தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு தேவையான அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து உள்ளது. தொடர்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் 31 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணி வரை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து வாக்குச்சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வாக்குப்பதிவின் போது தேவையான பொருட்களை தேர்தல் ஆணையத்தில் இருந்து சேகரித்து வருகின்றனர். அதன்படி அழியாத மை, பல்வேறு படிவங்கள் உள்ளிட்டவை தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
மேலும் சில பொருட்களை பெறுவதற்கான நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நோட்டீசு, போஸ்டர்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி, தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்குப்பதிவு எந்திரத்துடன் அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.


