ஜெமினி கணேசன் ( 16 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழகத்தின் புதுக்கோட்டையில் 16 நவம்பர் 1920இல் ராமசாமி ஐயர், கங்கம்மாள் இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். இவரது இயற்பெயர் கணபதிசுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய “கற்பகம்”, “சித்தி”, “பணமா பாசமா”, “சின்னஞ்சிறு உலகம்” ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.
புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், “மீண்ட சொர்க்கம்”, “சுமை தாங்கி” போன்ற பல படங்களை இயக்கினார்.
கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். “தாமரை நெஞ்சம்”, “பூவா தலையா”, “இரு கோடுகள்”, “வெள்ளி விழா”, “புன்னகை”, “கண்ணா நலமா”, “நான் அவனில்லை” எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. “நான் அவனில்லை” திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.
சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு காலமானார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் “காதல் மன்னன்” என்றே அழைத்தனர்.அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.


