ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக இன்று(14ம் தேதி) மாலை மாபெரும் உணவுத்திருவிழா நடக்கிறது. இதில், பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பித்திடவேண்டும் என்று தாசில்தார் மற்றும் விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் ஆன்மீக நகரமாகவும், சிறந்த சுற்றுலா நகரமாகவும் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கல்பாலத்துடன் கூடிய அணைக்கட்டு, அணைக்கட்டு பகுதியில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வரும் அரியவகை பழந்தின்னி வவ்வால்கள் போன்றவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இதுபோக ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் அமைந்துள்ள நவதிருப்பதி பெருமாள் கோவில்கள், நவகைலாய சிவபெருமான் கோவில்களுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆன்மிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சம் என்பது ஸ்ரீவைகுண்டத்தில் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் கிராம உதயம் இணைந்து நடத்தும் தமிழ் புத்தாண்டு சித்திரை திருவிழா நாளை (14ம் தேதி) மாலை 4மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டுப்பகுதியில் நடைபெறுகிறது.
இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரியம்மிக்க தனிச்சுவையான, நாவில் தித்திக்கும் ருசியான, சத்துமிகுந்த பல்வேறு வகையான சைவம் மற்றும் அசைவ உணவுப்பொருட்களும், மகளிர்குழுவினரின் தயாரிப்புகளான கைவினைப்பொருட்கள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான பொருட்களை பொதுமக்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கிட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,செல்லப்பிராணிகள் கண்காட்சியாக பல்வேறு வகையான உயர்ரக நாய்களின் சிறப்பு கண்கவர் அணிவகுப்பும் நடைபெறுகிறது. செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பங்கேற்க விரும்புவர்கள் தங்களது பெயர்களை இன்று மதியம் 1மணியளவில் கண்டிப்பாக முன்பதிவு செய்திடுதல் வேண்டும் என்று விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரியம்மிக்க சிலம்பாட்டம், நோய்களை போக்கி நல்வாழ்வு தரும் யோகா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ&மாணவியர்களின் கிராமப்புற கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், ”எரிபொருள் சேமிப்பு, சாலைவிதிகளை மதித்தல், தேசப்பற்று” போன்றதை பொதுமக்களுக்கு எடுத்துரைத்திடும் வகையில் மாணவர்களின் விழிப்புணர்வு பிரமீடு வடிவிலான கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
மேலும், இதில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறையினர் தீ விபத்துக்களை பாதுகாப்பாக தடுத்து அணைப்பது குறித்தும், பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்தவர்கள் மக்களுக்கான தங்களின் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கின்றனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், சப்&கலெக்டர் பிரசாந்த் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் பேரூராட்சி நிர்வாகத்தினர், அரசுத்துறையினர், கிராம உதயம், வியாபாரிகள் சங்கத்தினர், தன்னார்வலர்கள், செல்லப்பிராணி வளர்ப்பர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விழாக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து தமிழ் புத்தாண்டான சித்திரை வருடப்பிறப்பை சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் உணவுத்திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று சிறப்பித்திடவேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் மற்றும் விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உணவுத்திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சகாயஜோஸ் மேற்பார்வையில், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சப்&இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், முருகபெருமாள், முத்துபட்டன் மற்றும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


