1757 – ஏழாண்டுப் போர்: பிரெடெரிக் தலைமையிலான புருசிய இராணுவம் பிராகா நகரில் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்தது.
1757 – பர்மிய உள்நாட்டுப் போர் (1740–1757) முடிவுக்கு வந்தது.
1782 – சியாம் மன்னர் முதலாம் இராமாவின் அறிவுறுத்தலின் பேரில் பெரிய அரண்மனையின் கட்டுமானப் பணிகள் பேங்காக் நகரில் ஆரம்பமாயின.
1840 – பென்னி பிளாக் அஞ்சல் தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
1853 – “த லிட்டரறி மிரர்” என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.
1854 – இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
1857 – பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டார்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சா அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.
1882 – சீனத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கும் சட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.
1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
1910 – ஐந்தாம் ஜோர்ஜ் அவரது தந்தை ஏழாம் எட்வேர்டின் இறப்பை அடுத்து ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினார்.
1916 – 21 லெபனான் தேசியவாதிகள் பெய்ரூட்டில் தூக்கிலிடப்பட்டனர்.
1916 – பிரெஞ்சு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வியட்நாம் பேரரசர் தூய் தான் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் ரீயூனியன் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1937 – இன்டன்பர்க் பேரிடர்: செருமனியின் இன்டன்பேர்க் என்ற வான்கப்பல் லேக்கேர்சுடு, நியூ செர்சியில் தீப்பிடித்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் சப்பானிடம் சரணடைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராகா நகரில் ஆரம்பமானது.
1954 – ரோஜர் பேனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1960 – வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இருந்து முதல் தடவையாக அரச திருமணம் ஒன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசி மார்கரெட், அந்தனி ஆர்ம்ஸ்ட்ரோங்-யோன்சு ஆகியோரின் திருமணத்தை 20 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.
1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முசுலிம் குடியரசுத் தலைவரானார்.
1975 – 100,000 ஆர்மீனியர் பெய்ரூட்டில் நடந்த ஆர்மீனிய இனப்படுகொலையின் 60-வது நினைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1976 – இத்தாலியில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 900-978 பேர் உயிரிழந்தனர்.
1984 – சியோல் நகரில் 103 கொரிய மாவீரர்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதர்களாக அறிவித்தார்.
1988 – நோர்வேயில் வானூர்தி ஒன்று டோர்காட்டன் மலையுடன் மோதியதி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 36 பேரும் உயிரிழந்தனர்.
1994 – ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கத்தை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், பிரெஞ்சு தலைவர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
2001 – சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் பள்ளிவாசல் ஒன்றிற்கு சென்றார். பள்ளிவாசலுக்கு சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார்.


