ஒரு நாள் காலையில் என் மின்னஞ்சலைத் திறந்தேன். டெல்லியில் உள்ள சிவ்நாடார் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த கடிதத்தில் டெல்லி உள்ள எங்கள் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள மாநாட்டில் பேசுமாறு அழைத்திருந்தனர். என் ஆய்வக கண்டுபிடிப்புகளில் ஒன்றை அந்த மாநாட்டில் பேசவேண்டும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் என்னை நிறைய இடங்களில் இருந்து அழைப்பார்கள். பொதுவாக ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்திலிருந்துதான் அழைப்புகள் வரும். சில அழைப்புக்களே வட இந்தியப் பகுதியிலிருந்து வரும். காரணம் தூரம் அதிகமாக அதிகமாக என்னை அழைப்பவர்களுக்குச் செலவு அதிகமாகும்.
பொதுவாகப் பள்ளிக்கூடமோ அல்லது உலகத்தர ஆராய்ச்சி கூடமோ எங்கிருந்து அழைப்பு வந்தாலும் ஏற்றுக் கொள்ளுவேன். அது போல இந்த அழைப்பையும் ஏற்றுக் கொண்டேன்.
நான் பிறந்த ஊரான ஆத்தூருக்கு அருகேதான் சிவ்நாடார் ஊரும் உள்ளது. எனவே அவரால் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகத்திற்குச் செல்ல ஆவலுடன் காத்திருந்தேன்.

அந்த நாளும் வந்தது. விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தேன். எனக்கென்று ஒரு தனி காரை ஏற்பாடு செய்திருந்தனர். விமானத்திலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் சிவ்நாடார் பல்கலைக் கழகம் அமைத்திருந்தது. சுமார் 1 மணிநேரம் 40 நிமிட பயணத்துக்குப் பின்னர் பல்கலைக் கழகம் வந்து சேர்ந்தேன். பல்கலைக் கழகம் டெல்லியை இராஜஸ்தானுடன் இணைக்கும் நெடுஞ்சாலைக்கு அருகில்தான் இருந்தது. வரும் வழி எல்லாம் விவசாய வயல் வெளியாக இருந்தது. பல்கலைக் கழகத்தைச் சுற்றியும் வயல் வெளிகள் தான் இருந்தது.
பல்கலைக் கழகத்திற்குள் நுழைய மூன்று வாயில்கள் இருந்தது. அன்னியர்கள் இந்த பல்கலைக் கழகத்திற்குள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. ஈரடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொதுவாக இவ்வளவு பாதுகாப்பு கல்வி நிலையங்களில் நான் பார்த்ததில்லை. யார் வேண்டுமானாலும் பொதுவாகக் கல்வி நிலையங்களுக்குள் வரலாம் போகலாம். நான் இதுவரை நான் பார்க்காத ஒரு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான் ஒரு பேராசிரியர் தமிழ் நாட்டிலிருந்து வருகிறேன் என்ற உடன் காரையோ அல்லது என்னையோ சோதனை செய்யவில்லை. இரண்டு பாதுகாப்பு வாசல்களிலும் என்னைச் சிரித்த முகத்துடன் வரவேற்பு அனுமதித்தனர்.
அடுத்து பருந்துகளின் கூடு என்ற கட்டடத்திற்கு முன் கார் நின்றது. எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை அம்சமாக இருந்தது. அனைத்து வசதிகளும் இருந்தது. நான் என் வீட்டில் இருப்பது போல் உணர்ந்தேன். சற்று நேரத்தில் அங்குள்ள தொலைப்பேசி அலறியது. எடுத்துப் பேசினேன்.
“சார்” அறை உங்களுக்கு வசதியாக உள்ளதா? என இனிமையான குரல் மறுமுனையில் இருந்து வந்தது.
” வசதியாகவே இருக்கிறேன். நன்றி” என்றேன்.
பொதுவாக நம் நாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறைகள் கொடுக்க மாட்டார்கள். வெளிநாட்டவரை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். நல்ல வசதியான அறையில் தங்க வைப்பார்கள். அடுத்து IIT போன்ற நிறுவனங்கள் இருந்து வருபவர்களையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுவார்கள். என்னதான் சாதித்தாலும் மாநில பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கு அவ்வளவு வரவேற்பு இருக்காது.
ஆனால் சிவ்நாடார் பல்கலைக் கழகத்தில் இந்த வேறுபாடுகளைப் பார்க்க முடியவில்லை !
இரண்டு நாளாகத் தூக்கம் சரியில்லை. டெல்லியில் சற்று குளிர் அதிகமாகவே இருந்தது. குளியல் அறையில் குளிக்கச் சுடுதண்ணீர் இருந்தது. ஆவி பறக்கக் குளித்து முடித்தேன். பின்னர் 7.00 மணிக்கு எழும் வகையில் அலைபேசியைத் தயார்செய்தேன். பின்னர் படுக்கையில் சாய்ந்தேன். அப்படியே இரண்டு மணிநேரம் தூங்கியிருப்பேன்.
