திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதத்தில் 2ஆவது பௌர்ணமி நாளான நேற்று இரவு 7.54 மணிக்கு தொடங்கி இன்று வியாழக்கிழமை மாலை 5.32 மணி வரை உள்ளது. இதனால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரை மணலில் விளக்கேற்றி வழிபட்டனர். இதனால் கடற்கரை பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


