முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். எதிர்பாராத விதமாக அவனும் கொலையாகிறேன். அந்த பலியும் அவன் மேல் விழுகிறது. எனவே போலிசுக்கு பயந்து சென்னை ஓடுகிறான். அங்கு சுவாமி தாஸ் நாயுடு என்பவரை சந்திக்கிறான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் ஆங்கில பெண் ஒருவரையும் சந்திக்கிறான். அவளை மணம் முடித்து பர்மாவில் வாழுகிறான். அங்கே அவனுக்கு வெள்ளத்துரை என்ற மகன் பிறக்கிறான். கொலை குற்றத்தினை மறந்து செல்வச்செழிப்பாக வாழ்கிறது அந்த குடும்பம். ஆனால் இரண்டாம் உலகப்போரில் உடமைகளை எல்லாம் இழந்து சொந்த ஊருக்கு அகதிகளாக இவரது குடும்பம் வரும் நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில் மாரடைப்பால் ராஜத்துரை இறந்துபோகிறார். அவர் மகன் வெள்ளத்துரைக்கு சொந்த காரர்கள் பெண் தர மறுக்கிறார்கள்.
இனி.
65. உடன் கட்டை ஏறுவதை தடுத்த வெள்ளைக்காரன்
சிரித்துக்கொண்டே முத்துகிளி அருகில் சென்றான்.
அவளும் பதிலுக்கு சிரித்தாள்.
“என்ன முத்து கிளி நீங்க வந்துட்டீங்க”
“இல்லை. மாத்திரை வாங்கும் இடத்தில் ஆண்கள் கூட்டம் அதிகம் இருக்கும். பெண்கள் கூட்டம் குறைவாக இருக்கும். அதனால நீ போனா சீக்கிரம் மாத்திரை வாங்கலாமுன்னு அப்பாத்தான் அனுப்பினார்”.
மனதுக்குள் சந்தோசம். வாசுதாத்தா திட்டத்தினை முறியடித்து உள்ளார் ரத்னம் அய்யா. ரத்னம் அய்யாவும் தானும் முத்துக்கிளியும் ஒன்றாக சேருவதில் உடன்பாடு இருக்கிறது. ஆனாலும் அதை இவன் வெளிக்காட்டவில்லை.
“அதுக்கென்ன. நீங்க வரிசையில் நிக்கணுமா? நான் தான் நின்னு வாங்கிட்டு வந்திருவனே”.
“அதுக்கில்லை”. என இழுத்தாள்.
“ஏன். அதுக்கில்லைன்னு சொல்லுதீங்க”. முத்துக்கிளியின் கண்ணைப்பார்த்து பேசினான் சந்திரன்.
“இல்லை நீங்க இருக்கத்தண்டியும் வாங்கி தருவீங்க. மும்பை போயிட்டீங்கன்னா நான்தானே வாங்கனும்”.
அதிர்ந்தான்.
அப்போ முத்துகிளியும் தன்னை மும்பை விரட்டத்தான் தயாராக இருக்கிறாள். நாம் இங்கே இருப்போம். இவளை திருமணம் முடிப்போம். இந்த குடும்பத்தில் ஒருவனாக இருந்து சேவகம் செய்வோம் என்ற நம்பிக்கை இவளுக்கு கூட இல்லை. அப்படியென்றால் காரியம் முடிந்து விட்டது. எப்போது கிளம்ப போகிறாய் என வாசு தாத்தா கேட்டது போலவே கேட்கிறாள். என்ன அவர் வெளிப்படையாக கேட்பார். இவள் கொஞ்சம் அடக்கி வைத்து அமைதியாக கேட்கிறாள். அர்த்தம் ஒன்று தான்.
மனது வலித்தது.
அமைதியாக இருந்தான். இருவரும் மாத்திரை கொடுக்கும் இடத்தினை நோக்கி நகர்ந்தனர்.
அவன்சொன்ன படியே பெண்கள் வரிசையில் ஒரு பெண் மட்டுமே நின்று கொண்டிருந்தாள். ஆண்கள் வரிசை மிகப்பெரியதாக இருந்தது.
முத்துக்கிளி சென்று 5 நிமிடத்தில் மாத்திரை வாங்கி விட்டாள். சந்திரனுக்கு சேலை சுலபமாக முடிந்தது. ஆனால் இவனால் இந்த இடத்தில் என்ன பிரோயனம் என்பது போல , தான் ஒரு தேவையற்றவனாக அந்தஇடத்தில் தெரிந்தான். இந்த இடத்தில் தான் தேவையா என்பதுபோல் உணர்ந்தான். இந்த குடும்பத்தோடு தான் ஒட்டாமல் தவித்தான்.
இருவரும் லிப்ட்டுக்கு வந்தார்கள்.லிப்டில் கூட்டம் அதிகமாக இருந்தது . “சரி லிப்ட் போய் விட்டு வரட்டும்” என்று சந்திரன் சொன்னான். முத்துக்கிளியும் அமோதித்தாள். ஏதோ இப்போதாவது நமது சொல்லுக்கு தலையாட்டுகிறாளே என அர்ப்ப சந்தோசம். ஆனாலும் அதுவும் தொடர வில்லை. அடுத்து நிமிடமே அந்த கனவும் தகர்ந்தது.
லிப்டில் உள்ளவர் சொன்னார்.
“யாராவது ஒருவர் மட்டும் ஏறுங்கள். ஒருவருக்கு மட்டுமே இடம் உள்ளது”.
சந்திரன் யோசித்தான். “பராவயில்லை லிப்ட் போகட்டும், அடுத்த லிப்டில் போவோம்” என முத்துகிளி சொல்லுவாள். இரண்டு பேரும் ஒரே லிப்டில் சேர்ந்து போகலாம் என நினைத்தான்.
ஆனால் முத்துக்கிளி ஓடிப்போய் லிப்ட்டில் ஏறிவிட்டாள்.
லிப்ட் கதவை சாற்றிக்கொண்டு மேலே ஏறியது.
தனியாக அனாதையாக கீழே நின்று கொண்டிந்தான். தான் ஏதோ ஒரு பாதாளத்தில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். முத்துக்கிளி 7 வது மாடியில் மிக உயரத்தில் நின்று கொண்டிருந்தாள். இவனை எட்டிக்கூட பார்க்கவில்லை. இவன் எப்படி மேலே வரப்போகிறான் என்று கூட நினைக்கவில்லை. ம். ஒவ்வொரு சம்பவமும் முத்துக்கிளி தன்னை விட்டு பிரிந்து போவது போலவே தெரிகிறதே. எங்கே நாம் சேரப்போகிறோம். என முதல் முதலில் நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தான் சந்திரன்.
சேருவது போல் வந்தாள். ஆனாலும் ஒட்டியும் ஒட்டமாகத்தான் இருந்தாள். ஒரு நிமிடத்தில் பறந்துபோய் விட்டாளே. முத்துக்கிளி என்று பெயர் வைத்த காரணத்தினால் கிளி போல் பறந்து கொண்டே இருக்கிறாளோ?
யோசித்தான். வாசு தாத்தா மட்டும் தான் நம்மை பிரிக்கிறாள் என்றால் இந்த முத்துக்கிளி கூட நம்மோடு சேர வேண்டும் என்று நினைக்க மாட்டேன் என்கிறாளே.
இப்போது அவன் மனம் மிகவும் கனத்தது. அந்த பிரிவை அவனால் தாங்க இயலவில்லை. படபடவென்றுஅடித்த இதயம் நின்று விடும்போல இருந்தது.
