10 நிமிடங்களில் எல்லாம் முடிந்து விட்டது.
தீயணைப்பு படைவீரர்கள் வந்து தாமிரபரணி ஆற்றுக்குள் போராடி 6 பேர் உடலையும் கரையில் எடுத்து போட்டனர்.
உடன் வந்தவர்கள் கதறினர்.
“அய்யோ” என கத்தினார்கள் உடன் வந்தவர்கள். “அய்யோ கோயிலுக்கு சாமி கும்பிட வந்தோமோ. இப்போ உயிரோட நீ இல்லையே. உன் பெண்டாட்டிக்கும், பிள்ளைகளுக்கும் என்ன பதில்சொல்வேன்” என நடுத்தர வயதை சேர்ந்த ஒரு பெண் கதறினாள்.
எல்லோரும் தவித்து விட்டனர்.
சமூக சேவர்கள் எல்லாம் வந்து குவிந்து விட்டனர். எதிர்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு செய்தி கொடுத்தனர். மணல் கொள்ளைத்தான் இந்த 6 பேர் உயிரிழப்புக்கும் காரணம் என்றனர்.
அருகில் உள்ள காவல் துறையினர் அவசரஅவசரமாக இந்த இடத்தில் மரண நீர்ச்சூழல் உள்ளது யாரும் இறங்காதீர்கள் என போர்டு வைக்க அளவு எடுத்தனர்.
தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்தது. அந்த உடல்களை எடுத்துப்போட்டுக்கொண்டு ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்கள் பின்னால் சோகமாக சுற்றுலா வந்த பேருந்தும் சென்றது. பின்னாலே இன்ஸ்பெக்டர் ஜீப்பும் சென்றது.
பத்திரிக்கை காரர்கள் அவ்விடத்துக்கு வந்தனர். ஒரு பிரிவினர் அந்த பயணிகள் பின்னாள் சென்றனர். அவர்களிடம் பேட்டி கேட்டு, கதை கதையாக எழுதினார்கள். மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக இந்த செய்திதான் இருந்தது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாமுழுவதும் இந்த செய்தி பேசு பொருளாகி விட்டது. ஆனால் அதிகாரிகள் இதை பெரிதாக கண்டு கொள்ள வில்லை. அவர்அவர்கள் மற்ற வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் தாத்தா தூங்க வில்லை.மிகப்பெரிய மனு ஒன்றை ராத்திரியோர ராத்திரியாக எழுதி வைத்துக்கொண்டார். இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் கொஞ்சம் விழிப்புணர்வு உள்ளது. எனவே இதை நாம் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.
காலையிலேயே கலெக்டர் ஆபிஸ் சென்று விட்டார் தாமிரபரணி தாத்தா.
கலெக்டரை பார்க்க வேண்டும் என்று சீட்டு எழுதி கொடுத்தார். ஆனால் கலெக்டரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் காத்து இருந்தார். அனுமதி கிடைக்கவில்லை.
இனி சரிப்பட்டு வராது என அங்கிருந்து எழுந்தார்.
மாடியில் இருந்து கீழே இறங்கி ஆபிஸ் முன்பு தர்ணா போராட்டத்தில் அமர்ந்து விட்டார்.
சிறிது நேரத்தில் இந்த செய்தி காட்டு தீ போல பரவியது. சில ஊடகங்கள் கலெக்டர் அலுவலகத்தினை நோக்கி ஓடி வந்தனர். இவரிடம் மைக்கை கொடுத்து பேசி லைவ்வில் ஒளிபரப்பு செய்தனர்.
6 பேர் உயிரிழந்து விட்டார்கள். தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு விடக்கூடாது. இதற்காகத்தான் நான் கலெக்டர் ஆபிஸ் மனு கொடுக்க வந்தேன். ஆனால் என்னை கண்டுகொள்ளவே இல்லை. எனவே இப்போதே வந்து கலெக்டர் என் மனுவை பெற்றுக்கொள்ளவில்லையென்றால் , நான் இங்கேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். தொடர்ந்து தீ குளிப்பேன்” என்று குரல் கொடுத்தார். இதை கவனித்த போலீஸ் காரர்கள் அப்புறப்படுத்த நினைத்த போது, மேலும் பலர் சூழ்ந்து கொண்டனர்.
