தூத்துக்குடியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முகாமை ஆட்சியர் லட்சுமிபதி தொடங்கி வைத்து 25 குழந்தைகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2024-25-ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிட்டு உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகள் சார்பில் மாணவர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கி, 25 குழந்தைகளுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.
அப்போது, அரசு பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதன் முக்கியத்துவம் குறித்தும், இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் சலுகைகள் குறித்தும் அவர் பெற்றோர்களிடம் விளக்கி கூறினார். காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப்பெண், மருத்துவம், பொறியல் கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் குறித்தும், வயதுக்கு ஏற்ற வகுப்பில் மாணவர்களை சேர்ப்பது குறித்தும் அவர் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார்.
பெற்றோர்கள் மத்தியில் கல்வியின் அவசியம் குறித்து விளக்கி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகள் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, உதவி திட்ட அலுவலர் முனியசாமி, தூத்துக்குடி வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வள மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