இதயம் நின்று விட்டால், இதே ஆஸ்பத்திரியில் என்னை சிகிச்சைக்கு சேர்த்தால், இங்கே என்னை யார் பார்ப்பார்கள்?. நான் தான் அனாதை ஆச்சே. நான் மற்றவர்களுக்கு உதவலாம். எனக்கு யார் உதவுவார்கள்?. இந்த இடத்தில் தன்னை தானே உணர்ந்து கொள்ள இயலாமல் தவித்தான் சந்திரன்.
யோசித்தான். இது சரி படுமா? தாத்தா வேறு கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் அவர் நமது சாதியை விட்டே சென்று விட்டார். அப்பா வேறு என்ன பண்ணி வைச்சிருக்காரோ. முத்துக்கிளி கூட்டம் கூட நாங்கள் ஒரிசினல் நாடார் என்று கூறுகிறார்கள். இவர்கள் நமக்கு பெண் கட்டி தருவார்களா?
அட என் தாத்தாவுக்கு கூட ஒரு காதலியாக என் பாட்டி கிடைத்தார். எங்க அப்பா கூட கட்டிய பெண் காதலியாகத்தான் இருப்பாள் போல தெரிகிறது. ஆனால் எனக்கு காதலியாக நான் என் மனதுக்குள் வைத்து போற்றும் முத்துக்கிளி கிடைப்பாளா? அவள் நம்மை காதலிக்கிறாளா என்று கூட தெரியவில்லை. கண் இருண்டு கொண்டு வந்தது. தலை சுற்றி கீழே விழுந்து விடுவானோ என்பது போல இருந்தது.
இவளை நம்பி காத்து கிடக்கிறோம். நமக்கும் முத்துக்கிளிக்கும் என்ன சம்பந்தம். அவருடைய அப்பாவை ஏன் நாம் சுமக்க வேண்டும். அவருக்காக ஆஸ்பத்திரியில் காத்து கிடந்து காப்பாற்றி விட்டோம். பனையில் இருந்து விழுந்து இறந்த அவளது மாமாவுக்காக நான் ஏன் அலைய வேண்டும். அவருடைய சர்டிப்பிகேட் நான் வாங்கித் தரவேண்டும். நாம் எங்கிருந்து வந்தோம். ஏன் வந்தோம். வந்த இடத்துக்கு செல்ல வேண்டியது தானே. இங்கே ஏன்காத்துக் கிடக்கிறோம். என்ன நடக்கிறது. இந்த பூமியில் ஏதோ நடக்கிறது. அவளுக்கும் எனக்கு ஒரு முடிச்சை போட்டு வைக்கிறது. அந்த முடிச்சுத்தான் என்ன? ஒருவேளை எங்கள் இருவருக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. சரி கடைசி வரை முயற்சி செய்வோம். பெண்கள் காதலை மனதுக்குள் வளர்ப்பார்கள். ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள். அதுபோலவே இந்த கிளியும் காதலை வளர்ந்து வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இந்த கிளி என் மனதுக்கு பிடித்த கிளி. நிச்சயம் என்னை விட்டு பறந்து செல்லாது.
நம்பிக்கையோடு இருந்தான் சந்திரன்.
எனக்கு பிடித்திருக்கிறது. முத்துக்கிளியை பிடித்திருக்கிறது. எனக்கும் அவளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. அதானல் தான் இருவரும் ஒவ்வொரு சம்பவத்திலும் சேருகிறோம்.
நான் எங்கே இருந்தேன். எனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம். மும்பையில் இருந்தேன். நான் ஏன் முத்துக்கிளியை சந்தித்தேன். முத்துக்கிளியோடு பயணித்தேன். அவளோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் குடும்பமும், எங்கள் குடும்பமும் ஒரே இனம் என ஏன் கண்டுபிடித்தேன். அவள் என்னோடு இருந்தால் எனக்கு எவ்வளவோ சந்தோசம் வருகிறதே. அது ஏன்-?. அவளை தேடி அலைகிறேன். அவளை நினைத்து ஏங்குகிறேன். ஆனால் அவள் என்னோடு சேர்வாளா?.
மனம் என்பது குரங்கு என்பார்களே. இது மரத்துக்கு மரம் தாவுகிறதே. அவள் காதல் உண்மையா? பொய்யா? என அறியா முடியாமல் தவிக்கிறதே.
யோசித்தப்படியே நடந்தான். மாடிப்படி வழியாக நடந்தான். யோசித்தான். லிப்ட் அருகில் வந்து நின்றது. ஆனால் அதில் ஏற மனது இல்லை. படி வழியே ஏறினான். மாத்திரை வாங்க வரும் போது ரத்தினம் அய்யாவின் ரிக்கார்டு முழுவதும் அவனிடம் இருந்தது. எனவே அவரின் நெருக்கமானவனாக உணர்ந்தான். ஆனால் தற்போது அந்த மாத்திரை சீட்டு கூட இவனிடம் இல்லை முத்துக்கிளியிடம் போய் விட்டது. தற்போது எதுவும் இல்லாமல் நடந்து போய் கொண்டிருந்தான். எல்லா வற்றையும் இழந்து விட்டான். இப்போது நான் டாக்ஸி டிரைவர் இந்த குடும்பத்துக்கும் எனக்கும் அது மட்டும்தான் சம்பந்தம் மற்ற படி ஒன்றுமே இல்லை. ஆனால் டாக்ஸி டிரைவர் கார் பக்கத்தில் தான் நிற்க வேண்டும். சவாரி வரும் போது கார் கதவை திறந்து விட வேண்டும். ஆனால் தேவையில்லாமல் ஓடி ஓடி அவர்களுக்கு உழைக்கிறோம்?
டேய் மும்பை காரா உனக்கு முத்துக்கிளிக்கும் ஒட்டவே ஒட்டாதுடா? ஓடிரு மும்பையை பார்த்து ஓடிரு. அங்க ஒரு குரங்கு காரியோ, பையா காரியோ, குஜராத்திகாரியோ உனக்காக காத்துக்கிட்டு இருப்பா. அதை விட்டுட்டு முத்துக்கிளிக்கு ஆசைப்படாதே. இவனுடைய மனம் இவனை நோக்கி கைகொட்டி சிரித்தது. இதையே மற்றொரு பக்கம் நின்று வாசுதாத்தா சொல்வது போலவே உணர்ந்தான்.
ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் மனது சொன்னது. “இல்லை. எங்கள் இரண்டு பேருக்கும் ஏதோ உறவு இருக்கிறது. அதனால் தான் இந்த பயணம். கொரோனா காலத்தில் இருந்து துவங்கிய இந்த பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயம் நாங்கள் இருவரும் சேர்ந்து விடுவோம். நிச்சயம் முத்துக்கிளியோடு சேரும் காலம் மிக அருகாமையில் உள்ளது. நிச்சயம் சேர்ந்துவிடுவோம்.
நம்பிக்கையோடு மாடி ஏறினான். ஆம். சில நிமிடத்தில் மாடிக்கு வந்து விட்டான். அதற்குள் எக்கோ எடுக்க ரத்னம் அய்யாவை கூட்டிக்கொண்டு முத்துக்கிளி சென்றாள். அதற்கு கூட சந்திரன் வரட்டும் என காத்து இருக்கவில்லை. அதுதான் சொன்னாளே. நீங்கள் மும்பைக்கு போய் விட்டால், எங்கள் வேலையை நாங்கள்தானே பார்க்கவேண்டும் என்றாளே.
அமைதியானான். அவள் எக்கோ எடுக்கட்டும் என அருகில் உள்ள இடத்திற்கு வந்தான் அங்கு வாசு நின்றார்.
“என்னடே லிப்டில இரண்டு பேரும் ஒண்ணா வரலாமுன்னு நினைச்சியளா? முடிஞ்சுதா?”
அமைதியாக இருந்தான். இவர் வேறே சும்மா இருக்க மாட்டார். ஏதாவது சொல்லி நம்மை மிகவும் வெறுப்பேற்றி விடுகிறார்.
