தூத்துக்குடி தலைமை அஞ்சலத்தில் அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுரேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அஞ்சலக அடையாள அட்டை’ எனும் சேவை மூலம் பொதுமக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியுடன் புகைப்படமும் இடம் பெற்றிருக்கும். இதனை முகவரிச் சான்றாக வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் மற்றும் பல்வேறு தேவைகளுக்கும் சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அஞ்சலக அடையாள அட்டையினை பொதுமக்கள் அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்பபடிவத்தினை ரூ.20 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தப் பகுதி தபால்காரர் மூலம் சரிபார்க்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.250. பதிவுத் தபால் மூலம் பெறுவதற்கு ரூ.22/- அதிகமாக செலுத்த வேண்டும். இந்த அட்டை மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய இதனை ஒரு சான்றாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