மற்ற ஊடக அன்பர்கள் ஓடோடி வந்தனர். மறு நிமிடம் லைவ் ஓட ஆரம்பித்தார். அதை அலுவலகத்துக்குள் இருந்து பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் அரண்டு போய் விட்டார். உடனே கீழே ஓடோடி வந்தார். “அய்யா நான் மனுவை வாங்கி கொள்கிறேன் என்னோடு அலுவலகம் வாருங்கள்” என அவரை கையோடு கூட்டிக்கொண்டு அலுவலகத்துக்குள் செல்ல முயற்சித்தார்.
“இந்த பத்திரிக்கை காரங்க எல்லோரும் எங்கூட வந்தா மட்டும் தான் நான் உங்க கூட வரமுடியும்” என்றார்.
சரி என அனுமதி கொடுத்த பிறகே, தாத்தா கலெக்டருடன் மேலே வந்தார்.
அலுவலகம் உள்ளே வந்த அவருக்கு உடனே டீ கொடுக்கப்பட்டது.
டீயை குடிக்க மறுத்து விட்டார்.
“எனக்கு டீயும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம். இனிமேல் தாமிரபரணி ஆற்றில் எங்கேயும் உயிர் பலி ஏற்படக்கூடாது அதற்கு உத்தரவாதம் கொடுங்கள்” என்றார்.
உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தகவல் பறந்தது. சம்பந்தப்பட்ட, காவல்துறை ஆய்வாளர், தாசில்தார், ஒன்றிய ஆணையாளர் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவசர மீட்டிங் உடனே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
உயிர் பலி ஏற்பட்ட அந்த இடத்தில் உள்ள பள்ளத்தினை சீர் செய்து, அங்கே விளம்பர பலகை வைத்து உயிர் பலி ஏற்படாமல் தடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
தாத்தா தீவிரமாக சொன்னார்.
“முதலில் மணல் கடத்துதலை தடுக்கணும்”.
“பெரியவரே . அதுதான் மணல் கடத்தல் எங்கேயும் இல்லையே. கோர்ட் ஆடர் வந்தவுடனே எல்லா இடத்திலும் மணல் கோரியை நிம்பாட்டியாச்சே”. காவல் அதிகாரி கூறினார்.
“இல்லை மணல் கடத்துறாங்க” தாத்தா உறுதியாக சொன்னார்.
“ஆத்துக்குள்ளே லாரி போக முடியாது, டிராக்டர் போகமுடியாது. போகிற வழியை யெல்லாம் முள்வெட்டிபோட்டு அடைச்சாச்சு. ஒரு துளி மணல் கூட கடத்த முடியாது”.
திரும்பவும் தாத்தா சொன்னார். “கடத்துறாங்க. இன்னைக்கு காலையில கூட மணல் கடத்துறாங்க” தாத்தா உறுதியாக சொன்னார்.
எல்லோருக்கும் எரிச்சல் வந்தது.
“அய்யா பேசணுமன்னு பேசக்கூடாது”. தாசில்தார் கோபமாக கேட்டார்.
“இல்லீங்க அய்யா. நீங்க சொல்றது சரித்தான். லாரி போகலை. மாட்டு வண்டி போகலை. ஆனால வேற மாதிரி கடத்துடறாங்க”.
“ஓ. நீங்க பெட்டியை வைச்சி ஊள்ளூர் காரங்க வீடு கட்ட மணல் அள்ளுறாங்களே அதை சொல்லிறியளா?”
“இல்லைங்க அய்யா. ஆத்து ஓரத்தில இருக்கிறவங்க வீடு கட்ட எங்க போவங்க. அவங்க பக்கத்தில் தோண்டினாலே ஆத்து மணல் இருக்கும். அதை அவங்க யூஸ் பண்ணணுவாங்க. நான் சொல்லுறது அதை இல்லை”.