மனுசன் வயது என்ன? இப்படி காதலுக்கு ஒரு வில்லத்தனம் பண்ணுறாறே. முதல் முதலுல அறிமுகம் ஆகும் போது காமடி நடிகர் போல அல்லவா? அறிமுகம் ஆனாரு. அவர் கிட்ட பேசிக்கிட்டு இருப்பதே ஆனந்தம் தானே. ஆனா இப்போ இப்படி ஆகி விட்டாரே. வில்லன் என்றால் இதுபோன்ற ஒரு கொடுற வில்லைனை பார்க்கவில்லை. பேசும் போது கூட மனதை காயப்படுத்துவதுபோலவே பேசுகிறார். மனுசனா இவர்.
“என்னடே பதிலே பேச மாட்டுக்க”.
“தாத்தா நானே நொந்து போய் இருக்கேன்”.
“இதுல நொந்து போக என்னடே இருக்கு. நான் தான் ஆரம்பத்தில இருந்தே சொல்லுதேனே. முத்துக்கிளி உனக்கு கிடைக்க மாட்டா. அதைதான் நான் சொல்லுதேன்”. எக்காள சிரிப்புடன் பேசினார்.
அமைதியாக இருந்தான் சந்திரன்.
“ரத்தினத்தை கொண்டு போய் வீட்டுல விடு. அடுத்து மும்பைக்கு போக ரெடியாகு. உனக்கு வேணுமுன்னா மும்பை போக பெட்ரோல் காசு என்ன? வாடகையை தாரேன். வாங்கிட்டு உடனே ஓடிப்போயிரு”.
சந்திரன் பேச வில்லை.
“ஆனா எப்படியோடே. இந்த மனுசன் உயிரை நீ தான் காப்பாத்தி இருக்க. அதனால இந்த குடும்பத்துக்காரங்க எப்போதும் உன் கிட்ட நன்றி விசுவாசமாத்தான் இருப்பாவ”
வாசு தாத்தா சொல்வது எதுவும் அவன் காதில் ஏறவில்லை.
அவன் மனதில் மட்டும் கற்பனை ஓடியது. இந்த மனுசன் இப்படி சொல்வதற்கு இதே ஊரில் இருந்து முத்துக்கிளியை கரம் பிடித்து , ரத்னம் அய்யா வீட்டு மருமகனாக இந்த ஊரில் வலம் வரவேண்டும். நிச்சயம் வலம் வருவேன்.
மனதில் உறுதியாகிக்கொண்டான்.
அடுத்த நிமிடம் அவரை விட்டு வெளியே கிளம்பினான். அருகில் நின்ற சன்னலில் நின்று வெளியே பார்த்தான்.
தூரத்தில் நோயாளிகள் உறவுகள் இல்லாமல் தனியாக நடந்து வருவதையும், அவர்கள் ஆதரவு இன்றி தவிப்பதையும் பார்த்தான். ஏன் இவர்களுக்கு ஒரு உறவு கூட கிடையாதோ?. நம்மை போன்று அனாதைகளோ. உறவு , பெரிய குடும்பம் தொடர்ப்பு இவையெல்லாம் இருந்தால் மட்டும்தான் இந்த உலகில் நல்ல வாழ்க்கையாக இருக்கும். இதுபோன்ற ஒரு வாழ்க்கை எனக்கு கிடைக்குமா?
நாமும் ஒரு காலத்தில் உறவு இல்லாமல் தனியாக இருந்தால் இப்படித்தான் நிலமை ஏற்பட்டு விடுமோ? ம். நமக்கு ஏன் அந்த பிரச்சனை வரப்போகிறது. நிச்சயம் முத்துக்கிளி எனக்கு துணையாக வருவாள். எதிர்காலம் நிச்சயம் நன்றாக இருக்கும்.
முத்துக்கிளி தனது தந்தையின் ஆணைக்காக காத்து இருக்கிறாள். நிச்சயம் அவளுக்கு என்னை பிடிக்கும். ஆனால் மறைத்துக்கொண்டிருக்கிறாள். இதற்கு நிச்சயம் முடிவு கிடைக்கும்.
முத்துக்கிளி என்னோடு சேருவாள் என்பது நம்பிக்கை உள்ளது. ஆனால் அந்த நம்பிக்கை நிறைவேறுமா? பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
சிறிது நேரத்தில் எக்கோ எடுத்து வெளியே வந்தார்கள். வெளியே வந்தார் ரத்னம். “டாக்டர் எந்த பிரச்சனையும் இல்லை” என்று சொல்லிவிட்டார் என இவனை பார்த்து சிரித்தார்.
பெரிய டாக்டர் வந்தார். திரும்பவும் சோதனை. “சரி. எல்லாம் நன்றாக இருக்கிறது. நீங்கள் வீட்டுக்கு போகலாம்” என கூறிவிட்டார்.
ரத்னம் அய்யாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
அடுத்த 10 வது நிமிடம் பெண் தொழிலாளி ஒருவர் தள்ளு வண்டி கொண்டு வர அதில் ரத்னம் அய்யா ஏறினார். அவரை ஆஸ்பத்திரிக்கு வெளியே கொண்டு வந்தார்கள். அதற்குள் கீழே ஓடி வந்த சந்திரன் காரை கொண்டு சரியாக விட்டான்.
தொடர்ந்து ரத்னம் அய்யாவை காரில் ஏற்றினான். முன் சீட்டில் அவரை ஏற்றிக்கொண்டான். லக்கேஜ்ஜை பின்னால் வைத்து கொண்டான். பின் சீட்டில் வாசு தாத்தாவும் முத்துக்கிளியும் ஏறினார்கள்.
அதன் பின் கார் கிளம்பியது.
ரோட்டுக்கு வந்தார்கள். “யய்யா காருக்கு ஆயில் போட்டுக்காய்யா”.
அவர் ஆயில் என்று சொல்வது பெட்ரோல் போடுவதை பற்றி. மறுத்தான் சந்திரன்.
“வேண்டாமுய்யா. ஏற்கனவே நான் போட்டுகிட்டேன்”.
“முத்துக்கிளிக்கிட்ட பைசா வாங்கினீயா?”
சத்தம் காட்டவில்லை. யாரும் பேசவில்லை.
“என்ன முத்துக்கிளி சந்திரன் தம்பிக்கு பணம் கொடுத்தீயா?”
“இல்லை அப்பா”
“ஏன்?”
“கேட்கலை”.
“கேட்டாத்தான் கொடுக்கணுமா?”
முத்துக்கிளி அமைதியானாள். அவர்களோடு அமைனவரும் அமைதியாக இருந்தார்கள்.
“ஒரு மனுசன் உடல் உழைப்பைத்தான் கொடுப்பான். பணம் கையில் இருந்தா போடுவான்”.
சந்திரன் தடுத்தான்.
“இல்லைய்யா. பராவயில்லை. உங்களுக்குத்தான் செய்யுறேன். விட்டுருங்க”.
வாசு உள்ளே புகுந்தார்.
“கணக்குன்னா கணக்கு சரியா இருக்கும். இங்கே பாருடே ரத்னம் தாயும் பிள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிரும் வேறேன்னு சொல்லுவா? இங்க அவன் யாரோ நம்ம யாரோ. அதனால காசு பணத்தை கரெக்டா கொடுத்துரு”.
சந்திரன் மனதுக்குள் மீண்டும் சவுக்கடி. “நான் யாரோ நீங்கள் யாரோ. உங்களுக்கு எனக்கும் என்ன தொடர்பு”.
சவுக்கடி மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டே இருந்தது. வாசு சுழற்றி அடிக்கிறார்.
