தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே தட்டப்பாறை இடுகாடு உள்ளது. இங்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஈமத்தாழிகளைக் கொண்ட ஈமக்காட்டை சென்ற வாரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மாணவி கண்டுபிடித்தார். இதனை ஆய்வு செய்த பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் இந்த ஈமக்காட்டை ஒட்டி பண்டைய மக்களின் வாழ்விடம் இருக்கும் எனக் கணித்தனர்.
அதன் அடிப்படையில் இந்த இரண்டு பேராசிரியர்களுடன், தொல்லியல் பட்ட மேற்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களான பாலசண்முகசுந்தரம், முத்து அருள், இசக்கி செல்வம் ஆகியோருடன் தொல்லியல் துறைத் தலைவரான (பொறுப்பு) பேராசிரியர் சி.சுதாகரும் நேற்று அதிகாலை 7 மணிமுதல் களப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்த இடுகாட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 2200ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்விடம் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
இந்த இடம் கடையம் பேருந்து நிலையத்திற்கு மேற்கே உள்ள செங்கல் சூளைப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இதன் அருகே இராமநதி ஓடுகிறது.
இந்த பகுதியின் மேற்பரப்பில் பழமையான உடைந்த கிண்ணங்கள், நொறுங்கிய பானைகள், உடைந்த நிலையில் கைப்பிடியுடன் கூடிய மூடிகள், வேலைப்பாடு உடைய பானை வகைகள், தாங்கிகள், தட்டுகள் மற்றும் சட்டிகள் நிறையச் சிதறிக்கிடக்கிறன.உடைந்த பானை ஓடுகளைக் கல்லை உரசிச் செய்த வட்டுகள் கண்டுபிடித்தனர். இந்த பானை ஓடுகள் சிவப்பு, கருப்பு மற்றும் கருப்பு சிவப்பு ஆகிய நிறத்தைக் கொண்டவையாகவும் இருந்தன.
மூன்று மாணவர்களும் நிறையத் தொல்பொருட்களைச் சேகரித்தனர். அதனில் மிகச்சிறிய ஒரு தங்க வளையமும் அடக்கம். மேலும் இவர்கள் ஒரு தமிழி எழுத்தைத் தாங்கிய பானை ஓடு ஒன்றையும் கண்டுபிடித்தனர்.
இவற்றை எல்லாம் ஆய்வு செய்த தொல்லியல் பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் செழித்து ஓங்கி விளங்கிய ஒரு சமூகம் இந்த பகுதியில் 2200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளனர் எனத் தெரிவித்தனர். முறையான ஆய்வு செய்தால் இதன் காலம் மேலும் முன்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்
இந்த ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் மாணவர்களான பாலசண்முகசுந்தரம், முத்து அருள் மற்றும் இசக்கி செல்வம் ஆகியோர் முறையே பாளையங்கோட்டைக்கு அருகே உள்ள கேடிசி நகரிலும், இராஜ கோபாலபுரத்திலும், வி எம் சத்திரத்திலும் வசித்து வருகின்றனர்.
அடுத்து மேலப்பாவுர் மற்றும் அதன் அருகே உள்ள ஊர்களையும் சுற்றிப் பார்த்தோம். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஊர்கள் நம்மைச் சுற்றி நிறைவே உள்ளது என அறிந்து கொள்ள முடிந்தது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் சந்திரசேகர் இந்த மாணவர்களையும் பேராசிரியர்களையும் பாராட்டினார்