கலெக்டர் கேட்டார். பின்னே என்ன தான் நடக்குது.
“அய்யா கழுதையில மண் கடத்துறாங்க. டூ வீலர்ல மண் கடத்துறாங்க. மாட்டு வண்டியில மணல் கடத்துறாங்க. சிறுதுளி பெருவெள்ளம். இவங்க கொஞ்சம் கொஞ்சமா ஆத்தில இருந்து வெளியே மணலை கொண்டு வாறாங்க. ஒரு இடத்தில் கூட்டி வைச்சி, அதை மொத்தமா மணல் மாபியாக்கள் கடத்துறாங்க”.
அனைவரும் அதிர்ந்தனர்.
கலெக்டர் காவல் துறை அதிகாரியை பார்த்து கேட்டார். “உண்மையா?”
அவர் தலையை கவிழ்ந்தார்.
தாசில்தாரை பார்த்து கேட்டார், “ஏன் உங்க தலையாரி, வி..ஏ.ஓ வுக்கு இந்த சம்பவம் தெரியுமா? தெரியாதா?”
தாத்தா சொன்னார்.
“தாசில்தார் அய்யாவுக்கே தெரியும். ஆனால் இதை கண்டுக்கிறது கிடையாது”.
“ஒரு ஊரில ஒருத்தன் மட்டும் 200 கழுதை வச்சிருக்கான். தினமும் மூன்று நடை ஆற்று மணலை ஆற்றுக்குள்ள இருந்து வெளியே கொண்டு வாறான். கணக்கு பார்த்தா, 10 லோடு ஆற்று மணல் திருடு போகுது”.
அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
“கொஞ்ச நாளா தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளவங்க எம் 80 மொபைட் வாங்கியிருக்காங்க. அதுக்கு காரணம் என்ன தெரியுமா? தினமும் 5 நடை ஆற்று மணலை இவங்க திருடி கொண்டு போறாங்க”.
“மாட்டு வணடிக்காரங்க, ஒரு மாட்டு வண்டிக்கு 30 சட்டின்னு கணக்கு போட்டா கூட ஊருக்கு 4 வண்டி வெளியே வந்தா எவ்வளவு ஆத்து மணலு வெளியே போகுது பாருங்க”.
கலெக்டர் அமைதியாக இருந்தார். “அய்யா சொல்றது கேட்குதா? ஊர் காரங்க மணல் அள்ளுதாங்கன்னு சொன்னீங்களே. இதுகெல்லாம் என்ன பதில் சொல்லப்போறீங்க”. அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டி கேட்டார் கலெக்டர்.
“அய்யா கோர்டில 5 வருசம் தடை உத்தரவு வாங்கி வைச்சிருக்கோம். இந்த தடை ஜே.சி.பி லாரி கொண்டு மணல் அள்ளுறது மட்டுமில்லை. இதுபோல சின்ன சின்ன திருட்டை தடுக்கிறதும் தான். ஆனால் இதை உள்ளூர் அதிகாரிங்க கண்டு கொள்ளவே இல்லை”.
சிறிது நேரம் யோசித்தார் கலெக்டர்.
“சரி. தாமிரபரணி ஆற்றங்கரையில் நாளைக்கு காலையில இருந்து கழுதையில மணல் அள்ளுறது, மாட்டு வண்டியில மணல் அள்ளுறது, மொபைட்டில மணல் அள்ளுறது, இதையெல்லாம் செய்றவங்களை, உடனே பிடிச்சி குண்டர் சட்டத்தில உள்ளே தள்ளுங்க. நான் எல்லா சப்போர்டும் உங்களுக்கு பண்ணுறேன்”. உறுதியாக சொன்னார் கலெக்டர்.
“அய்யா. ஒண்ணு நான் பொதுப்பணித்துறை அதிகாரிக கிட்டே கேட்கணும்”. தாத்தா அமைதியாக கேட்டார்.
“கேளுங்கய்யா”.