“இங்க பாருடே ரத்தினம். உனக்கு சேவகம் பாக்க இங்கேயே கிடந்துட்டான், சந்திரன். அவன் மும்பை போயிருந்தா கூட அவனுக்கு ஏதாவது சம்பாத்தியம் நடந்து இருக்கும். ஆனால அவன் உன்னை பாக்க இங்கேயே கிடந்துட்டான். அதனால நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ. அவனுக்கு கை நிறைய பணத்தை கொடுத்து மும்பைக்கு அனுப்பி வை”.
சந்திரன் கண்கள் சிவந்தது. “அவ்வளவு தானா. அப்போ எனக்கும் இந்த குடும்பத்துக்கும் ஒண்ணுமே இல்லையா?”
அமைதியாக இருந்தான்.
முன் கண்ணாடி வழியாக பின் சீட்டை பார்த்தான். முத்துகிளி முகம் தெரிந்தது. எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருந்தாள். என்ன பெண் இவள். ஒன்னு நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லி விட வேண்டும். கல்லூரி மங்கன். கடம்பாறையை விழுங்கின மாதிரியே முழிக்கு பாரு. சந்திரனுக்கு கோபம் வந்தது.
இவன் கண்ணாடி வழியாக முத்துக்கிளியை பார்க்கிறான் என வாசு பார்த்துக்கொண்டார்.
“என்ன முத்துகிளி, சன்னல் ஓரம் உட்காரு அப்போத்தான் காத்து வரும்” என்று அவளை விரட்டி விட்டார். கண்ணாடியில் இவர் முகம் தெரியும் படி அமர்ந்து அலவம் காட்டினார்.
“சீ. சிவ பூஜையில் ஏன் இந்த கரடி நுழைகிறது”.
சந்திரனுக்கு வேதனை வந்தது.
கார் வேகமான மெயின்ரோட்டில் ஏறி, கிராமத்துக்கு வந்தது.
காரை வீட்டு முன் நிறுத்தினான்.
பையன் ஓடியே வந்தான். “சந்திரன் அண்ணாச்சியோ. எப்படி இருக்கீய. எவ்வளவு நாளாச்சி உங்களை பாத்து. எத்தனை நாளு தங்குவிய. பருத்தி வியாபாரி தங்கிற இடத்திலத்தானே தங்கபோறீய”, பல கேள்வி கேட்டான்.
இவன் என்ன பதில் சொல்லப்போகிறான். இவர்கள் கூட இருக்கப்போகிறானோ. இல்லையோ. இல்லை இன்றே கிளம்ப போகிறானோ. தெரியவில்லை.
யோசித்தான்.
“இன்னைக்கு மட்டும் இங்க தங்குவேன் போல” என்றார்.
காரில் ரத்னம், முத்துக்கிளி, வாசு மூன்று பேரையும் இறக்கி விட்டு , அந்த அறையை நோக்கி கிளம்பினான். பம்பு செட்டுக்கு சென்றான். நன்றாக குளித்தான்.
காலையில் டிபன் வந்திருந்தது. சாப்பிட்டான்.
இன்று அவனுக்கு முத்துக்கிளி சாப்பாடு சுவையை தரவில்லை. ஏனோ தானோ என்பது போலவே இருந்தது.
வேகமாக கிளம்பினான். அகஸ்தீஸ்வரன் சாரை பார்க்க வேண்டும். அவரிடம் நமது அப்பாவின் வரலாற்றை கேட்க வேண்டும். அது முக்கியம். அதன் பிறகு முத்துக்கிளி முடிவை கேட்க வேண்டும். அதன் பிறகு முடிவு பண்ணுவோம்.
முதலில் அகஸ்தீஸ்வரன் சாரை பார்க்க வேண்டும்.
காரில் கிளம்பி ஆயத்தமாகிவிட்டான் . பையன் ஓடியே வந்தான். “என்ன அண்ணாச்சி கிளம்பிட்டிய. இன்னைக்கு அக்கா மீன் குழம்பு வைக்க போறாவ. சூப்பரா இருக்கும் சாப்பிட்டுட்டு போங்க”.
மனதுக்குள் நினைத்தான்.
பாவம் இவன் என்னை சாப்பாட்டு ராமன் என நினைத்துக்கொண்டான். இவனுக்கு என்னுடைய காதல் எங்கே தெரியப்போகிறது. தெரிந்தாலும் இவன் என்னப் பண்ணப்போகிறான்.
சிரித்தான் சந்திரன். “தம்பி பக்கத்து டவுணுல கொஞ்சம் வேலை. நான் போயிட்டு வாறேன்”.
“சரி அண்ணாச்சி. அய்யா கிட்ட சொன்னீயளா?”
“இல்லை. வந்து சொல்லிக்கிடுதேன்”. இப்போது அவரை பார்த்து வழி அனுப்பும் மனநிலையெல்லாம் சந்திரனிடம் இல்லை.
“சரி போயிட்டு வாங்க”. பையன் டாட்டா காட்டினான்.
கார் கிளம்பியது.
ரத்னம் அய்யாவை பார்க்க ஊர் ஜனங்க நிறைய பேர் வந்திருந்தார்கள்.
இது தான் கிராமம். என்ன தான் பிரச்சனை என்னாலும் துக்கம், சந்தோசம் இரண்டு விசயங்களிலும் கூடி விடுவார்கள். இந்த ஊரில் இத்தனை பேர் இருக்கிறார்களா? என்பது இன்னைக்குத்தான் சந்திரனுக்கு தெரிந்தது. உறவு காரர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் வயல் வெளியில் வேலை பார்த்தவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். சாதி சமயம் வேறுபாடு அங்கில்லை. ஒரு மனிதன் உடல் சரியில்லாமல் இருக்கும் போது அவனை பார்க்கவரும் மனிதர்களை வைத்து இவன் எப்படி பட்டவன் என கணித்து விடலாம்.
“ம் அய்யா உறவுகள் நிறைந்தவர்கள். நாம் அனாதை. அவர் குடும்பத்தில் நான் ஒருவராக சேர்ந்து கொண்டால் நானும் உறவுகள் நிறைந்தவர்களாகி விடுவேன். அந்த வாய்ப்பு கிடைக்குமா?. எத்தனை பேருக்கு நல்ல செய்திருக்கிறார் அய்யா. அதனால் தான் இத்தனை பேர் கூட்டமாக வந்து பார்க்கிறார்கள். இவர்களை போல என் வாழ்க்கையிலும் அய்யா ஒளியேற்றி வைப்பாரா?”
கண்களில் கண்ணீர் குளமாக வடியஆரம்பித்தது. அதை தவிர்த்துக்கொண்டு கிளம்பினான்.
அடுத்த 15 வது நிமிடத்தில் டவுண் வந்தான். அகஸ்தீஸ்வரன் சாருக்கு போன் செய்தான். எதிர் முனையில் அவர் போனை எடுத்தார்.
“ஏடே சந்திரா என்னடே எங்க இருக்க. என்ன பகலுல உனக்கு நேரம் போவலையா?”
ம். நேரம் போகவா உம்ம கிட்ட பேசுதேன். மனதுக்குள் நொந்து கொண்டான்.
“இல்லை சார்வாள் . அய்யா டிச்சார்ஸ் ஆகி போயிட்டாவ. நான் வீட்டில கொண்டு போய் விட்ட்டுடு வந்துட்டேன். அதான். நீங்க எங்க இருக்கியன்னு பாத்து பேசிட்டு போவலாமுன்னு நினைச்சேன்”.
சத்தமாக சிரித்தார்.
“தாத்தா கதையை கேட்டு அசந்துபோயிட்ட, இப்போ அப்பா கதையை கேட்க ஆர்வமாக இருக்க. வாடே. இங்கதான் இருக்கேன் வா”.
