தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், முதல் ஆளாக கட்சியில் சேர்ந்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை, கடந்த பிப்ரவரி 2-ந்தேதி தொடங்கினார். அரசியல் கட்சி அறிவிப்பின்போது, வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கட்சியின் முதல் உறுப்பினராக விஜய் தன்னை இணைத்துக் கொண்டார். 2-வதாக, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து, ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் விஜய் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் எடுத்து விட்டேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வருகிற சட்டமன்ற தேர்தலில் என்னுடன் இணைந்து மக்கள் பணி செய்ய, எங்கள் கட்சியின் உறுதி மொழியை படியுங்கள். பிடித்திருந்தால், விருப்பப்பட்டால் நீங்கள் அனைவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் தயவு செய்து உறுப்பினராக இணையுங்கள். மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். வாருங்கள், தோழர்களாக இணைந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சரித்திரம் படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைய அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம், இணைய பக்கம் ‘லிங்க்’ குகளை வெளியிட்டார். மேலும், 9444005555 என்ற எண்ணிற்கு ‘வாட்ஸ் அப்’ ‘மெசேஜ்’ செய்தும் கட்சியின் உறுப்பினராகலாம் என்று விஜய் பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையின்போது, தொலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்கள் கேட்கப்படுகிறது. அதன்படி, வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, புகைப்படத்தை இணைத்தவுடன், விஜய் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டை ஆன்லைன் வாயிலாக கிடைக்கிறது. உறுப்பினர் அட்டையில், விஜய் படத்துடன் உறுப்பினர் பெயர், பூத் எண், சட்டமன்ற தொகுதி விவரம், மாவட்டம், மாநிலம் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.