“அய்யா இவ்வளவு நாளும் தாமிரபரணி ஆத்து மணலை அரசு வித்துச்சே. அந்த மணலை வித்த காசை வச்சி , தாமிரபரணி ஆற்றங்கரையில இரண்டு பக்கமும் கரை போட்டு, மரம் வளர்ந்து இருக்கலாமே. நீர் கருவை மரங்களை வெட்டி அழிச்சி இருக்காலா«ம். அப்படி ஏதாவது காரியம் செஞ்சிங்களா?”
அமைதியா இருந்தார்கள்.
“இல்லையா எப்படியும் உங்களுக்கு கோடிக்கணக்கில பணம் கிடைச்சி இருக்கும். எங்க தாமிரபரணி உழைச்சு தந்த பணத்தை தாமிரபரணிக்கு செலவழிச்சி இருந்தா கூட இன்னைக்கு தாமிரபரணி காப்பாற்ற பட்டிருக்குமே. ஆனா நீங்க செஞ்சிங்களா?”
பொதுப்பணித்துறை அதிகாரி மெதுவாக பேசினார்.
“இது கவர்மெண்டு முடிவு. நாங்க ஒண்ணும் செய்ய முடியாது”.
கலெக்டர் யோசித்தார்.
“நான் கூட நம்ம அய்யா தர்ணா பண்ணும் போது, எரிச்சல் தான் பட்டேன். ஆனா அவரு சொல்லுற எல்லா விசயமுமே முக்கியமான விசயமா இருக்கே. யோசிச்சி பாருங்க. நம்ம டிப்பார்ட் மெண்ட் ஏதாவது செய்யணுமே. நாம ஏன் செய்யலை”.
தாத்தா தொடர்ந்தார். “அய்யா நம்ம தாமிரபரணிதான் நமக்கு குடிக்க தண்ணீ தருது. கரண்ட் தருது. தொழிற்சாலைக்கு தண்ணீ தருது. விவசாயத்துக்கு தண்ணீர் தருது. எல்லாமே தருது. ஆமா அதுக்கு என்ன தாறோம்”.
அதிகாரிகள் அனைவருமே பேசமுடியாமல் தவித்தனர்.
கலெக்டர் தான் பேசினார். “அய்யா சொல்றது எல்லாமே உண்மை. முதல் கட்டமாக தாமிரபரணியை சுத்தப்படுத்தணும். அதுக்கு நாம நடவடிக்கை எடுக்கணும். மக்கள் கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தணும். அடுத்த வாரமே இதற்கு திரும்ப ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணணும்”.
அதிகாரிகள் அனைவரும் ஒன்று போல தலையசைத்தனர். “முதலில நாளைக்கு கழுதை, மாட்டு வண்டி, மொபைட் மணல் திருட்டு இந்த மூணுக்கும் முற்றுபுள்ளி வையுங்க”.
“சரிங்க அய்யா”.
“அய்யா பெரியவரே. தைரியமாக போங்க. நாளைக்கே நாம மணல் திருட்டை சரி பண்ணிறாலாம்”.
“சரி அய்யா”. கையெடுத்து கும்பிட்டார். தாமிரபரணி தாத்தா.
“அய்யா. இனிமே என்னைக்கு வந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க. இல்லாட்டி எத்தனை மணிக்கு என்னை பார்க்க வாறேன்னு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புங்க. நான் உங்களை நேரடியா பார்க்கிறேன்”. கலெக்டர் தன்னுடைய விசிட்டிங் கார்டை தாத்தாவிடம் கொடுத்தார்.
“நன்றி அய்யா”. கலெக்டர் போன் நம்பருக்கா விசிட்டிங்கார் டை வாங்கினார் தாத்தா. அதன் பின் வெற்றியோடு கீழே நடந்தார். தொடர்ந்து பஸ்ஸில் ஏறி ஊருக்கு போய் சேர்ந்தார். தனி மனித போராட்டம். வெற்றியும் அடைந்து விட்டார். உடன் வந்த பத்திரிக்கைகாரர்கள் எல்லாம் தாத்தாவை பாராட்டி விட்டு சென்றது அவர் மனதில் நிழாடியது.