“இங்கன்னா எங்க சார்வாள்”
“நான் எங்கடே போவேன். கழுதை கெட்டா குட்டிச்சுவரு. அங்கன அப்படியே சமாதான புரம் வா, கொஞ்சம் தள்ளி எஸ்.பி அபீஷ் இருக்கு. அதையும் தாண்டி ஜான்ஸ் காலேஸ் இருக்கு. அதுக்கு எதுத்தாப்புல இங்கிலிஷ் சர்ச் ரோடு இருக்கு. அந்த வழியா வந்தா கிளாரிந்தா சர்ச் இருக்கும். வா. அங்கதாண்டே நிக்கன்”.
கூகுள் மேப்பில் கிளாரிந்தா சர்ச் என போட்டான். அது பாதை காட்டியது.
“என்னடே நான் சொல்லுத பாதை புரியுதா?”
“புரியுதுய்யா”.
“அது எப்படிடே புரியும் . நல்லா தெரிஞ்சவுயளே. பரக்க பரக்க முழிப்பாவ. நீ. எப்படிடே கண்டு பிடிப்ப”.
“நான் கண்டு பிடிக்கேனோ இல்லையோ. கூகுள் மேப் கண்டு பிடிச்சிருமுய்யா”.சோகமாக சிரித்தான்.
“புரியலை”.
“ என்னோட போன்ல ஒரு ஆப் இருக்குதுய்யா. போனிலு அதை போட்டா நீங்க இருக்கிற இடத்தை காட்டுது”.
“அப்படி போடு அருவாளை” சிரித்தார்.
“அந்த காலத்தில சினிமா பாட்டில வருமுடே. இவ்வளவு தான் உலகம் இவ்வளவுதான். நாகேஷ் படிப்பாருடே. அந்த மாரியில்லா இருக்கு. கூகுள் கதை. சரி சரி வா. சாப்பிட்டியாடே”.
இவராவது சாப்பிட்டியான்னு கேட்க இருக்காரே. மனதுக்குள் சந்தோசப்பட்டான்.
“சாப்பிட்டேன் சார்வாள்”.
“சரி அப்படின்னா வா. இன்னைக்கு உன் குடும்ப கதையை சொல்லி முடிச்சிருதேன்”.
*****
அடுத்த 10 வது நிமிடம் கிளாரிந்தா சர்ச் அருகில் கார் வந்து நின்றது. சந்திரன் இறங்கி நடந்தான். அங்கே அகஸ்தீஸ்வரன் சார் சிரித்துக்கொண்டே நின்றார்.
இருவரும் அங்கு இருந்த ஒரு கல்லறை அருகில் போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்தனர். பலர் உள்ளே சென்று ஜெபம் செய்து கொண்டிருந்தனர். இவனுக்கு அகஸ்தீஸ்வரன் சாரை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து கதற வேண்டும் போல இருந்தது.
யோசித்தான். வேண்டாம் அடக்கி கொள்வோம்.
“சார்வாள். என் வாழ்க்கையில முக்கிய கட்டம் வந்துட்டுன்னு நினைக்கேன். அதுக்கு நான் தீர்க்கமா ஒரு முடிவு எடுக்கணும். அதுக்கு என் குடும்ப கதை தெரியனும். உங்க மூலமாக என் தாத்தா ராஜத்துரை கதை தெரிஞ்சிட்டேன். ரொம்ப சந்தோசம். அவரு பெரிய தியாகி. நீங்க சொல்லி தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா என் அப்பா என்ன பண்ணினாருன்னு எனக்கு தெரியலை. அதை தான் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்”.
சிரித்தார். “பாவம் உன் அப்பா. தேனிலா மேலே உயிரா இருந்தாரு. உறவுக்கார பெண். அவளை எப்படியும் மணமுடிச்சி தருவாங்கன்னு நினைச்சாரு. ஆனா அவளை இவருக்கு மனமுடிச்சி தரஅவளோடு அப்பா ஒத்துக்கலை. இதுக்கெல்லாம் காரணம் அந்த சிவராம அய்யர்த்தான்னு நினைச்சி நொந்தே போயிட்டாரு”.
பெருமூச்சி விட்டார் அகஸ்தீஸ்வரன்.
அதனால அவர் ஒரு முடிவு செஞ்சாரு. சிவராம அய்யரை சந்திக்கணுமுன்னு கிளம்பிட்டாரு.
சந்திரன் அமைதியாக இருந்தான்.
அந்த சமயத்தில் கிளாரிந்தா ஆலயத்தில் அதிகமானவர்கள் வந்து ஜெபம் செய்து கொண்டிருந்தனர். சற்று தொலைவில் இருந்த ஒருவர் அகஸ்தீஸ்வரன் சாரை பார்த்தவுடன் அருகில் வந்தார். “வாத்தியாரே. அன்னைக்கே இந்த கிளாரிந்தா சர்ச் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். அதுக்குள்ள யாரோ வந்தாங்கன்னு பேச்சை நிறுத்திட்டிய”.
அவர் அருகில் வந்து அமர்ந்தார்.
அகஸ்தீஸ்வரன் சாருக்கு இருதலை கொல்லி போல இருந்தது. சந்திரனுக்கு அவன் அப்பா கதை முக்கியம் இந்த பெரியவருக்கு கிளாரிந்தா கதை முக்கியம் எந்த கதையை முதலில் சொல்ல. ஆனால் கிளாரிந்தா அம்மா மட்டும் திருநெல்வேலிக்கு வரவில்லையென்றால் பல நாடார்கள் வரலாறு வெளியே தெரியாமலேயே போயிருக்கும். அதுமட்டுமில்ல. கிளாரிந்தாவும் கிட்டத்தட்ட சந்திரனோட அப்பா வெள்ளத்துரையை மாதிரி கஷ்டப்பட்டாவ. அதனால அவுகளை பத்தி சொல்லுவது தான் நல்லது என நினைத்தார்.
“இங்க பாரு சந்திரா உன் குடும்ப கதை கிட்டத்தட்ட இந்த கிளாரிந்தா அம்மா கதை மாதிரித்தான். நாம தெரிஞ்சோ தெரியாமலேயே உன் குடும்ப கதையை பேச இந்த சர்ச் வந்திட்டோம். அதனால முதலில் நான் கிளாரிந்தா வரலாற்றை சொல்லிட்டு, அப்படியே உன் குடும்ப கதையையும் சொல்லுதேன்”. என்றார்.
சந்திரனுக்கு மனவருத்தம் தான். “இன்னைக்கோடு நம்ம அப்பா வரலாற்றை வாங்கிட்டு, தன்னோட காதல் வரலாற்றுக்கு என்ன முடிவு எடுக்கலாமுன்னு ஒரு முடிவுக்கு வந்திரலாமுன்னு நினைச்சான். ஆனால் அதற்குள் மற்றுமொரு முட்டுக்கட்டை . பராவாயில்லை. இந்த வாத்தியாரை விட்டுட்டா இனிமே நமக்கு கதை சொல்ல யாரு இருக்கா”.
“சரி சார்வாள். நீங்க கிளாரிந்தா அம்மா வரலாற்றை சொல்லுங்க”.
அவன் கண்களில் ஏமாற்றம் இருந்தது. ஆனாலும் அதை வெளிகாட்டவில்லை. அகஸ்தீஸ்வரன் சாருக்கும் அது புரிந்தது. ஆனால் இவன் குடும்ப கதைக்கும் கிளாரிந்தா கதைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எனவே கிளாரிந்தா கதையை பற்றி பேசலாம் என முடிவு செய்து பேச ஆரம்பித்தார்.
அந்த வரலாறு நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது.
