ஆர். முத்தையா (24 பெப்ரவரி 1886 ) தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார்.இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் 1886 பெப்ரவரி 24 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் ராமலிங்கம் ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தவர். ராமலிங்கத்திற்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில ஆண்டுகளில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தார். பின்னர் இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.
இவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார்.
முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை “ஸ்டாண்டர்ட்” பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது “வி” என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சி யுள்ள “வ” வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள். இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம் இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக் கையின் சிறு விரலால் இயக்குவர்.
முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.


