தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் ஒன்றானதும் செவ்வாய் கிரஹத்துக்கு அதிபதியாகவும் விளங்கும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவிலில் மூலவர் வைத்தமாநிதிப்பெருமாள் அருள்பாலிக்கின்றார்.
இங்கு ஆழ்வார்களில் 5வது ஆழ்வாராக போற்றப்படக்கூடிய மதுரகவியாழ்வார் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் திருஅவதாரம் செய்துள்ளார். இத்திருக்கோவிலில் மதுரகவியாழ்வருக்கென தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இத்திருத்தலத்தில் மதுரகவியாழ்வார் திருஅவதார விழா கடந்த 14ம் தேதி ஆரம்பமானது.
10 தினங்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுவாமி மதுரகவிஆழ்வா£ர் தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகின்றது. 5ம் திருநாளான இன்று மதுரகவிஆழ்வார் அன்ன வாகனத்திலும், வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், சிறப்பு பூஜைகள் நடத்தது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு அத்யாபக கோஷ்டியினர் பிரபந்த பாடல்களை பாட குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வைத்தமாநிதி பெருமாள் சுவாமி மதுரகவி ஆழ்வார் மாலை 6 மணியளவில் வீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. வருகின்ற 23 ம் தேதி ஆழ்வார் திருஅவதார தினம் சிறப்பாக நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்திருந்தனர்.