அந்த காலம் கிட்டத்தட்ட சுமார் 1778 ஆம் ஆண்டு காலமிருக்கும். திருநெல்வேலியில் கிறிஸ்தவ மதம், அதுவும் சீர்சிருத்த கிருஸ்தவ மதம் திருநெல்வேலியில் கால் ஊன்றாத காலகட்டம். இங்கு அந்த மதத்தை பரப்ப ஒவ்வொரு மேலை நாட்டுக்காரங்க வர ஆரம்பிச்சாங்க. அப்போ இங்க கத்தோலிக்க மதம் இருந்துச்சு. அதெல்லாம் கடற்கரையிலும், காமன்நாயக்கன்பட்டியிலும் தான் இருந்துச்சு. பாளையங்கோட்டையில அவ்வளவா வளரல.
அப்பொல்லாம் ஐரோப்பியர்கள் மேல் திருநெல்வேலி மக்களுக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. ஏன்னுன்னா அவர்கள் செயல் இவர்களுக்கு பிடிக்கவில்லை. கலாச்சாரமும் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் ஐரோப்பியரின் கூடாத செயல்தான். வெகு தொலைவில் இருந்து வந்த ஐரோப்பிய காலாட்படை, கப்பல் படை, வீரர்களுக்குத் தங்கள் குடும்பத்தைக் கூட்டிவர அனுமதி இல்லை. எனவே அவர்கள் இங்கு வந்து மிக மோசமாக அலைந்தார்கள். அவர்கள் காய்ந்த மாடு கட்டையில் விழுந்ததைப்போல “குடியும் கூத்துமாக” வெறி ஆட்டம் போட்டனர். இதனால் நம்ம நாட்டில் இருந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே தங்களது பெண்களை அவர்களிடம் இருந்து காப்பாற்றவே படாத பாடு பட்டனர்.
இதுபோன்ற வெள்ளை வெறியர்கள் தமிழகத்தில் கிறிஸ்தவ சமயம் பரவுவதற்கு தடையாக இருந்தனர் என்பதை சுவார்ட்சு அய்யர் உணர்ந்தாரு. ஆங்கிலேய கம்பெனியின் இருந்த ஐரோப்பியருக்கு இந்திய காலச்சாரத்தினை கூறும் விதமாக ஆன்மிக போதனை கொடுத்தாரு. பட்டாளத்தில் பணியாற்றிய தமிழர்கள் சிலர் முக்கியமாக கத்தோலிக்கர் மனம் மாறி சீர்திருத்த கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக் கொண்டனர். படை முகாம்களில் தங்கியிருந்த அந்த வீரர்களுக்கு சுவார்ட்சு ஆறுதல் அளித்தார். தேறுதல் வார்த்தைகள் சொன்னார். சுவார்ட்சு அய்யர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது அவர்களைக் கவர்ந்திருந்தது. இவ்விதமாக ஐரோப்பிய டேனிஷ் லூத்தரன் மிஷன் கொண்டு வந்த சீர்திருத்த கிறிஸ்தவ சமயம், தரங்கம் பாடியிலிருந்து தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் பரவும் வாய்ப்பும் ஏற்பட்டது.
சந்திரன் தான் இடம் மறித்தான். “அது என்ன சார்வாள் அய்யர் அய்யருன்னு சொல்லுதீயளே. அவர் என்ன பிராமணரா?”
“அடப்போப்பா. அந்த காலத்தில நம்ம ஊரு அய்யர் மாரு. இங்க இருக்கிற நாடாருமார பாடப்படுத்துனாவ. கோயிலுக்குள்ள உட மாட்டாவ. அதனால தங்களுக்கும் ஒரு குருமாரு அய்யர் மாரி வரணுமுன்னு இங்க உள்ள நாடார் மக்க ஆசைப்பட்டாவ. இங்கிலிஷ் கார பாதிரியார்கள் நல்லா சிவப்பா, அய்யர் மாதிரியே இருப்பாவ. அவுகளும் சர்ச்சில பூஜைத்தானே வச்சாவ. அதனால இவியளை அய்யருன்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டாவ. அதனாலத்தான் நானும் பாதிரியாருன்னு சொல்லாம அய்யருன்னு சொல்லுதேன்” என்றார்.
“ஒ நம்ம ஊரு அய்யர் குடும்பி வைச்ச அய்யர். வெளிநாட்டு அய்யர் அங்கிப் போட்ட அய்யர். அவரு பூணூல் போட மாட்டார். குடும்பி வைக்க மாட்டார்”. சந்திரன் சிரித்தான். “சரி சார்வாள் அந்த கதையையும் சீக்கிரம் சொல்லுங்க. சொல்லிட்டு எங்க அப்பா கதையையும் இன்னைக்குள்ள சொல்லி முடிச்சிருங்க” என அவசரப்பட்டான்.
பாவம் அவனுக்கு அவன் குடும்ப கதை முழுவதுமாக தெரியவேண்டும். எனவே தொடர்ந்தார் அகஸ்தீஸ்வரன்.
சுவார்ட்ஸ் அய்யர் எஸ்.பி.சி.கே. சங்கத்தினரின் அனுமதிபடி 1778 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் ஒரு மிஷன் நிலையம் ஏற்படுத்தி சாகும் வரை அங்கேயே குடியிருந்தாரு. சுவார்ட்ஸ் அய்யர் ஜெர்மன், ஆங்கிலம், தமிழ், பாராஸிகம், இந்துஸ்தானி, மராத்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி உடையவராக இருந்தாரு. இதனால் அவர் இஸ்லாமிய மன்னருடனும், நவாப்பு களுடனும், மராட்டிய மன்னருடனும் நேரடி தொடர்பு கொள்ளுவாரு. அவரே நேரடியாக போய் எல்லார்கிட்டேயும் பேசுவாரு. இவர்தான் திருநெல்வேலிக்கு வந்த சீர்திருத்த கிறிஸ்த வத்தினை பரப்ப ஆசைப்பட்டார்”.
சந்திரனுக்கு இந்த வரலாறு மிகவும் போராடித்தது. எனவே கொட்டாவி விட ஆரம்பித்தான். ஆனால் வந்தவர் ஆர்வத்துடன் கேட்டார். “சார்வாள் உங்க கிட்ட வந்தாத்தான் இப்படி தகவல் எல்லாம் கிடைக்கும். சொல்லுங்க. நான் இதுவரைக்கும் கேள்விபடாத விசயமாக இருக்கும். இது 250 வருசம் முன்னால நடந்து இருக்குமா?”
“ஆமாம். 1778&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியிலத்தான் சுவார்ட்ஸ் அய்யர் திருநெல்வேலிக்கு வந்தாரு. பாளையங்கோட்டையில அவர் முகாமிட்டிருந்தாரு. அப்போது அங்க இருந்த ஆங்கில படையின் சார்ஜென்ட் ஒருவர், தனது திருமணத்தை முடித்து வைக்கவும் மற்றும் சில குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும் அவரை அழைச்சிருந்தாரு. வரும் வழியில் சுவார்ட்ஸ் அய்யர் தச்சநல்லூரில் முகாமிட்டிருந்த தமிழக படையினரைச் சந்தித்து அவர்களை ஒரு கூடாரத்தில் கூட்டி வைத்து தேவையான ஆன்மிக பணிகளைச் செய்து வந்தார். சிலருக்கு ஞானஸ்தானமும் கொடுத்தாரு.
காலையில் அந்த பணியை முடித்து விட்டு சுவார்ட்ஸ் அய்யர் மதிய வேளையில் பாளையங்கோட்டைக்கு வந்தார். அங்கே தான் அவர் கோகிலாவை பார்த்தாரு. அவளுக்கு சுமார் 32 வயது இருக்கும். நல்லவிதமாக ஆங்கிலம் பேசும் ஒரு அழகிய பிராமண விதவைப்பெண்தான் அவள். தனக்கும் ஞானஸ்தானம் தர வேண்டும் என்று கேட்டாள்.
