பெரியதாழை புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி நேற்று நடைபெற்றது.
பெரியதாழை புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா, கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் மாலை 6.30 மணிக்கு செட்டிவிளை பங்குத்தந்தை அந்தோணிதாஸ் அடிகளார் திருவிழா கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து மறையுரை நடைபெற்றது.
திருவிழா நாள்களில் தினமும் காலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்று வந்தன. 12ஆம் திருநாளான சனிக்கிழமை (செப். 21) மாலை ஆராதனையும், நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு பென்சிகர் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெற்றது.
பின்னர், காலை 10மணிக்கு புனித அந்தோணியார் சப்பர பவனி நடைபெற்றது. சப்பர பவனி ஊர் முழுவதும் வலம் வந்து, மாலை 6 மணிக்கு ஆலயத்தை வந்தடைந்தது. இரவு 7 மணிக்கு திருப்பலி ஆராதனையும், அதையடுத்து கொடியிறக்கமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை சுசீலன் தலைமையில் அந்தோணியார் சபை மக்கள், ஊர் கமிட்டியினர் செய்திருந்தனர்.


