கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அதிகாலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாளையங்கோட்டை, மேலபுத்தனேரியைச் சேர்ந்த முத்தையா மகன் சுடலைமணி என்பவர் ஓட்டி வந்தார். இதில் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநா¬லுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் கார்த்திக் ராஜா என்பவர் நடத்துனராக பணியில் இருந்துள்ளார்.
இந்த அரசு பேருந்து அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அடுத்த நவலெட்சுமிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட மர்மகும்பல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நின்று அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கியுள்ளது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் சுடலைமணி மற்றும் நடத்துனர் கார்த்திக்ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அரசு பேருந்து ஓட்டுநர் சுடலைமணி சுதாரித்துக் கொண்டு பேருந்தை வேகமாக ஓட்டியுள்ளார். பின்னால் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கியுள்ளது. இதில் பின்பக்க கண்ணாடியும் உடைந்தது.
பேருந்து ஓட்டுநர் ஆழ்வார்திருநகரி அரசு மருத்துவமனையில் பேருந்தை நிறுத்தி விட்டு இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதன்பின்னர் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் அரசு பேருந்து ஓட்டுநர் பயணிகள் அனைவரையும் திருச்செந்தூரில் கொண்டு இறக்கி விட்டு விட்டு ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நின்று அதிகாலையில் அரசு பேருந்து மீது கல்வீச காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் தாமிரபரணி ஆற்றில் மண் கடத்தலில் ஈடுபடும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதா? அல்லது கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதா? என்பதை அறிந்து உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