கோகிலாவைப் பார்த்ததும் சுவார்ட்ஸ் அய்யர் திடுக்கிட்டு போனார். ஏற்கனவே தஞ்சாவூரில் அவரைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது. அப்போது தான் அவளை பற்றி மிகப்பெரிய சரித்திரம் நினைவுக்கு வந்தது.
அவர் கண் முன் அந்த சரித்திரம் விரிய ஆரம்பித்தது.
கோகிலா மகராஷ்டிர அரச வம்சத்தைச் சேர்ந்த பிராமணப்பெண். தஞ்சாவூரில் அப்போது மகராஷ்டிர அரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1770&ஆம் ஆண்டு துளசாஜி என்ற மன்னர் ஆட்சி செய்துக் கொண்டிருந்த காலம் அது. அந்த கால வழக்கப்படி கோகிலாவை இளம் வயதிலே திருமணம் செய்துக் கொடுத்துட்டாங்க.
அவள் கணவன் துளசாஜி மன்னரின் அரண்மனையில் அதிகாரியாக இருந்து இருக்காரு. அவர் தீடீருன்னு ஒரு நாளு செத்து போயிட்டாரு. கோகிலா இளம் வயதிலேயே விதவையாகி போயிட்டாள். அந்த நேரத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் தஞ்சாவூரில் இருந்தது.
சுடுகாட்டில் இறந்தவர் உடலை வைத்து, அவர் மேலே விறகு அடுக்கி வைத்தனர். அதன் பின் சிறுப்பெண்ணான கோகிலாவை புதுப்பெண் போல அலங்கரிததனர். பூச்சூட்டினர். நல்ல பட்டுச்சேலையை கட்டினர். அவளை சிதையில் ஏற்ற முயற்சி செய்தனர். அவள் அலறினாள். “என்னை விட்டுருங்க விட்டுருங்க” என கத்தினாள். ஆனால் அவளை யாருமே கண்டு கொள்ளவில்லை. கூட்டமாக கூடி நிற்பதையும், ஒரு சிறுமி சத்தம் போட்டு அழுவதையும் அங்கு வந்த கிழக்கிந்திய கம்பேனியின் படை அதிகாரி ஹென்றி லிட்டில்டன் கேட்டார். சத்தம் கேட்ட இடத்தினை நோக்கி தனது குதிரையில் வந்தான்.
அங்கு உடன்கட்டை ஏற்றிக்கொண்டிருந்த கோகிலாவை கண்டு கொதித்தான்.
“ஸ்டாப்” என கத்தினான்.
அனைவரும் அரண்டு போய் நின்றனர். தன் கையில் இருந்து துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டான்.
அதிர்ந்து போய் விட்டனர்.
அவன் குதிரையை சிதையை நோக்கி செலுத்தினான். கண் இமைக்கும் நேரத்தில் கோகிலாவை கட்டிப்பிடித்து தூக்கி குதிரையில் ஏற்றினான்.
என்ன நடக்கிறது என தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டாள் கோகிலா. மறு நிமிடம் குதிரை அங்கிருந்து சிட்டாய் பறந்தது.
குதிரையில் இருந்த கோகிலாவின் கரங்கள், லிட்டில்டன் கழுத்தை சுற்றி அப்பி பிடித்துக்கொண்டது.
குதிரையில் ஒரு வெள்ளைக்காரன் நமது பெண்ணை தூக்குகிறான் என தெரிந்த மன்னரின் படை வீரர்கள் அம்பு கொண்டு அவன் மீது வீசினர். அதன் பின் தங்களது குதிரையில் அவனை தூரத்தினர்.
ஆனால் அவர்கள் கையில் மாட்டிக்கொள்ளாமல் டிமிக்கி கொடுத்து விட்டு அவன் சிட்டாய் பறந்தான். அவனின் படை முகாமில் கொண்டு போய் கோகிலாவை இறக்கினான். அதன் பின் தான் தங்கியிருந்த அறையில் கொண்டு போய் அவளை வைத்துக்கொண்டான்.
உயிர் பிழைத்த கோகிலா இரண்டு நாள் அவனிடம் பேச வில்லை. சிறு குழந்தை அவள். உயிர்போகும் நிலையில் தப்பித்த அவளுக்கு நடந்தது எதுவுமே புரியவில்லை. எனவே அவள் தனது தாய் தந்தையைரை பார்க்க வேண்டும் என நினைத்தாள். அதை லிட்டில்டனிடம் சைகையால் கூறினாள்.
புரிந்து கொண்டான். மறு நாள் காலை விடிந்தது. குதிரையில் அவளை ஏற்றிக்கொண்டு அக்ரகாரம் சென்றான். இங்கிலீஸ் காரனோடு தன் மகள் வருவதை அறிந்த அவளது பெற்றோர்கள் தெரு முனைக்கே வந்து விட்டனர்.
“எங்களது ஆச்சாரத்தினை கூண்டோடு ஒழித்து விட்டாய். ஏன் இங்கு வந்தாய்” என தரக்குறைவாக ஏசினர்.
கோகிலா தேம்பி தேம்பி அழுதாள்.
“அம்மா அப்பா என்னை காப்பாத்துங்க. எனக்கு வாழ வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது” என்றாள்.
ஆனால் கல்நெஞ்சக்காரர்கள் இவளை ஏறிட்டு கூட பார்க்காமல் கிளம்பினர்.
“நீ செத்தவள். நெருப்பில் எரிந்தவள். எரிந்தவள் எரிந்தவளாகவே இருந்து கொள்” என்றார்கள்.
கதறி அழுதாள் கோகிலா.
“என் மூஞ்சில் முழிக்காதே எங்கேயாவது கெட்டு போ” என கூச்சலிட்டனர்.
லிட்டில்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் முடிவெடுத்தான். இந்த பெண்ணை இங்கே விட்டு விட்டு சென்றாள், அவ்வளவு தான் இவளை குழி தோண்டி புதைத்து விடுவார்கள். எனவே தன்னோடு திருப்பி கூட்டிச்செல்லலாம் என முடிவு செய்து குதிரையில் ஏற்றினான். அதன் பின் குதிரை சிட்டாய் பறந்தது.
முகாமுக்கு வந்தவர்கள் இருநாள் ஒருவருக்கு ஒருவர் பேச வில்லை. ஆனால் இருவரும் ஒரு அறையில் இருந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவரை மிகவும் பிடித்திருந்தது. தன் உயிரை காப்பாற்றியவன். தன்னை நேசிப்பவன். பெற்றோரே நம்மை எடுத்தெறிந்து பேசியும் ஆதரவு தந்தவன். அவனுக்காக நாம் வாழ்ந்தால் என்ன என்று நினைத்தாள். அவனும் இவள் நிலமையை எண்ணி யோசித்தான். தன்னோடு ஒரு அறையில் இருக்கும் இவளை இனிமேல் யாருக்கு கட்டிக்கொடுக்க முடியும்? எனவே இருவரும் யோசித்தனர். அவர்கள் மனம் இணைந்தது. காதலுக்கு மொழி தெரியாது. நாடு வித்தியாசம் தெரியாது. தொடர்ந்து உடலும் உள்ளமும் இணைந்து இருவரும் கணவன் மனைவியாக வாழத்தொடங்கினார்கள்.
தாலிகட்டவில்லை. ஆனால் உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து விட்டனர்.
இனி நம்மை குடும்பத்தில் ஏற்க்கமாட்டார்கள். தப்பில்லை. அந்த ஆச்சார வாழ்க்கை வாழ்வதை விட , இதோ என்னை காப்பாற்றினானே ஆபத்தாண்டவன், அனாத ரட்சகன் இவனோடு வாழ்வது ஒன்றும் தப்பில்லையே என நினைத்தாள் கோகிலா.
