தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைவருக்கும் நூறு நாள் வேலை கேட்டு மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டத்தில் பெண்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
அனைவருக்கும் 100 நாட்கள் வேலை உடனடியாக வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும், நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் கூலியாக வழங்க வேண்டும், கடந்த ஆண்டு சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், 100 நாள் வேலைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருங்குளம் ஒன்றியம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த போராட்டம் செய்துங்கநல்லூர் பஜாரில் இருந்து பேரணியாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் அவர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், வி.கோவில்பத்து, மணக்கரை, ஆழ்வார்கற்குளம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 350 பெண்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் ஒன்றிய ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தனர்.


