முள்ளக்காடு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சியுடன் புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம் முள்ளக்காடு ஆகிய 7 ஊராட்சிகளை இணைக்க பரிந்துரை செய்து சமீபத்தில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முள்ளக்காடு, கோரம்பள்ளம், மாப்பிள்ளையூரணி ஆகிய ஊராட்சிகளில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தூத்துக்குடி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இந்நிலையில் முள்ளக்காடு, கோரம்பள்ளம் ஆகிய ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைவரை சந்தித்து மனு அளித்தனர். முன்னதாக ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் சூழல்களை விளக்கி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என தெரிவித்தனர். இதேபோல் மற்ற அனைத்து ஊராட்சி மக்களும் வந்திருந்து அனைவரும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி திடீர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால்,ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு ஒரு சிலரை தவிர மற்றவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முள்ளக்காடு காமராஜர் மக்கள் சங்க நிறுவனர் கோகுல், உப்பு உற்பத்தியாளர் சிவாகர், ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சேகர், முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க செயலாளர் எஸ்.ரகுபதி என்ற சின்னராஜா, நிர்வாகிகள் விஜயகுமார், மகாராஜன், கணேசன், பொட்டல்காடு ஊர் தலைவர் ஜெயகிருஷ்ணன், பிரதிநிதிகள் மூர்த்தி, முத்துராஜ், முத்துகிருஷ்ணன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது உப்பு உற்பத்தியாளர் சிவாகர் கூறும் போது, எங்கள் பகுதியில் விவசாயம் மற்றும் உப்பள தொழிலை நம்பி கூலி வேலை செய்வோர்தான் அதிகம். எங்கள் ஊராட்சி மாநகராட்சியானால் வரி,வாடகை உயரும். பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். மேலும்,அருகிலுள்ள முத்தையாபுரம் அத்தி மரப்பட்டி ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்து வருகிறது.
நில வரிகள் பல மடங்கு உயர்த்தப்பட்டு 6 மாதத்திற்கு ஒரு முறையாக வரி வசூலிக்கப்படுகிறது, ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.25 ஆயிரம் கூடுதல் வரி செலுத்த வேண்டி உள்ளது, தீர்வையில் பாதாள சாக்கடைக்கு வசூலிக்கப்படுகிறது, ஆனால் மாநகராட்சி ஒரு இடத்தில் கூட வடிகால் அமைக்கவில்லை சிறு மழை பெய்தாலும் பிரதான சாலைகளில் தேங்கி நிற்கிறது. எனவே மாநகராட்சியால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. வரி சுமை தான் அதிகமாக இருக்கும்.
எங்கள் ஊரை சுற்றிலும் உப்பளம் உள்ளது இதனால் முள்ளக்காடு பொட்டல்காடு மக்கள் பாதிக்கப்படுவார்கள் பஞ்சாயத்து தலைவர் எங்கள் ஊரைச் சேர்ந்த நபரா இருப்பதால் எழுதில் பார்த்து பேச முடிகிறது, குறைகளை கூறி தீர்த்து வைக்க முடிகிறது. மாநகராட்சியானல் அதிகாரிகளை பார்த்து பேச தூத்துக்குடி சென்று அலைய வேண்டும். இது பெரியவர்களால் முடியாது.உடனே தீர்வு காணவும் முடியாது, இது போன்ற சிரமங்கள் நிறைய இருக்கிறது. எனவே எங்கள் ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று கூறினார்.


