முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அது தவிர விடுமுறை தினங்கள் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.
நாளை மறுநாள் அமாவாசை வர உள்ளது. இந்த நிலையில் அதற்கு முன்பாக நேற்று முதல் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி காணப்பட்டது.
இன்று இரண்டாவது நாளாக சுமார் 50 அடி வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
திருச்செந்தூர் கடற்கரை நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்துள்ள பக்தர்கள் கடல் உள்வாங்கி பகுதிகளில் தெரியும் பாசி படிந்த பாறைக்கு மேல் ஏறி எந்தவித அச்சமும் இன்றி செல்பி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் எப்போதும் இல்லாத வகையில் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி உள்ளது. முதல் கட்டமாக 2 கடல் முள்ளெலிகள் கரை ஒதுங்கி உள்ளது.
ஆங்கிலத்தில் மூரை என்று அழைக்கப்படும் இந்த கடல் முள்ளெலி சிறிய, கூர்மையான முட்கள் கொண்டது. கோள வடிவமுள்ள இது ஒரு கடல் வாழ் விலங்கினமாகும். இதை கடல் கடல் ஊமத்தை என்றும் அழைப்பார்கள். இவற்றின் உடலில் உள்ள முட்களுக்கு மூராங்குச்சி என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்துவார்கள்.
இந்த நிலையில் கடற்கரையில் ஒதுங்கியுள்ள இந்த முள்ளெலிகளை கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.


