தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 5வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளில் செப்.30ம் தேதி முதல் அக்.5ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்.ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், மருதன்வாழ்வு கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எட்வின் ஜெயதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் முனியசாமி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் கிராம வள பயிற்றுநர்கள் செபராணி, நாகேஸ்வரி, கலா முத்துச்செல்வி, ராமலட்சுமி, மல்லிகா, பணித்தள பொறுப்பாளர் முருகன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொறுப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.
இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் கலப்பைபட்டி, ஜம்புலிங்காபுரம் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


