முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்) (மார்ச்சு 1, 1953), மு.க. ஸ்டாலின் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மகன் ஆவார்.
இவர் தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக 2006-2011, துணை முதலமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஆகத்து 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.
இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்தால் 2019-ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் மு.க. ஸ்டாலின் 30-ஆவதாக இடம் பெற்றார்.
மு.க. ஸ்டாலின் 1953-ஆம் ஆண்டு கருணாநிதி – தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகச் சென்னையில் பிறந்தார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைவதற்கு 4 நாட்கள் முன்பு பிறந்ததால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயர் இடப்பட்டது.
மு. க. ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார். 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்றார். ஆகத்து 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மு.க. ஸ்டாலினுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
இவர் ஆகத்து 25, 1975-இல் துர்கா (என்கிற சாந்தாவை) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். மேலும் இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் நடிகரும் அரசியல்வாதியும் ஆவார், அவர் தமிழ் திரைப்பட இயக்குனர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், மற்றும் இவரது மகள் செந்தாமரை சபரீசன் தொழில்முனைவோராகவும், கல்வியாளராகவும் மற்றும் சென்னை சன்ஷைன் பள்ளிகளின் இயக்குநராக உள்ளார். அவர் தொழிலதிபர் மற்றும் அரசியல் வியூகவாதி சபரீசன் வேதமூர்த்தியை மணந்தார்.
தந்தையைப் போலவே மு.க.ஸ்டாலினும் நாத்திகன் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார், ஆனால் அவர் எந்த மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவர் அல்ல என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.