அடுத்து மாலை 7.30 மணி அளவில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்குச் சென்றதும்தான் நான் வந்திருக்கும் மாநாட்டின் வலிமை தெரிந்தது. அங்கு இருந்தவர்களில் சுமார் 70 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் வெளிநாட்டவர்கள் ! அவர்கள் உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள்! முப்பது விழுக்காட்டினர்தான் இந்தியாவைச் சார்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் மத்திய அரசின் நேரடி கொளுத்த பணத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள். அந்த கூட்டத்தில் நான் மட்டும்தான் இந்தியாவில் உள்ள பாவப்பட்ட மாநில பல்கலைக் கழகம் ஒன்றிலிருந்து அழைக்கப்பட்ட இருக்கிறேன் என்று சில நிமிடங்களில் எனக்குப் புரிந்தது.
என் இயல்பு கேள்வி என மனதில் தோன்றி விட்டால் அதைப் பூட்டி வைக்க மாட்டேன். கேட்டு விடுவேன்.
“இதனால் எவ்வளவு லாபம் உள்ளதோ? எனக்குத் தெரியாது. ஆனால் நிறையத் தொல்லைகளும் கேட்கும் சிக்கலான கேள்விகளால் வரும். வெளிநாட்டில் உணர்ச்சியைக் காட்ட மாட்டார்கள். நம் நாட்டில் உணர்ச்சிகள் அத்தனையையும் கேள்வி கேட்ட அடுத்த வினாடியே கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.
சிவ்நாடார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் ஒருவர் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தார். அவரை செய்கையால் அழைத்தேன்.
என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? எப்படி என்னை இங்கு அழைக்க உங்களுக்குத் தோன்றியது? என்ற கேள்விகளை முன்வைத்தேன்.
உடனே அவர் சிரித்து விட்டார். பணிவாகப் பேச ஆரம்பித்தார். இது உறுப்புக்கள் மறு உருவாக்கம் (Regeneration Biology) பற்றி மாநாடு. இந்த வகை ஆராய்ச்சிக்குத் தட்டைப் புழுக்கள், ஹைட்ரா, தவளை, பல்லி இனங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
காரணம் மண்புழுவைக் கொண்டு உறுப்புக்கள் மறு வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் இந்தியாவில் இரண்டு பேர்கள் தான் உள்ளனர். அதில் ஒருவர் டெல்லியில் உள்ளார். அவர் பெயர் பீனாப் பிள்ளை. அடுத்தவர் நீங்கள்தான் எனவே உங்கள் இருவரையும் அழைத்தோம். மண்புழுவைக் கொண்டு எப்படி ஆராய்ச்சி செய்வது என எங்கள் மாணவர்கள் புரிந்து கொள்ள உதவும் என்றார்.அவரின் வார்த்தைகள் சற்று மகிழ்ச்சியைத் தந்தது. “நான்தான் உங்களை அழைக்கவேண்டும் என முடிவெடுத்தேன்” என்றார்.
விருந்து சிறப்பாகவே இருந்தது. முடித்தபின் மீண்டும் தூங்க ஆரம்பித்தேன். காலையில் சுமார் 7 மணிக்குத்தான் எழுந்தேன். என்னைத் தயார் செய்தபின் 7.30க்கு சாப்பிடச் சென்றேன். அங்கு எனக்கு எதிரே ஒரு தைவான் நாடு ஆராய்ச்சியாளர் அமர்ந்திருந்தார். என் பக்கத்தில் ஐரோப்பியர் ஒருவரும் ஒரு அமெரிக்கரும் அமர்ந்திருந்தனர்.
ஒருவருக்கு ஒருவர் பேச ஆரம்பித்தோம். வேரென்ன பேசுவோம். அறிவியலில் முன்னேற்றம் பற்றித்தான் பேசினோம். அப்போது நான் தோலில் உள்ள ஒரு செல் பிரித்தலில் நான்கு செல்கள் வருகிறது என ஒரு கட்டுரை வந்திருக்கிறது பார்த்தீர்களா? எனக் கேட்டேன்.
“சார்.. இவர்தான் அதனைக் கண்டறிந்தவர்” என எனக்கு எதிரே அமர்ந்த தைவான் நாட்டவரான சென் என்பவரைக் கைகாட்டினார்கள். வியப்பாக இருந்தது. இதனை நாங்கள் பல வருடத்திற்கு முன்னதாக கண்டறிந்து விட்டோம். ஆனால் எங்களால் அதனைக் குறும்படமாகப் பதிவு செய்ய முடியவில்லை. காரணம் அதற்குத் தகுந்த நுண்ணோக்கியும் மற்றும் தேவையான வேதிப் பொருட்களும் என்னிடம் இல்லை..
