செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார். கருங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் உதய சங்கர் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
செய்துங்கநல்லூரில் பாலக்காடு விரைவில் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி கனிமொழி எம்.பியிடம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் பேசுகையில்,
தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார். இவ்வளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ரூபாய் கூட கொடுத்துள்ளாரா என்று மனசாட்சியோடு பதில் சொல்லட்டும். இதுவரைக்கும் தமிழ்நாட்டிற்கென என்ன செய்துள்ளார். நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் சாமாணியனுக்கும் இவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள். வேலைவாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இன்று இருக்கும் நிலை.
பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்கு சதவீதம் உயர்ந்து வருவதாக வானதி சீனிவாசன் கூறிய கருத்திற்கு பதல் அளித்த அவர், கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று கூறியுள்ளார். கனவு காண்பது அவர்களது உரிமை. பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெரும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், விவசாய சங்க தலைவர் குமார், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் ஷேக் அப்துல் காதர், ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ், பண்ணை கரீம், தாடி மரியராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் கரீம், முருகன் மற்றும் ஒன்றிய திமுக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