வீட்டுக்கு வந்தவர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விசயத்தினை காளியிடமும், செல்வியிடமும் பேசினார்.
இதற்குள் இவரது தர்ணா போராட்டம் அன்றைய தொலைக்காட்சியில் மிகப்பெரிய செய்தியாக ஓடியது . மாலை பத்திரிக்கையையும் கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.
மறுநாள் அதிகாலை 5மணிக்கு ஒவ்வொரு ஆற்றங் கரைக்குள்ளும் போலிசும் வருவாய் துறையினரும் இறங்கினர். நூற்றுக்கு மேற்பட்ட கழுதையோடு வந்தவனை பிடித்தனர்.
“ஏலே கழுதையில மணல் அள்ளுற வேலையை விடு. இல்லாட்டி வெளுத்து புடவேன்”. கழுதை காரனை விரட்டினார் ஏட்டு.
“ஏட்டையா, வேணுமுன்னா என் கழுதையை பிடிச்சிட்டு போய் எப்.ஐ.ஆர் போடுங்க”.
அதிர்ந்தார் ஏட்டு.
“ஏட்டையா எங்கயாவது மணல் கடத்துனா கழுதையை போலிசுல பிடிக்க சட்டம் இருக்கா”. திமிறாக பேசினான் அவன்.
“ஏலே வெறுவாக்கெட்ட பயலை. என்னலெ சொல்லுத”.
“இல்லை உங்க சட்டத்தில கழுதையை பிடிக்க இடம் இருக்கா. மிருகங்கள் வதை சட்டத்தில உள்ள போயிருவிய”.
மிரட்டினான் கழுதை காரன்.
“இடமில்லைலே. ஆனா ஒரு இடம் இருக்குல்ல. உன் குண்டியில லத்தியால நாலு சாத்து சாத்துறேன். இதுக்கு நீ என்ன செய்ய முடியும் பாரு. சட்டம் பேசுறான் பாரு. சட்டம். என்னை பிடிச்சு உள்ள வச்சிபுடுவானாம் மூதி”.
கோபத்தினால் லத்தியால் அவன் பின்புறத்தில் நாலு சாத்து சாத்தினார்.
ஏட்டையா வலிக்கு வலிக்கு என குண்டியை தடவிக்கொண்டு ஓடினான் கழுதை காரன்.
“ஏலே எல்லா மூட்டையையும் அவிழ்ந்து போட்டுட்டு கழுதைகளை கூட்டிட்டு ஓடிரு மவனே. இல்லாட்டு உனக்கு தடா சட்டம் தான். 1 வருசம் வெளிய வரமுடியாது களி சாப்பாடுத்தான் மவனே”. என்றார்.
“சத்தம் காட்டாமல் அவன் மணல் மூட்டையை போட்டு விட்டு கழுதையை கூட்டி கொண்டு போனான்.
“ஏட்டை நீங்க எதுவும் வீடு கட்டியிருக்கிறயளா?” கான்ஸ்டபிள் கேட்டார்.
“எங்க 20 வருசமா வாடகை வீட்டிலதான் இருக்கேன்”.
“சொத்து எதுவும் சேத்து இருக்கியளா?”
“இல்லையே. பிள்ளையளுக்கு படிக்க பீஸ் கட்டவே காணமாட்டுக்கு”.
“ஆனா இப்போ போனானே கழுதை காரன். இவன் லட்சாதிபதி. ஒரு கழுதை 3 ஆயிரம் ரூபாய் 200 கழுதை வச்சிருக்கான். 6 லட்ச ரூபாய்கு அதிபதி. தினமும் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கான்”.
“பேதில போவன். ருசி கண்டவன் . பொறவு விடுவானா?” சிரித்தார் ஏட்டு.
அடுத்து மாட்டு வண்டியை தேடி போனார்கள்.
நடு ஆத்துக்குள் எந்த பயமும் இல்லாமல் வண்டிக் காரர்கள் மணலை அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தனர்.
வண்டிகாரர்களை எச்சரித்தார். “இன்னையோட இந்த கதையை மறந்திடுங்க. வண்டியில இருக்கிற மணலை தட்டிட்டு போயிருங்க”.