லிட்டில்டனும் நினைத்தான். அபலை பெண். இவளை நாம் வெளியே அனுப்பினால் அவள் பெற்றோர்களே இவளை கொன்று விடுவார்கள். இவள் என்ன தப்பு செய்தாள். இவள் கணவன் இறந்தால் இவள் என்ன செய்வாள். ஆகவே நாம் இவளை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்று நினைத்தான்.
ஆகவே தான் மனமும், உடலும் இணைந்து விட்டது.
ஆனால் இவர்கள் இணைந்து விட்டார்கள். மற்றவர்களுக்கு இவர்களது இணைப்பு பிடிக்க வேண்டுமே. மற்றவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமே. எப்படி ஏற்றுக்கொள்வார்கள். இருவரையும் அருவெறுப்பாக பார்த்தார்கள்.
தஞ்சாவூரில் இவர்களின் வாழ்க்கை பெரும் கேள்வி குறியாகவும், கிசுகிசுப்பாகவும் இருந்தது. இப்போது சினிமா கிசுகிசு வருகிறதே. அதை விட பல மடங்கு இவர்களை பற்றி கிசு கிசு பேசினார்கள். ஏற்கனவே ஆங்கிலேய படைத்தளபதிகள் உள்ளூர் பெண்களுடன் குடிதனம் நடத்துவதால் பலர் மனமுடைந்து போய் இருந்தனர். இதில் சுவார்ட்ஸ் அய்யருக்கு உடன் பாடில்லை. இவ்ர்கள் செய்யும் செயல் எதிர்காலத்தில் சீர்திருத்த கிறிஸ்தவம் பரவ தடையாக இருக்கும். எனவே அவர்களை வெறுத்தார்.
ஆனால் கோகிலாவை பொறுத்தவரை எல்லாமே தனக்கு லிட்டில்டன் தான் என நினைத்தாள். அவனை பிடித்திருந்தது. அவன் மார்க்கம் பிடித்திருந்தது. அந்த மார்க்கத்துக்கே மாற வேண்டும் என ஆசைப்பட்டாள். அதற்கு முதல் முதலாக ஞானஸ்தானம் எடுக்க வேண்டும். எனவே அவள் சுவாட்ஸ் அய்யரை நேரில் சென்று பார்த்தாள். “அய்யரே எனக்கு ஞானஸ்தானம் கொடுங்கள்” என கேட்டாள்.
ஆனால் அய்யர் அவளுக்கு ஞானஸ்தானம் கொடுக்க மறுத்து விட்டார். காரணம் இதே போல் கணவன் மனைவியாக ஒழுக்கம் கெட்டு வாழும் தம்பதிகளுக்கு தான் உதவி செய்தால், இந்த மார்ககம் மீதே அனைவருக்கும் எரிச்சல் ஏற்படும். ஏற்கனவே ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாருக்கு இப்படி தங்கள் வீரர்கள் உள்நாட்டு பெண்களுடன் குடித்தனம் நடத்துவது விருப்பம் இல்லை. அது மட்டுமல்லாமல் கம்பெனியார் ஆங்கில பெண்களை இந்தியாவிற்கு வர அனுமதிக் காததால், படை வீரர்கள் தங்கள் விருப்பம் போல் இந்திய பெண்களைச் சேர்த்துக் கொண்டு கும்மாளம் அடித்தனர். இது சீர்திருத்த கிறிஸ்தவ சமயம், இந்தியாவில் பரவ தடையாக இருக்கும் என்று சுவார்ட்ஸ் அய்யர் நினைத்தார்.
அதனால் தான் சுவார்ட்சு அய்யர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஜோடி சேர்ந்து இருப்பது அவர் மனதில் வெருப்பை ஏற்படுத்தியது. ஒரு ஆங்கில படை அதிகாரியுடன் குடியிருந்து பாவ வாழ்க்கை நடத்தி கொண்டிருப்பவருக்கு தனது மனசாட்சியை மழுக்கிகொண்டு ஞானஸ்தானம் தர முடியாதென்று முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்லி அனுப்பிவிட்டார்.
இதனால் நொந்தே போய் விட்டாள் கோகிலா. ஆனாலும் மனம் தளராமல் லிட்டில்டனுடன் வசித்து வந்தாள்.
சுவார்ட்சு அய்யர் தஞ்சாவூரில் கோகிலாவிற்கு ஞானஸ்தானம் கொடுப்பதற்கு மறுக்க மற்றொரு காரணமும் இருந்தது. அவர் திருச்சபைச் சட்டங்களைக் கடை பிடித்ததுதான். மேலும் அவர் தமிழகத்தில் சீர்திருத்த கிறிஸ்தவ சமயத்தை பரவ செய்வது தமது கடமையும் பணியும் என்று எண்ணினார். இம்மாதிரி ஒழுங்கீன வாழ்க்கை நடத்துபவரை கிறிஸ்தவ சபையில் ஏற்றுக் கொண்டால், கிறிஸ்தவ சமயத்தை மற்றவர்கள் தழுவுவதற்கு தடையாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.
ஆனால் லிட்டில்டன்னும் கோகிலாவும் உண்மையான காதலர்களாக வாழ்ந்தனர். அவர்களை முழுவதுமாக அய்யர் அறிந்து இருக்கவில்லை. லிட்டில்டன் கோகிலாவிற்கு கிறிஸ்தவ சமய கொள்கைகளைப் பற்றியும், ஆங்கில மொழியை கற்றுக் கொடுத்தார். இருவரும் சந்தோசமாக வாழ ஆரம்பித்தனர். இவர்கள் வாழ்க்கையில் ஒரு துரும்பு கூட இடையூறு வரக்கூடாது என்பதில் லிட்டில்டன் உறுதியாக இருந்தார். ஆனால் காலம் வேறு மாதிரி வேலை செய்தது. இவர்களுக்கு இடையே வேறு விதத்தில் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு காலகட்டத்தில் லிட்டில்டன் நோயால் வருந்தினார். அவருக்கு கோகிலா மிகுந்த அன்புடன் பணிவிடை செய்தாள். தன் உயிரை காப்பாற்றி தனக்கு மறுவாழ்வு கொடுத்த அவரது உயிரை காப்பாற்ற போராடினாள். இதனால் லிட்டில்டன் நெகிழ்ந்து போய் விட்டார், அதற்கு நன்றியாக லிட்டில்டன் அவரது சொத்து முழுவதையும் கோகிலா பெயருக்கு மாற்றி வைத்தார்.
அந்த கோகிலாதான் பிற்காலத்தில் கிளாரிந்தா என்ற பெயரில் பல பெரிய காரியங்களைச் செய்தார்.
பெரும் மூச்சு விட்டார் அகஸ்தீஸ்வரன்.
சந்திரன் தனது தந்தை கதையை கேட்போம் எனதான் நினைத்தான். ஆனால் கோகிலாவின் கதையை கேட்டவுடன் மிகவும் வேதனை அடைந்தான். அய்யோ கோகிலாவுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என துடித்தான். எனவே “சார்வாள் அந்த இங்கிலிஷ் காரன் என்ன ஆனான். நீங்க தஞ்சாவூரில் இவர்கள் இருந்த மாதிரி வரலாறு சொல்றீங்க. ஆனால இந்த அம்மா கல்லறை திருநெல்வேலியில இருக்கு. அவங்க ஏன் திருநெல்வேலிக்கு எப்படி வந்தாங்க”. கேள்விகளை வேகமாக அடுக்கினான்.
“சொல்றேன். கண்டிப்பா சொல்றேன்”.
அகஸ்தீஸ்வ்ரன் சார், அமர்ந்து இருந்த பெஞ்சில் நன்றாக அமர்ந்தார். அதன் பின் அவர் வரலாற்றை தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
( தொடர்ந்து முத்துகிளி கூவுவாள்)


