சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
சரோஜினி சட்டோபாத்தியாயா, பின்னாளில் சரோஜினி நாயுடு, இந்தியாவின் ஹைதாராபாத் மாநிலத்தில் ஒரு வங்காள குலின் பிராமணக் குடும்பத்தில் மூத்த மகளாக 13 பிப்ரவரி 1879 அன்று பிறந்தார். இவர் இவரது குடும்பத்தின் 8 குழந்தைகளில் மூத்தவராவார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோரநாத் சட்டோபத்யாயா. இவரது தாய் வரதா சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிசாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல் காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
12 ஆவது வயதில் சரோஜினி நாயுடு அவரது மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார். அவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 1891 முதல் 1894 வரை அவர் தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, பல்வேறு தலைப்பிலான புத்தகங்களைப் படித்தார். 1895 ஆம் ஆண்டு, பதினாறு வயதில் முதன் முதலாக நிஜாம் அறக்கட்டளையின் உதவித்தொகை லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் மூலம் படிப்பதற்காக சென்றார்.
உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார். அவருக்கு பிடித்தமான கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி ஆவார்.
அவரது முக்கிய பங்களிப்பும் ஆர்வமும் கவிதை துறையில் இருந்தது. சரோஜினி நாயுடு கவிதைத் துறைக்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இவரது கவிதைகளில் அழகான வார்த்தைகள் இருக்கும், மேலும் அது பாடக் கூடிய வகையிலும் இருக்கும். 1905 ஆம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு தி கோல்டன் த்ரெஷோல்டு என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. மேலும் இரண்டு பகுதிகள் வெளியிடப்பட்டது: தி பேர்ட் ஆஃப் டைம் (1912) மற்றும் தி புரோக்கன் விங் (1917). 1918 ஆம் ஆண்டு, பீஸ்ட் ஆப் யூத் வெளியிடப்பட்டது. பின்னர் அவரது தி விஸார்டு மாஸ்க் மற்றும் எ டிரஷரி ஆஃப் போயம்ஸ் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு அவரது மகள் பத்மஜா தனது தாயின் வெளியிடப்படாத கவிதைகளை தி ஃபெதர் ஆஃப் டான் என்னும் தலைப்பில் வெளியிட்டார்.


