தூத்துக்குடி அருகேயுள்ள பட்டினம் மருதூர் கிராமத்தில் வரலாற்று சின்னங்கள் குறித்து தமிழக தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி தெரிவிக்கையில், “நமது தொடர் கோரிக்கைகள், நண்பர்களின் கருத்து பகிர்வு, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் துணை, வருவாய் துறை அதிகாரிகள் அனுசரணை, எல்லாம் வல்ல இறைவன் அருளால் கடந்த 05.11.2024 அன்று நமது மாநில தொல்லியல் துறையின் தூத்துக்குடி மாவட்டம் அதிகாரி ஆசைதம்பி மற்றும் குழுவினர் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் – ஓட்டப்பிடாரம் வட்டம் – பட்டினம் மருதூர் கிராமத்தில் கள ஆய்வு செய்ய வந்திருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி மூலம் தகவல் அறிந்து செய்தி ஊடகம் துணையோடு நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளோம்
அதுசமயம் நாம் ஏற்கனவே இந்திய தொல்லியல் துறையின் -திருச்சி அதிகாரிகள் சகிதம் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று தொன்மங்கள் காணப்படும் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டோம். மேலும் குறிப்பிடும்படியாக படத்தில் உள்ளது போன்ற கீரல் ஓவியம் வரையப்பட்ட மற்பாண்ட சிதைவினை ஏற்கனவே இரால் பண்ணைக்காக தோண்டப்பட்டு அலங்கோலமாக காணப்படும் சர்வே எண் 34ல் மாநில தொல்லியல் துறையின் அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
இறுதியாக கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தமிழ் வட்ட எழுத்து கல்வெட்டின் எழுத்துக்களை ஆசைதம்பி வாசித்தார் அதில் ‘கோச்சடையான்’ என்ற பெயர் இருப்பதாக தகவல் தெரிவித்தார். மேலும் தொடர் எழுத்துக்கள் போன்று இருபுறமும் காணப்படுவதால் அலுவலகம் சென்று விபரம் பகிர்கிறேன் என்று கூறி படி எடுத்து புகைப்படங்கள் ஆவணங்களை பெற்று சென்றுள்ளார்.
எனது வரலாற்று புரிதல் படி பாண்டிய மன்னன் ரணதீரன் (கோச்சடையான்) காலகட்டம் பொ.ஊ. 670 – 710 வரையாகும். இவர் அரிகேசரி பாண்டியரின் மகனும், அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்ற கூன் பாண்டியனின் தந்தையும் ஆவார். மேலும் இந்த மற்பாண்ட கீரல் ஓவியம் எனது ஒப்பீடின்படி சிந்து சமவெளி நாகரிகம் குறியீடு அட்டவணையில் உள்ள அடையாள எண் 350(de) என்பது போன்று உள்ளது.
குறிப்பாக இந்த வரலாற்று சின்னங்களை நமது மாவட்டத்தில் காட்சிப்படுத்தல் அறையில்லாத காரணத்தால் திருநெல்வேலியிலுள்ள அருங்காட்சியகம் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு செய்ய பரிந்துரை செய்துள்ளார். இந்த களம் மிகப்பெரியதாகவும், மிகுந்த தொல்லியல் எச்சங்கள் கொண்டதாக உணரப்படும் நல்ல ஓர் ஆய்வுக்கு உட்பட்ட களம் என்பதையும், தொடர் ஆய்வுகளை தமிழக தொல்லியல் துறையின் அதிகாரிகள் தொடர்வார்கள் என்றும் மாவட்ட தொல்லியல் அதிகாரி முதல் கட்டமாக தகவல் அளித்தார். நமது பகுதி வரலாற்று சின்னங்களை நமது பகுதியில் ஏதேனும் சிறிய அளவில் காட்சி படுத்தல் அறையினை ஏற்பாடு செய்தால் நமது மக்களுக்கும், மாணவ செல்வங்களுக்கும் வரலாறு மற்றும் நாகரீக புரிதல் வகைக்கு ஏதுவாக இருக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் துணையாக இருக்கும் என்பது எங்கள் தாழ்மையான கருத்து என்று தெரிவித்தார்.