யாரும் பயப்படுவதாக தெரியவில்லை.
“ஏட்டையா. இன்னைக்கு வந்துட்டோம். அள்ளிட்டு போயிடுதோம். இனிமே வரமாட்டோம்”. கெஞ்சினார்கள்.
“ஏடே வம்பை இழுக்காதீய தாமிரபரணி தாத்தா நல்லா ஆப்பு வச்சிட்டாரு. மேலாதிகாரி வந்தா அவ்வளவு பேரையும் பிச்சி புடுவான். ஓடிப்போயிருங்க”.
“ஏட்டையா . பொறவு நாங்க வண்டியை இங்கனயே போட்டுட்டு ஓடிருவோம். நீங்க தான் மாட்டை கொண்டு போய் வக்கீல் வைச்சி தண்ணீ காட்டணும்”. அவர்கள் பங்குக்கு போலிசை மிரட்டினார்கள்.
“ஏலே மிரட்டுதியளா?. போட்டுட்டு போய் பாருங்களேன். நானும் விவசாயி வீட்டில இருந்த வந்தவன் தான். மாட்டை கொண்டு போய் இறை போட்டு பாக்கேன். இந்த வார சந்தையில நல்ல விலைக்கு வித்து புடுதேன். உனக்கு என்ன ரைட் இருக்கு. உனக்கு இது எப்படி சொந்தமுன்னு ரிக்கார்டு கொண்டு வா. பாப்புமாலே”. ஏட்டை விரட்டினார்.
அனைவரும் பேசமுடியாமல் அமைதியாக மாட்டு வண்டியில் இருந்த மணலை தட்டி விட்டு வெறும் வண்டியுடன் கிளம்பினர். ஆனால் தாத்தா மீது அனைவரும் கடும் கோபம் இருந்தது. “தினமும் நடக்கிற பொழைப்புல மன்னன் மண் அள்ளி போட்டுட்டானே”.
அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழு மற்றொரு பகுதிக்கு சென்றது. அங்கிருந்து அனைவரும் எம். 80 யை போட்டு விட்டு ஓடினர். விரட்டினார். ஆனால் அனைவரும் ஆற்றுக்குள் இறங்கி அந்த புறத்தில் ஓடிப்போய் முள்ளுக்காட்டுக்குள் ஓடி மறைந்தனர். சூ போட்ட காரணத்தினால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே எல்லா வண்டியையும் ஒரு லாரியில் பொறுக்கி கோட்டு போலீஸ் ஸ்டேசன் கொண்டு வந்து சேர்த்தனர்.
எல்லா வண்டியிலும் இருந்த நம்பர் பிளேட்டை பார்த்தால் அனைத்துமே டூப்ளிகேட் எண்ணாக இருந்தது.
காவல் நிலையமே அதிர்ந்தனர்.
“ஆகா. ஏதோ சிறிய திருட்டு என்று நினைத்தால். இது மிகப்பெரிய திருட்டாக அல்லவா? இருக்கிறது. இதற்கு பின்னால் நிச்சயம் ஏதோ பெரிய கும்பல் செயல்படுகிறது.
இன்ஸ்பெக்டர் சொன்னார்.
“கழுதை காரன், மாட்டு வண்டிகாரன், மொபைட்காரன் எல்லோரையும் உடனே அரஸ்ட் பண்ணி போலிஸ் ஸ்டேசன் கொண்டு வாங்க. இது சாதரண திருட்டு இல்லை. இது பின்னால பெரிய கும்பலே இருக்கு. அந்த கும்பலை முதலில கண்டு பிடிக்கணும்.
அடுத்த நிமிடம். இது குறித்த தகவல்களை எஸ்.பி ஆபிஸ்க்கும், ஆட்சியர் அலுவலகத்துக்கும் அனுப்பி விட்டு தொடர்ந்து அதிரடி வேலையில் இறங்கினார் இன்ஸ்பெக்டர்.
( நதி தொடர்ந்து பயணிக்கும்)


