விஜயநகரப் பேரரசு ( 1336–1646) தென்னிந்திய பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும். தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் கட்டுமானங்கள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள அம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அம்பி விளங்குகிறது.
மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயசு ,பெர்னாவோ நுனிசு , நிக்கோலோ டா கொன்ட்டி ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.
இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் அம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.
இப்பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் கன்னடம், தெலுங்கு தமிழ் மொழி இலக்கியம், இந்துக் கோயில் கட்டிடக் கலை, இந்து சமயம், நீர் பாசன முறை, தொழில், வணிகம் சிறப்பு விளங்கியது.
இப்பேரரசு பொ.ஊ. 1646 வரையில் நீடித்ததாயினும், பொ.ஊ. 1565 ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களுடன் நடைபெற்ற தலைகோட்டை போருக்கு பின்னர் விஜயநகரப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது.
போசளர் மற்றும் திராவிடக் கட்டிடக்கலை கலந்து வடிக்கப்பட்ட விசயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. இவை, மரம், செங்கல், சுண்ணாம்புச் சாந்து ஆகியவற்றைக் கொண்டு சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில் தெய்வகள், முனிவர்கள், தேவதைகள் ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு அழகூட்டப்பட்டது. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில், திருவரங்கம், சிரீசைலம் ஆகிய இடங்களில் உள்ள இராய கோபுரங்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.
மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் தூண்களோடு கூடிய பெரிய மண்டபம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் மற்றும் திருக்குளம் என்பனவும் கோயில்களின் கூறுகள் ஆயின. தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.


