தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 வட்டாரங்களில் 105 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், இ நிதி சேவை, இ வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக வேலைவாய்ப்பற்ற ஊரக இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் விதத்தில் சமுதாய தொழில்திறன் பள்ளியின் மூலமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 80 சமுதாய தொழில் திறன் பள்ளிகள் மூலமாக 1685 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
உலக மகளிர் தின நாளான இன்று கருங்குளம் ஊராட்சி, புளியங்குளம் சமுதாய கூடத்தில் பனைஒலை பொருட்கள் தயாரிப்பு தொழில் திறன் பயிற்சியில் பயிற்சி பெற்று வரும் ரேகா தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சிறப்பாக இருப்பதாகவும், இப்பயிற்சி மூலம் இக்கிராமத்தில் உள்ள 20 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார். மேலும், இப்பள்ளியினை பார்வையிட்டு இவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு நிறுவனங்களுடன் இணைப்பு ஏற்படுத்தி இருப்பதாக மாவட்ட செயல் அலுவலர் கோ.தாமோதரன் தெரிவித்தார். உடன் செயல் அலுவலர்கள் ஆர்.செல்வகுமார்,எம்.சுந்தரராஜன்,பெ.அமலபுஷ்பம், வட்டார அணித்தலைவர் எம்.மாரிமுத்து மற்றும் தொழில்சார் சமூக வல்லுநர் பிச்சமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.


