீழ், நமது மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி நமது இந்திய தொல்லியல் துறையினர், மற்றும் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வுகளை தொடர்ந்து வருகின்றனர்.இப்பகுதியில் மிக அதிக அளவிலான தொன்மங்கள் மேற்பரப்பிலேயே குவிந்துள்ளன. மேலும் வித விதமான மற்பாண்ட சிதைவுகள், பீங்கான் சிதைவுகள், நூற்ப்பு உருளைகள், பழங்கால தங்கம் கலந்துள்ளதாக கருதப்படும் நாணயங்கள், கை மற்றும் மூக்கணிகலன்களின் சிதைவுகள், செந்நிற மண் பொம்மைகள், கீரல் ஓவியம் உள்ள மற்பாண்ட சிiவு, இசைக்கல் தூண், மண் கலைவைகளால் செய்யப்பட்ட பீட கற்கள், அரேபிய கல்வெட்டுக்கள், தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு, இரும்பு வார்ப்பு சிதைவுகள், தெய்வ திருமேனிகள், சுரக்காய் வடிவில் இருக்கும் எடைக்கல், சங்கு ஆபரணங்களின் சிதைவுகள், கண்ணாடி பீங்கான் சிதைவுகள், ரூபி படிகக்கல், கூரை ஓட்டு சிதைவுகள், கற்களால் செய்யப்பட்ட ஆயுத சிதைவுகள், சுடுமண் உறை கிணறுகள், வீரக்கல், நினைவுக்கல், சதிகல் முதலானவைகள் தற்சமயம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.எனவே இனி தொடரும் ஆய்வுகளிலும் எச்சங்களின் வரவு மிக அதிகமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனவே மரபு நீதிபதியாகிய தாங்கள் தயவாய் இந்த வைப்பாற்று நாகரீக எச்சங்களை இந்த பகுதியிலேயே வைத்து காட்சிப்படுத்தி நமது வைப்பாற்று நாகரீக பகுதிகளை உலகறிய செய்திடவும், வரலாறு மற்றும் தொல்லியல் பயிலும் மாணவர்களுக்கு ஏதுவாக அமைந்திடவும், வறண்ட வானம் பார்த்த பூமியான எங்கள் பகுதியினை சிறந்த சுற்றுலா தளமாக்கிடவும் உதவிடும் வகையில் ஏதேனும் காட்சியறையினை ஏற்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