பெருமையாக இதனை அவரிடம் கூறினேன். மன்னிக்கவும் என்றார். அவர் என்ன செய்வார். நான் அவரிடம் “மன்னிப்பு எதற்கு? உங்களுக்கு என்னை எப்படித் தெரியும்? முடிந்தால் எங்களுக்கு உதவுங்கள்” என்றான். ஒரு மாணவனை என் ஆய்வகத்திற்கு அனுப்புங்கள் . கட்டாயம் உதவுகிறேன் என்றார். விரைவில் என் மாணவன் ஒருவன் அல்லது ஒருத்தி தைவான் சொல்லும் வாய்ப்புள்ளது.
.அடுத்து மாநாடு நடக்கும் அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். கட்டடம் அவ்வளவு பெரிது. தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசு பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டடங்களின் மொத்த பரப்பளவை விட இந்த ஒரு கட்டம் பெரியது என உணர்ந்தேன். மாநாடு நடந்த அரங்கில் பாதிதான் எங்கள் துறை ! அவ்வளவு பிரமாண்டமான கட்டமைப்பைக் கொண்டிருந்தது அந்த கட்டிடம். இதுமாதிரி நிறை கட்டிடங்கள் இருந்தன. அனைத்தையும் பார்க்க வியப்பாகவே இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தமிழ் நாட்டின் தென்கோடியில் பிறந்தவர் இப்படி ஒரு கட்டமைப்பை டெல்லியில் உருவாக்கி இருப்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை ! மேலும் இந்தியத் திருநாட்டிற்கும் பெருமை.
பொதுவாக மாநாட்டில் ஒரு ஆராய்ச்சியாளரை ஒரு மணி நேரம் பேசச் சொல்வார்கள். இங்கு அப்படி இல்லை. ஒருவர் இருபது நிமிடங்கள் தான் பேச வேண்டும் என்றனர். காரணம் 20 நிமிடத்திற்கு மேல் ஒருவர் பேச்சைக் கேட்டால் நிறையப் புரிதல் இருக்காது என்பது தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் உலகமெங்கும் ஆராய்ச்சியாளர்களை ஒரு மணி நேரம் பேசவைக்கிறனர்.
ஆனால் சிவ்நாடார் பல்கலைக் கழகத்தில் மட்டும் 20 நிமிடங்கள் பேசவேண்டும். 5 நிமிடங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றனர் ! நல்ல ஏற்பாடாகவே தெரிந்தது. இப்படி நாள் ஒன்றுக்கு சுமார் 16 ஆராய்ச்சியாளர்களைப் பேசவைத்தார்கள்!
நிறையைத் தகவல்களுடன் அதிக நண்பர்களையும் சம்பாதிக்க நல்ல வாய்ப்பாகவே இருந்தது.
சென்னையிலும் இதுமாதிரி சிவ்நாடார் பல்கலைக் கழகம் ஒன்றை உருவக்கிவிட்டனர். தமிழகத்தில் அறிவியல் வளர இந்த பல்கலைக் கழகம் பெரியதும் பங்காற்றும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இந்தியாவில் உயிரியல் சம்பந்தமான ஆராய்ச்சிக்குப் பெங்களூரு தலை சிறந்தது. ஆனால் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர் ஒரு மாணவரிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் அருகில் நின்று கொண்டிருந்தேன். அந்த மாணவன் ஸ்பெயின் நாட்டில் ஆராய்ச்சி பட்டம் பெற்றிருந்தார். சிறந்த கண்டுபிடிப்பைப் பதிவு செய்திருந்தார். அவரிடம் மூத்த ஆராய்ச்சியாளர், பெங்களூருக்குச் சென்று மாட்டிக் கொள்ளாதே… இங்கு வா. உன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றார். பெங்களூரில் தொழில் அதிபர் டாட்டா உருவாக்கிய புகழ் பெற்ற இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. அந்த மூத்த ஆராய்ச்சியாளர் கருத்துப்படி அவைகளை விடவும் சிவ்நாடார் பல்கலைக் கழகம் சிறந்தது என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. அதே வேளையில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் அவரை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவர் புரிந்து கொண்டு நான் சிவ் நாடார் பல்கலைக் கழகத்தில் வேலை பார்க்கவில்லை ஆனால் நான் சொல்லுவது உண்மை என்றார்.
மூன்று நாட்களில் இந்த மாநாட்டை நடத்த சுமார் 50 லட்சம் செலவு செய்திருப்பார்கள். அத்தனை செலவுகளும் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள அங்கு படிக்கும் மாணவர்களுக்காக மட்டுமே…


